நெட்டிசன்:
திரைப்பட வசனகர்த்தாவும் எழுத்தாளருமான ஜெயமோகன் மீது சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் சூர்யரத்னா அந்நாட்டு காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

சூர்யரத்னா
சூர்யரத்னா

சூர்யரத்னாவின் படைப்புகளை ஜெயமோகன் கடுமையாக விமர்சித்திருப்பதை அடுத்து புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து  சூர்யரத்னா தனது முகநூலில் எழுதியுள்ள பதிவு:
“ஜெயமோகன்…
1.அண்மையில், ‘பொய்யெழுத்தின் திரை’ என்ற தலைப்பில் என் ‘நான்’ சிறுகதைத் தொகுப்பு குறித்த விமர்சனத்தைப் படிக்க நேர்ந்தது. எனக்கு முதலில் தோன்றிய எண்ணம்,“Is this guy worth my time?”ஆனால் என் கவனத்தை ஈர்த்து, என்னை எழுதத் தூண்டிய விஷயம் – 1.மூவரும் சிங்கப்பூர் வளர்த்தெடுத்த பெண் எழுத்தாளர்கள். அண்மைய கால நிரந்தரவாசிகள் அல்ல. ஏன்? 2.எழுத்துலகில் தடம் பதிப்பதற்கு ஏற்கனவே பெண்கள் தடுமாறும்போது, அவர்களின் தன்னம்பிக்கையைக் குலைக்கும் வண்ணம் ஏன் இந்த கதகளி?
2. முதல் விஷயம் – உங்களுடைய விமர்சனம் ‘நான்’ நூலின் பெயரையும் என் பெயரையும் சேதப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. அதில் என்னுடைய அனுமதியின்றி என்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்த உங்களுக்கு யார் அதிகாரம் தந்தது? அதில் விமர்சிக்கப்பட்ட இன்னொரு பெண் எழுத்தாளரின் புகைப்படம் போடப்படவில்லை. இதிலிருந்து உங்களின் வக்கிர நோக்கம் என் புகைப்படத்தோடு என் பெயரைச் சேதப்படுத்துவதே ஆகும் என்பது தெளிவாகிறது. பெயர் சேதத்திற்கும் என்னுடைய அனுமதியின்றிப் புகைப்படப் பயன்பாட்டிற்கும் உங்கள் மீது சிங்கப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டேன். இதைப் பற்றிய மேற்கொண்டு எடுக்கவிருக்கும் சட்ட நடவடிக்கைகள் விரைவில் உங்களுக்குத் தெரிய வரும்.
3. இரண்டாவது விஷயம் – நான் எழுதுவது எனக்காகவும் சிங்கப்பூர் வாசகர்களுக்காகவும்தான். கூடவே, தனக்கு என்ன தேவை என்பதை என்னிடம் தெளிவாகக் கூறிவிடும் பதிப்பகம், அல்லது நிறுவனங்களுக்காகவும் எழுதுகிறேன். உங்களுக்காக அல்ல. My stories are not designed to suit your idiosyncrasy. ‘நான்’-உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் அமைந்த சிறுகதை தொகுப்பு. என் பதிப்பகத்தாருக்கும் எனக்கும் உள்ள புரிதலின்படி – எல்லா தரப்பு வாசகர்களும் படிக்கக்கூடியதாக எளிமையாக இருக்க வேண்டும். முக்கியமாக உயர்நிலைப்பள்ளி, தொடக்கக்கல்லூரி மாணவர்களிடையே துணைப்பாடப் புத்தகமாகப் பயன்படுத்துவதற்கு ஏற்ற குறுங்கதைகளாக இருக்க வேண்டும், தங்களாலும் வருங்காலத்தில் எளிமையான கதைகளைப் படைக்க முடியும் என்ற நம்பிக்கையை மாணவர்களிடையே ஊட்ட வேண்டும். இளையர்களிடையே கலந்துரையாடலுக்கும் நாடகமாக்கப்படுவதற்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும், போன்றவை எங்களின் நோக்கம்.
அதற்கு ஏற்ற வகையிலேயே இந்தக் கதைகள் எழுதப்பட்டன. அந்த இலக்கை நாங்கள் வெற்றிகரமாக அடைந்துவிட்டோம். Target Audience யார் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டு வெளியிடப்பட்ட படைப்புதான் ‘நான்’. அகராதியில் தேடித் தேடி வார்த்தைகளைப் பொறுக்கிப் போட்டு, கிலோக்கணக்கில் கனக்கும் புத்தகங்களை எழுதி, தமிழை இரண்டாம் மொழியாகப் பயிலும் மாணவர்களைப் பயமுறுத்தும் வேலையைச் செய்வதில் எனக்கு ஆர்வமில்லை. அப்படிச் செய்து பிழைப்பு நடத்துபவர்கள் யார் என்பது உங்களுக்குத் தெரியும்.
