கார் விபத்து: சிறு காயத்துடன் தப்பினார் பிரபல திரைப்பட இயக்குநர்

பிரபல திரைப்பட இயக்குநர் கௌதம் மேனனின் கார் சென்னை அருகே  இன்று காலை விபத்துக்குள்ளானது.

காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத் தாண்டி வருவாயா உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியவர் கௌதம் மேனன்.

இன்று அதிகாலை, அவர் மாமல்லபுரத்திலிருந்து சென்னை நோக்கி தனது காரில் வந்து கொண்டிருந்தார். செம்மஞ்சேரி அருகே வந்தபோது, ஆவின் ஜங்ஷன் என்ற இடத்தில், எதிர்ப்புறம் வந்த டிப்பர் லாரியை கவனிக்காமல் காரை திரும்பியுள்ளார்.

அப்போது, லாரியும் கௌதமின் காரும் மோதியதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. விபத்து ஏற்பட்டதும் ஏர் பேக் வெளியே வந்ததால் கௌதம் சிறு காயங்களுடன் தப்பினார்.

விபத்து குறித்து, கிண்டி போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். கவுதம் தூக்க கலக்கத்தில் காரை ஓட்டி வந்ததால் லாரியை கவனிக்காததே விபத்திற்கு காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. .