சிகரட் துண்டுகளை தொழிற்சாலைகள் அகற்ற வேண்டும் : பிரான்ஸ் உத்தரவு

பாரிஸ்

புகைத்தபின் வீதியில் எறியப்படும் சிகரட் துண்டுகளை அகற்ற சிகரெட் தொழிற்சாலைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரான்ஸ் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

உலகெங்கும் புகைப் பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.   குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் மிகவும் அதிகமான பேர் புகைக்கும் பழக்கம் உடையவர்கள் ஆவார்கள்.   இவர்கள் புகைத்து விட்டு சிகரெட் துண்டுகளை போட  தலைநகர் பாரிசில் பல சாம்பல் கிண்ணங்கள் சுவறில் பதிக்கப்பட்டுள்ளன.  அது தவிர தெருவில் சிகரெட் துண்டுகளை எறிந்தால் 68 யூரோ அபராதம் விதிக்கப்படுகிறது.

ஆயினும் தெருவில் சிகரெட் துண்டுகளை போடும் பழக்கம் இந்நாட்டு மக்களிடையே குறையவில்லை.   ஒவ்வொரு வருடமும் 350 டன் எடையுள்ள சிகரெட் துண்டுகள் நாட்டில் அகற்றப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.    இவ்வாறு சிகரெட் துண்டுகள் எறியப்படுவது கடற்கரை, காடுகள், ஆற்றங்கரைகள் மற்றும் நீரில் அதிக  அளவில் நடைபெறுகின்றன.   இதனால் சுற்றுச் சூழல் மட்டுமின்றி நீர் நிலைகளில் உள்ள நீரும் மாசடைகிறது.

இதை ஒட்டி பிரான்ஸ் அரசு, “வரும் செப்டம்பர் மாதத்துக்குள் இவ்வாறு சிகரெட் துண்டுகள் எறியப்படுவது நிறுத்த சிகரெட் தொழிற்சாலைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அப்படி இல்லை எனில் அந்த தொழிற்சாலைகள் இந்த சிகரெட் துண்டுகளை அகற்றி அவற்றை அழிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.