4. மூன்றாவது விஷயம் – வெளிநாட்டில் இருப்பவர்களுக்கும் சிங்கப்பூரின் வெவ்வேறு வகையான பல இன மக்களையும் கலாசாரத்தையும் வாழ்க்கை முறையையும் கொஞ்சம் சிங்கப்பூர் வரலாற்றையும் காட்டுவதற்கான ஒரு சின்ன முயற்சி என்று பலரும் சொல்லியிருக்கிறார்கள். அப்படித்தான் நானும் நினைக்கிறேன். அந்த முயற்சிக்குத்தான் விருது கிடைத்தது. விருது கொடுத்தது உங்கள் நாட்டுத் தமிழ்ப் பல்கலைக்கழகம். எனக்கு `அடிப்படை அறிவு` இல்லை என்று சொல்வதன் வழியாக அந்த விருதைக் கொடுத்தவர்களுக்கும் அந்த அறிவு இல்லை என்று சொல்ல நினைக்கிறீர்களா?
5. விமர்சனம் என்பது ஒரு படைப்பைக் கடித்துக் குதறுவது அல்ல. (அது வெறிநாய்கள் செய்யும் செயல்.) மாறாகக் குறைநிறைகளைச் சுட்டிக் காட்டி, மேம்படும் வழிகளைச் சொல்வது. ஆங்கிலத்தில், ‘constructive criticism’ என்று கூறக் கேட்டிருப்பீர்கள். உங்கள் விமர்சனத்தில் அது எங்கே?
* இந்த நாட்டு அரசும் நிறுவனங்களும் ஊக்கப்படுத்துவதால், விருதுகளும் பரிசுகளும் விரைவிலேயே சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்கு வந்துவிடுகின்றன என்றும் தமிழகத்து இலக்கிய மேதைகள் கனவு காண முடியாத பரிசுகள் என்றீர்கள். ஏன் இந்தக் காழ்ப்புணர்ச்சி? உங்கள் பாக்கெட்டிலிருந்து பத்துக்காசு குறையுதா? எங்களுக்குக் கொம்பு முளைக்குது, வால் முளைக்குது, உங்களுக்கு என்ன பிரச்சினை? அதோடு, உங்களுடைய இலக்கியப் பார்வையை எங்களுடன் இலவசமாகவா பகிர்ந்து கொள்கிறீர்கள்? எங்கள் நாட்டுப் பணம் உங்களுக்குக் கிடைத்தால் பரவாயில்லை. எங்களுக்குக் கிடைத்தால் மிளகாய்தூள் வைத்தது போல எரிகிறதா?
* நான் என்ன வாசிக்கிறேன் அல்லது வாசித்திருக்கிறேனா என்று என் செயல்களுக்கு விளக்கு பிடிப்பதுதான் உங்கள் பகுதிநேர வேலையா? நீங்கள் ஓர் அறிவுஜீவி எனில் உங்கள் அறிவை ‘மூன்று பத்து வெள்ளி’க்கு விற்றுக் கொள்ளுங்கள். உங்களிடம் நற்பெயர் வாங்குவதற்காக நான் என்னை மாற்றிக் கொள்ள முடியாது.
*“…சூர்யரத்னாவின் கதைகள் எல்லாமே நேரிடையாக நான் என ஆரம்பிக்கின்றன….” – என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். ‘நான்’ என்கிறfirst person narrator பயன்படுத்த வேண்டும் என்பது என் ஆசை. பயன்படுத்தினேன். ஒவ்வொரு ‘நானும்’ ஒரு பிரச்சினையை எதிர்நோக்கினாலும் அதிலிருந்து மீண்டு வருகிறார்கள் என்ற நம்பிக்கையை ஊட்டும் கதைகள் இவை. இவை இந்த நாட்டுக்கே உரிய language, setting, characters முதலியவற்றைக் காட்ட முயற்சித்திருக்கின்றன. இதற்குச் சிறந்த உதாரணம். நீங்கள் உதாரணம் காட்டிய அதே ‘குறையொன்றும் இல்லை’ கதைதான். சிங்கப்பூரின் பழைய ‘பூகிஸ்’ வட்டாரத்தின் வரலாற்றை மீண்டும் வாசகரின் மனக்கண் முன் நிறத்துவதே கதையின் நோக்கமாக இருந்தது. இது கூடத் தெரியாத உங்களிடம் ………….Oh wait! அடுத்த முறை Geylang வட்டாரத்தை மையப்படுத்தி ஒரு கதை எழுதுகிறேன். அது ஒரு வேளை உங்களைக் கவருமோ என்னவோ? நீங்கள் மஞ்சள் காமாலைக் கண்ணோடு இலக்கியத்தை மஞ்சள் நிறத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். வெளியே வாருங்கள், உலகம் வண்ணமயமானது.
