டில்லி

ந்தியா மீது சீனா நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து திரை நட்சத்திரங்கள் சீன பொருட்களை விளம்பரப்படுத்தக்கூடாது என அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த மே மாதம் லடாக் இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறி முகாமிட்ட சீனப்படைகள் அங்கு இந்தியா சாலை அமைக்கும் பணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மேலும் படைகளைக் குவித்தது.   இந்தியாவும் அந்தப் பகுதியில் கடும் பதட்டம் ஏற்பட்டது.  பல சுற்றுப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு சீனா தனது ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தது.

கடந்த திங்கள் அன்று மாலை சீன ராணுவப்படைகள் திடீரென இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியது.  இந்த தாக்குதலில் இரும்புக் கம்பிகள், ஆணிகள் பதிந்த கட்டைகளை சீனப்படையினர் ஆயுதங்களாகப் பயன்படுத்தினர்.    இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிர் இழந்தனர்.  இதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு, “நாடு முழுவதும் 7 கோடி வர்த்தகர்களும், 40 ஆயிரம் வர்த்தக அமைப்புகளும் எங்கள் கூட்டமைப்பில் இணைந்துள்ளன.  ஏற்கனவே எங்கள் கூட்டமைப்பின் சார்பில் சீனப் பொருட்கள் எவை என்ற விவரத்தை வெளியிட்டுள்ளோம். அந்த சீனப் பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம் என்று வர்த்தகர்களைக் கேட்டுக் கொண்டுள்ளோம்.

பொது மக்கள் அனைவரும் சீனப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும்.  திரை நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், அக்ஷய் குமார், ஹ்ரிதிக் ரோஷன்,  மற்றும் தோனி, டெண்டுல்கர் உள்ளிட்டோர் சீனப் பொருட்களுக்கு விளம்பரம் செய்வதை நிறுத்த வேண்டும். மக்கள் அனைவரும் இந்தியனாக இருப்போம். இந்தியப் பொருட்களை வாங்குவோம் என்ற முழக்கத்தை முன்னெடுக்க வேண்டும்: என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.