கார்பரேட் வரியை 18% ஆக குறைக்க  இந்திய தொழிலமைப்புகள் கூட்டணி கோரிக்கை

டில்லி

கார்பரேட் வரியை 18% ஆக குறைக்க வேண்டும் என சிஐஐ என அழைக்கப்படும் இந்திய தொழிலமைப்புகள் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த முறை மோடி தலைமையிலான அரசு அமைந்த போது கார்பரேட் வரிகள் முப்பதில் இருந்து படிப்படியாக 25% வரை குறைக்கப்படும் என உறுதி அளித்தது. தற்போது ரூ.250 கோடிக்கு குறைவான வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு மட்டும் அரசு 25% கார்பரேட் வரி விதித்து வருகிறது.  மோடி அரசு இரண்டாம் முறையாக பதவியில் அமர்ந்துள்ளது.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த வருடத்துக்கான நிதி நிலை அறிக்கை தயாரிப்பதில் மும்முரமாக உள்ளார். அதில் ஒரு பகுதியாக பல தரப்பட்ட தொழிலதிபர்களிடம் இருந்து யோசனை கோரி உள்ளார். இதில் தொழிற்சாலை அமைப்பான இந்திய தொழிலமைப்பு கூட்டணியும் ஒன்றாகும். இந்த அமைப்பின் தலைவராக விக்ரம் கிர்லோஸ்கர் உள்ளார்.

விக்ரம் கிர்லோஸ்கர் செய்தியாளர்களிடம், “தற்போது பல தொழிற்சாலைகள் சரியாக இயங்குவதில்லை. எனவே அரசு நிறுவனங்களுக்கு வரும் முதலீட்டை அதிகரிக்கவும் தொழில்கள் வளர்ச்சி அடையவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முதலீட்டின் மீதான வருமானத்தின் வரிகள் அதிகமாக இருந்தால் முதலீடு குறைவாகவே இருக்கும். அதனால் அரசு வரிகளை குறைக்க வேண்டும்.

தற்போது அரசு ரூ.250 கோடிக்கு குறைவாக வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு 25% கார்பரேட் வரி விதிக்கிறது. இந்த வரி விகிதம் குறைக்கப்பட வேண்டும். எவ்வித பாகுபாடுமின்றி அனைத்து நிறுவனங்களுக்கும் கார்பரேட் வரியை 18% ஆக குறைக்க வேண்டும். இது குறித்து நாங்கள் பல ஆய்வுகளை நடத்தியபிறகே இந்த வேண்டுகோளை வைத்துள்ளோம்’ என கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.