* சினிமாக்களைத்தான் கதைக்கான கருக்களுக்கு நம்பியிருக்கிறேன் என்று நீங்கள் எந்த ஆதாரத்தில் கூறுகிறீர்கள்? ஒரு ராஜா ராணியிடம் கதையைக் குறிப்பிட்டிருந்தீர்கள். கடைசியிலே that was the best you could do? How lame! சிங்கப்பூர்ச் சூழலைப் பற்றி you know nuts! என்பதை இப்படிக் கடை போட்டுச் சொல்லியிருக்க வேண்டாம்! காரணம், இங்கே கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேல், அதிகமாக வெளிநாட்டவர்கள் குடியேறிக் கொண்டிருக்கிறார்கள். சிங்கப்பூர்க் குடிமகனாக மாறியிருந்தவர்களாக இருந்தாலும் சரி, நிரந்தரவாசியாக இருந்தாலும் சரி, இந்திய நாட்டின் தொடர்பு இருக்கும் வரை இங்குள்ள சில இந்தியப் (சிங்கப்பூர்) பெண்களுக்கு, ‘ஊர்க்காரன் வேண்டாம்’ என்ற மறுப்புணர்வு இந்தப் பயத்தின் அடிப்படையில் எழுந்ததே இக்கதை. ஆனால் அத்தகைய ஒரு சூழலை எதிர்நோக்கும் ஒரு சிங்கப்பூர்ப் பெண்ணின் தைரியம்தான் ஒரு ராஜா ராணியிடம் கதை. இந்தத் தொகுப்பில் ஒவ்வொரு கதையும் சிங்கப்பூர் வாழ்க்கையிலிருந்தும் என்னுடைய நேரடி அனுபவத்திலிருந்தும் எடுத்து எழுதப்பட்டவை. ஒவ்வொரு கதைக்கும் நீங்களாக ஏன் எதையாவது கற்பனை செய்து அர்த்தம் கூறுகிறீர்கள்? எப்போதிலிருந்து நீங்கள் என்னுடைய mouth piece ஆனீர்கள்?
* “In 2014, Jeyamohan criticized the undue attention that some women writers were cornering without having produced any literary work off merit. This generated a controversy as some activists sought to portray his remarks as misogynist…….”இணையத்தில் உங்களைப் பற்றி ஏற்கனவே வந்திருக்கும் தகவல் இது. பிரதி எடுத்து வைத்திருக்கிறேன். காவல் அதிகாரிகளிடமும் காட்டினேன். (Misogynist –‘….reflecting or exhibiting hatred, dislike, mistrust, or mistreatment of women….’). உங்களிடம் ஒரு சின்ன வேண்டுகோள் – If you have issues that you can’t handle, please don’t bring your war to my doorstep. And………
“கொக்கென்று எண்ணினாயோ கொங்கணவா?” என்று சூர்யரத்னா, தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருக்கிறார்.
இது குறித்து  மகாதேவன் என்பவர், ஜெயமோகனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “ஜெயமோகன், நீங்கள் விமர்சனம் செய்திருந்த சூர்யரத்னா என்பவர் உங்கள்மீது போலீஸில் புகார் செய்திருப்பதாக எழுதியிருந்ததை வாசித்தீர்களா? அதன் கீழே ஆல்பர்ப்பஸ் அங்கிள்ஸ்  எழுதிய கமெண்டுகளில் நீங்கள் கழுவி ஊற்றப்பட்டிருக்கிறீர்கள். வாசித்துப்பாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜெயமோகன்
ஜெயமோகன்

இதற்கு பதில் அளித்து ஜெயமோகன், தனது வலைப்பூ பக்கத்தில் எழுதியுள்ள கட்டுரை:
“சிங்கப்பூருக்குச் செல்லும்வரை அங்குள்ள கருத்துச்சூழல் குறித்து ஒரு குறிப்பிட்ட மனச்சித்திரம் என்னிடம் இருந்தது, அரசு சார்ந்த கட்டுப்பாடுகள் அங்கு மிக அதிகம்போலும் என்று. ஏனென்றால் அங்கே இலக்கியவிமர்சனம் என்பது அனேகமாக இல்லை. எல்லாமே பாராட்டுக்கள்தான். அங்குள்ளவர்கள் பாராட்டிக்கொள்வார்கள். இங்கிருந்து செல்பவர்கள்  மேலும் பாராட்டுவார்கள். ஆகவே தரம் தரமில்லாமை என்னும் பிரிவினையே இல்லை. அங்கு எழுதும் எல்லாருமே இலக்கியமேதைகள்தான். தனிப்பேச்சுக்களில் சிலர் இலக்கியமதிப்பீடுகளைச் சொல்வார்கள். பொதுமேடையில் பட்டியல்களும் பாராட்டுரைகளும் மட்டுமே.
இத்தகைய மனநிலை சலிக்காமல் எல்லா மேடைகளையும் ஆக்ரமிப்பவர்களுக்குச் சாதகமானது, ஆனால்  படைப்புத்திறன் கொண்டவர்களுக்கு எதிரானது என்பதைச் சொல்லவேண்டியதில்லை. இதற்குக்காரணம் அரசுசார்ந்த கெடுபிடிகளாக இருக்கலாமென்ற எண்ணம் எழுவது இயல்பே. ஆனால் உண்மையில்  கலை, இலக்கியத்தளத்தில் சிங்கப்பூர் அரசின் போக்கு அப்படி இல்லை என்ற எண்ணமே எனக்கு ஏற்பட்டது. அங்குள்ள அரசு சார்ந்த அமைப்புகளின் அணுகுமுறை இன்று சுதந்திரமான கலையிலக்கியச் செயல்பாடுகளுக்கு ஆதரவானதாகவே உள்ளது.
அங்குள்ள சீன , மலாய் எழுத்துக்கள் தரமானவையாகவே உள்ளன.அங்குசென்று அவ்வெழுத்துக்களை வாசித்தபோது வந்த சோர்வே சிங்கைத் தமிழிலக்கியத்தை விமர்சிக்கவேண்டுமென எண்ணவைத்தது. ஏனென்றால் சிங்கைத் தமிழிலக்கிய வளர்ச்சிக்குப் பெரும்பணம் செலவிடும் சிங்கை அரசுக்கு உண்மையில் இவர்களின் தரம் என்னவென்று தெரியாது. இங்கிருந்து செல்பவர்களும் பாராட்டிவிட்டு வருவதனால் அதை மதிப்பிடவே முடியாத நிலை. ஒட்டுமொத்தக் காரணம் விமர்சனமின்மை. சூழலில் உள்ள அச்சம். ஆனால் அதற்கு அரசு காரணம் அல்ல.
பிரச்சினை இருப்பது அங்குள்ள தமிழ்ச்சூழலில்தான். திருமதி சூர்யரத்னாவின் குறிப்பு அதற்கு மிகச்சரியான உதாரணம். அந்தக் குறிப்பை அது ஒரு சரியான உதாரணம் என்பதற்காக மட்டுமே பரிசீலிக்கலாம். இலக்கியச்செயல்பாட்டின் ஒரு பகுதியே கருத்தியல் மற்றும் வடிவம் சார்ந்த பரஸ்பர விமர்சனம் என்பதை சிங்கை எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள் உணர்ந்திருப்பதில்லை. அதை அவர்கள் தனிப்பட்ட தாக்குதல் என்றே நினைத்துக்கொள்கிறார்கள். அது தாங்கள் வகிக்கும் பதவிகள், பெற்றுக்கொள்ளும் சலுகைகளுக்கு எதிரான செயல்பாடாக எடுத்துக்கொள்கிறார்கள். இலக்கியவிமர்சனம் என்னும் துறை இருப்பதே அவர்களுக்குத்தெரியவில்லை.
விமர்சனங்கள் கோபமூட்டுவது இயல்பு. எதிர்வினை கடுமையாக இருப்பதும் இயல்பு.ஆனால் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்கள் சிலர் எளிய விமர்சனங்களுக்குக்கூட நாம் இங்கே நினைக்கக்கூட முடியாத பல தளங்களில் எதிர்வினை ஆற்றுகிறார்கள். அரசு சார்ந்த அனைத்து அமைப்புகளுக்கும் பிற எழுத்தாளர்களைப்பற்றி முறையீடுகளை அனுப்புகிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் பணியாற்றும் நிறுவனங்களுக்கு புகார்க் கடிதங்கள் அனுப்புகிறார்கள். விமர்சனத்தை தனிப்பட்ட தாக்குதலாகச் சித்தரித்து வழக்கு தொடுக்கிறார்கள். வழக்கு தொடுப்பதாக மிரட்டுகிறார்கள். சூர்யரத்னாவின் குறிப்பில் அதைக்காணலாம்.
ஆகவே சிங்கப்பூரின் சில நபர்களைப்பற்றிப் பேசவே பலர்அஞ்சுகிறார்கள். அவர்கள் புகார்கடிதங்களைக்கொண்டே சூழலை மிரட்டி வைத்திருக்கிறார்கள் என்கிறார்கள். சூர்யரத்னாவை அவர்கள்தான் தூண்டிவிடுகிறார்கள். சூர்யரத்னாவின் பதிவில் பின்னூட்டம் வழியாக அவருக்கு ஊக்கமளிக்கிறார்கள்.
இது  நிகழக்காரணம் பல அமைப்புகளில் தலைமைப்பொறுப்பில் இருப்பவர்களுக்குத் தமிழ் தெரிவதில்லை என்பதுதான். அவர்களில் சீனரும் மலாயரும் அதிகம். உண்மையில் அவர்கள் மிகுந்த  நல்லெண்ணத்துடன் தங்களிடம் வரும் புகார்களை அணுகுகிறார்கள். அந்த நல்லெண்ணத்தை இவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். திரித்தும் வளைத்தும் இவர்கள் செய்யும் புகார்களை உள்ளே நுழைந்து உண்மையை அறிய மேலே இருப்பவர்களுக்கு அவகாசமில்லை. ஆகவே சூழலை அச்சம் ஆள்கிறது. விவாதமே நிகழ்வதில்லை.
திருமதி சூர்யரத்னாவின் பதிவைப்பாருங்கள். என் விமர்சனத்தொடரை வாசிக்கும் எவரும் நான் ஒரு சிங்கப்பூர்த் தனித்தன்மையை, சிங்கப்பூர் அழகியலைத்தான் தேடுகிறேன் என்பது புரியும். அவர்  அதை நேர்மாறாகத் திரிக்கிறார். நான் அங்கு பிறந்து வளர்ந்தவர்களுக்கு எதிராகவும் அங்கு சென்று குடியேறியவர்களின் சார்பாகவும் எழுதுகிறேன் எனும் பிரிவினையை சாதுரியமாக உருவாக்குகிறார். இந்தக்காழ்ப்பு அங்கு இவரைப்போன்றவர்களால் ஊடகங்களில் சென்ற சிலவருடங்களாகப் பரப்பப்படுகிறது. இப்படி முத்திரைகுத்துவது சிங்கப்பூரில் உள்ள பிரபலமான உத்தி. நான் அங்கே பணியாற்றும்பொருட்டு சென்றிருந்தேன் என்றால் இந்தப்பழியை அஞ்சி இலக்கியம் பேசுவதையே நிறுத்திவிட்டிருப்பேன்.
இதேபோல மத, இன , பாலியல் சார்ந்த உள்ளர்த்தங்களைக் கற்பித்து அத்தனை இலக்கிய விவாதங்களையும் திரிக்க இவர்களால் முடியும். சிங்கப்பூர் அரசு பல்லின ஒற்றுமையை ஒரு முக்கியமான விழுமியமாக நினைப்பதனால் அதற்கு எதிரான செயல்பாடாக எந்த ஒரு இலக்கியப் படைப்பையும் இவர்கள் சித்தரித்துவிடுவார்கள். இவர்களால் மொத்தச்சூழலும் இறுக்கமாகிவிட்டிருக்கிறது.
சிங்கப்பூரின் அவதூறு, பதிப்புரிமைச் சட்டங்களை நண்பர்களின் உதவியுடன் வாசித்தேன். இந்தியாவின் சட்டத்தின் அதே சொற்றொடர்களுடன் கிட்டத்தட்ட நகல் போல அமைந்துள்ளன. ஆனால் இந்தியாவை விட மேலும் சுதந்திரங்களை அளிப்பதாகவும் மேலும் பல துணைவகுப்புகள் வழியாக எழுதுபவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை அளிப்பதாகவுமே அச்சட்டங்களின் நோக்கு உள்ளது. [பார்க்க:சிங்கப்பூர் அவதூறுச் சட்டம் ] அதாவது சிங்கப்பூர் சட்டப்படி நான் எழுதியது எவ்வகையிலும் குற்றம் அல்ல. புகைப்படங்களைப் பிரசுரிப்பதில்கூட  சட்டரீதியாக காப்புரிமை பெறாது பொதுவெளியில் உள்ள படங்களைபிரசுரிப்பது தவறல்ல என்றே சட்டம் சொல்கிறது.அப்படங்களை திரிப்பதும் உள்ளர்த்தம் அளிப்பதுமே குற்றம். அப்படி பிரசுரித்தால்கூட புகைப்படங்களை நீக்கும்படி கோரி அப்படி நீக்காதபட்சம் மட்டுமே புகார் அளிக்கவும் முடியும்.
இத்தகைய நல்லெண்ணமும் நெகிழ்வும் கொண்ட சட்டத்தை பயன்படுத்தி எப்படி இப்படி ஒரு மிரட்டல் விடுக்கப்படுகிறது? ஏனென்றால் அதை வைத்து பலவகையிலும்  தொந்தரவு அளிக்கமுடியும். எழுதுபவர்களின் பணியிடங்களில் சிக்கல்களை உருவாக்க முடியும்.  இந்த மனநிலை உள்ள ஒரு சூழலில் எப்படி இலக்கிய விமர்சனம் உருவாக முடியும்?
அதேசமயம் திருமதி சூர்யரத்னா என்னைப்பற்றி பயன்படுத்தியிருக்கும் சொற்கள் நேரடியான அவமதிப்பு. நாய் என்று என்னை குறிப்பிடுகிறார். விளக்குபிடித்தல் போன்ற ஆபாசவசைகளைப் பயன்படுத்துகிறார். என் தனிப்பட்ட நேர்மையை குற்றம்சாட்டுகிறார். இந்தியச்சட்டப்படி நான் வழக்கு தொடுக்கமுடியும். சிங்கப்பூரின் அனைத்து அரசுசார் அமைப்புகளுக்கும் அவ்வழக்கு சம்பந்தமான தகவல்களைத் தெரிவித்து அவரைப்பற்றி முறையீடு செய்யவும் முடியும். சட்டப்படி அவர் பதிவில் உள்ள மிகக்கீழ்த்தரமான பின்னூட்டங்களுக்கும் அவரே பொறுப்பு.
ஆனால் நாம் பொதுவாக இங்கே அதைச் செய்வதில்லை. மறைந்த பிரமிள் இலங்கையிலிருந்து இந்தியாவந்து சட்டவிரோதமாகக் குடியிருந்தவர். அவரால் வாழ்நாள் முழுக்க மிகமிகக் கடுமையாக, தனிப்பட்டமுறையில்கூட எல்லைமீறிச்சென்று, தாக்கப்பட்ட வெங்கட் சாமிநாதன் இந்திய உளவுத்துறையில் உயர்பதவியில் இருந்தவர். சாமிநாதன் ஒரு சொல் சொல்லியிருந்தால் பிரமிள் சிறை சென்றிருப்பார். சாமிநாதன் அதைச்செய்யவில்லை. பிரமிளை எதிர்த்து எழுதினார்.ஏனென்றால் அதை செய்ய ஆரம்பித்தால் இலக்கிய விவாதங்களில் நாம் அதிகார அமைப்புகளை உள்ளே இழுக்கிறோம். அதிகபட்சம் பத்து மானநஷ்ட வழக்குகள் போதும், மொத்தக் கருத்தியல் இயக்கத்தையே முடக்கிவிடலாம்.
இந்திய நீதிமன்றங்களும் மானநஷ்டவழக்குகளை பெரும்பாலும் பொருட்படுத்துவதில்லை. கருத்துச்சுதந்திரத்தின் தரப்பில் நின்றபடியே அவை அவதூறு வழக்குகளை நோக்குகின்றன. சட்டப்படி ஒரு கருத்து எப்படிப்பட்டதானாலும் தன்னளவில் அவதூறு ஆவதில்லை, அதைச் சொல்பவனின் நோக்கமே அதை அவதூறாக ஆக்குகிறது. சிங்கப்பூர் இலக்கியத்தின் மொத்தப்படைப்பிலக்கியத்தையும் நாட்கணக்காக அமர்ந்து வாசித்து எழுதிக்கொண்டிருக்கும்  தமிழகத்தின் புகழ்பெற்ற எழுத்தாளனாகிய நான்,  சூர்யரத்னா என்னும் முதிரா எழுத்தாளரின் புகழை அழிக்க சதி செய்யவேண்டியதில்லை. அதன் மூலம் அவருக்கு இழப்பு உருவாக்க முயலவும் வேண்டியதில்லை – மாறாக அவர் செய்வதுதான் ஒரு முக்கியமான எழுத்தாளனும் எழுத்தை தொழிலாகக்கொண்டவனுமாகிய என் நற்பெயரை அழித்து இழப்பை உருவாக்கும் திட்டமிட்ட குற்றநடவடிக்கை.
ஆக, செல்லுபடியாகும் ஒரு வழக்கே உண்மையில் இல்லை. ஆனால் சட்டநடவடிக்கை என மிரட்டமுடியும், தொந்தரவு அளிக்கவும் பணச்செலவு வைக்கவும் முடியும். அதைவைத்து மிரட்டி விமர்சனத்தையும் கருத்துச்செயல்பாட்டையும் முடக்க முடியும். அதையே அவர் செய்கிறார். யோசித்துப்பாருங்கள், இனி சிங்கை அரசு அழைக்கும் எவரேனும் ஏதேனும் விமர்சனக்கருத்தைச் சொல்ல துணிவார்களா? சிங்கை அரசு உருவாக்க முயலும் கருத்தியல்தளத்தையே அழிக்கும் செயல் இது. உண்மையில் அதைப்பற்றிக் கவலைப்படவேண்டியவர்கள் சிங்கப்பூர் பண்பாட்டுச்சூழல் பற்றி உண்மையான அக்கறை கொண்ட அங்குள்ளவர்கள்தான்.
இன்னும் ஒரு வேடிக்கையான விஷயத்தை வாசகர் கவனிக்கலாம்.  ஒர் எழுத்தாளர் ஒரு விருதை அரசிடமிருந்து பெற்றிருந்தார் என்றால் அதன்பின் அவரை எவரும் எவ்வகையிலும் விமர்சிக்கக்கூடாது என்கிறார்கள் சிங்கப்பூரில் சிலர். அவ்வாறு விமர்சிப்பது அந்த அரசுசார் அமைப்பை அவமதிப்பது என்று வாதிடுகிறார்கள். உடனடியாக அந்த அமைப்புகளிடம் அவர்களின் தேர்வை அந்த விமர்சகர் குற்றம்சாட்டுவதாகவும் அரசுக்கு எதிராகச் செயல்படுவதாகவும் புகார்களை அனுப்பிவிடுவார்கள். சூர்யரத்னா அதைச்செய்வதை அவரது குறிப்பில் காணலாம்.
அதாவது இந்தியச்சூழலில் வைத்துப்பார்த்தால் சாகித்ய அக்காதமி விருது பெற்ற ஒருவரை எவ்வகையில் விமர்சித்தாலும் அது சாகித்ய அக்காதமியை விமர்சிப்பது. அதற்கு நிதி அளித்த அரசை விமர்சிப்பது. ஆகவே அரசுக்கு எதிரான செயல். நடவடிக்கை வேண்டும். இந்தியாவில் இருந்துகொண்டு இந்த மனநிலையை நோக்கி நாம் சிரிக்கலாம். ஆனால் அங்கு தமிழ்ச்சூழலில் அது ஒரு முக்கியமான மிரட்டல். அரசுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை, இவர்களே செய்வது.
உண்மையில் இந்தியாவில் ஒருவர் அரசு அமைப்புகளை இப்படி தன்னை பாதுகாப்பதற்காக இழுப்பதுதான் குற்றம். அரசு சார்ந்த விருதுகளோ பரிசுகளோ அதைப்பெற்றவர்களால் ஒரு தகுதிச்சான்றாக  எங்குமே சொல்லப்படக்கூடாது.  ‘பரத்’ முதலிய பட்டங்களை பெயருக்குப்பின் சேர்ப்பதுகூட சட்டவிரோதம். அரசை அல்லது அதன் பண்பாட்டு அமைப்புகளை அதன் பரிசை பெற்றவர் தனக்கு ஆதரவாக எங்குமே மேற்கோள்காட்டக்கூடாது. ஆனால் சிங்கப்பூரில் பலர் இதைச் சொல்கிறார்கள். அங்கே எழுதும் அத்தனைபேருமே ஏதேனும் விருதுபெற்றவர்கள்தான். அப்படியென்றால் என்ன விமர்சனம் நிகழமுடியும்?
சூர்யரத்னா உள்ளிட்ட சிங்கப்பூர்வாழ் தமிழர்கள்   தமிழக எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்லும் அவமதிப்புநிறைந்த ஒரு வரி உண்டு. ‘டாலருக்காகத்தானே வந்தாய்? பொறுக்கிக்கொண்டு எங்களை பாராட்டிவிட்டுப் போகவேண்டியதுதானே?” இதை அவர் தன் முகநூல் குறிப்பிலும் சொல்லியிருப்பதைக் காணலாம். உண்மையில் தமிழ் எழுத்தாளர் பலருக்கு அவர்களின் பணம் பெரிய தொகைதான். அவர்கள் பெரும்பாலும் மேலோட்டமான பாராட்டுகளை அளித்துவிட்டு வந்துவிடுவதும் உண்மை. அந்தப்பணம் பெரிதுதான்,  ஆனால் எனக்கு அல்ல.  அங்குள்ள உயர்தர ஆசிரியரின் ஊதியம் எனக்கு அளிக்கப்பட்டாலும்கூட இரண்டுமாதக் காலம்  அங்கிருப்பது எனக்கு பொருளியல் இழப்பே. நான் அங்குவந்தது ஒரு வளர்ந்த நாட்டின் சூழலை அறிய. அங்குள்ள மாணவர்களை சந்திக்க. சர்வதேசத்தரமுள்ள வகுப்புகளை அவர்களுக்கு அளித்திருக்கிறேன்.
சூர்யரத்னாவின் அந்த முகநூல் குறிப்பு பலவகையான குற்றங்களை ஆற்றுகிறது. ஒன்று, அங்கு  அரசு அழைப்பின்பேரில் வரும்  எழுத்தாளர்களை அவமதிக்கிறது. அவர்கள் கூலிக்காக வருபவர்கள் என இழிவுசெய்கிறது. இரண்டு, சிங்கப்பூரில் உள்ள நிரந்தரவாசிகள் x குடிமகன்கள் என்னும் பிரச்சினையை தேவையில்லாமல் சமூக ஊடகங்களுக்குக் கொண்டுவந்து வெறுப்பை வளர்க்கிறது. பின்னூட்டங்களில் மிகக்கடுமையான சமூகவெறுப்பு உள்ளது, அதற்கும் அவரே பொறுப்பு. மூன்று, சிங்கப்பூர் அரசு உருவாக்க நினைக்கும் இலக்கியம் சார்ந்த பொது உரையாடலுக்கு எதிராக எழுத்தாளர்களை  பிளாக்மெயில் செய்யும் உத்தியை சட்டவிரோதமாக பயன்படுத்துகிறது. நான்கு , இந்திய ,சிங்கப்பூர் அரசுநிறுவனங்களின் பெயரை தன் தனிப்பட்ட வணிகநோக்கங்களைப் பாதுகாக்க பயன்படுத்துகிறது.
ஏன் கடுமையான விமர்சனம்? நான் முன்னரே சொல்லியிருக்கிறேன். எழுத்து முயற்சி கடும்விமர்சனத்திற்குரியது அல்ல. கனிவுடன் நோக்கப்படவேண்டியது அது. ஆனால் சூர்யரத்னாவின் எழுத்துக்கள் அவரே சொல்வதுபோல அங்கே கல்விக்கூடங்களில் முன்னுதாரணங்களாகக் கற்பிக்கப்படுகின்றன. அவர் அங்கே உயர்நிலைப்பள்ளி அளவில் இலக்கியவகுப்புகளை நடத்துகிறார். [அவர் எழுதுவதே உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்காகத்தான் எனச் சொல்கிறார். பாலியல் வன்மங்கள் கொண்ட அந்தக்கருக்களை உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் படிக்கலாமா என அங்குள்ள கல்வித்துறைதான் முடிவுசெய்யவேண்டும்]
எப்படியானாலும் அங்குள்ள மாணவர்களுக்கு முன் ஒரு முன்னுதாரணமாக நிற்கையில் அவர் இன்னும் கொஞ்சம் தன்னைத் தயார்படுத்திக்கொள்ளலாமே என்பதுமட்டும்தான் என் கருத்து. சிங்கப்பூரின் தொழில்நுட்பக் கல்வியில் சர்வதேசத்தரம் கொண்ட ஆசிரியர்கள் அன்றி எவரும் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. பண்பாட்டுக்கல்வியில் மட்டும் ஏன் முதிரா எழுத்து முன்வைக்கப்படவேண்டும் என்பது மட்டுமே என் கேள்வி. நான் சுட்டிக்காட்டுவது எழுத்தின்வழி எனக்குக் கிடைக்கும் தரமின்மையை மட்டுமே. தனிப்பட்ட ஆளுமையை அல்ல.
அத்துடன் அந்த தேசம் பெரும்பணத்தை இதற்காக அளிக்கிறது. அதைப்பெற்றுக்கொள்பவர் தன் தகுதியை பெருக்கிக்கொண்டாகவேண்டும். அதற்காக உழைக்கவேண்டும். வாசிக்கவேண்டும்.  சூர்யரத்னா எழுத ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகின்றன. பலநூல்கள் வெளிவந்துவிட்டன. முதிரா எழுத்தையே அப்படியே வருடக்கணக்காக நீட்டி ஒரு அளவுகோலாகவே ஒரு சமூகத்தின்முன் வைப்பது அந்த அரசுக்கு எதிரான செயல்பாடு.
இங்கிருந்து பொருள்நாடிச் செல்லும் எழுத்தாளர்களின் போலிப்பாராட்டு அங்குள்ள எழுத்தாளர்களை இருளிலேயே வைத்திருக்கிறது. நான் அதை உணர்ந்தபின்னரே உண்மையை உடைத்துச் சொல்லிவிடவேண்டுமென முடிவெடுத்தேன். அதை முழுமையாக விரிவாக அனைத்துக்கோணங்களிலும் நோக்கும் விமர்சனத்தொடர்மூலம் முன்வைக்கவேண்டுமென நினைத்தேன்.
அங்குள்ள சூழலை மிக நன்றாக அறிந்தபின்னரே இக்கட்டுரைத் தொடரை எழுத ஆரம்பித்தேன். முதலில் அங்குள்ள ஒட்டுமொத்த இலக்கிய மரபைச் சார்ந்து ஒரு பொதுச்சித்திரத்தை உருவாக்கவேண்டுமென எண்ணினேன். ஏற்கனவே நா.கோவிந்தசாமி, இளங்கோவன்,ஸ்ரீலட்சுமி  ஆகியோர் கூரிய விமர்சன நோக்குடன் பொதுச்சித்திரத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அவை உதிரிக்குரல்களாக நின்றுவிட்டன.. அவர்களுக்கு மேலதிகமாக நான் அளிக்கக்கூடுவது மொத்தத் தமிழிலக்கியத்தின் பின்னணியில் சிங்கப்பூர் இலக்கியத்தை மதிப்பிடுவதும் உள்ளோட்டங்களை அடையாளம் காண்பதும்தான். அதைச் செய்யாமல் விமர்சனம் முன்னகர முடியாது.
அதாவது, முதலில் சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் canon எது என வகுக்கவேண்டும். அதை பலகோணங்களிலான விவாதம் மூலமே செய்யமுடியும். நான் அவ்விவாதத்தை தொடங்கி வைக்க விரும்பினேன். எழுதுபவர் எல்லாம் எழுத்தாளர் அல்ல என அவர்களுக்குச் சொல்ல விரும்பினேன். எவர் என்ன செய்திருக்கிறார்கள் என ஒரு குணரீதியான கணிப்பு என்னுடையது. அதற்காக நாளுக்கு நான்கு நூல்கள் வீதம் நாளும் ஐந்துமணிநேரம் அமர்ந்து வாசித்தேன். எனக்களிக்கப்பட்ட பணிகளுக்கு மேலதிகமாக.
வசைகளும் பூசல்களும்தான் பதிலுக்கு வருமென நான் அறிவேன். வரட்டும். நான் எழுதவேண்டியதை எழுதி முடிக்கிறேன். அது காலத்தின் முன் இங்கு கிடக்கட்டும். அடுத்த தலைமுறை எழுந்து வரும்போது அதைப் பரிசீலிக்கட்டும். விவாதிக்கட்டும் ,விரித்தெடுக்கட்டும், தேவையென்றால் விமர்சனப்பதிலோடு தூக்கிவீசட்டும். இது முழுமையான மதிப்பீடு அல்ல என்றும் நான் அறிவேன். ஆனால் இது ஒரு ஆத்மார்த்தமான தொடக்கம். எனக்கு நேர்மையான முயற்சிகள்மேல் நம்பிக்கை உண்டு, அவை காலம்கடந்தேனும் விளைச்சலையே அளிக்கும்”  இவ்வாறு ஜெயமோகன் தெரிவித்துள்ளார்.