பச்சமுத்து கைது விவகாரத்தில் பலரும் ஆச்சரிப்படுவது,  சினிமா பைனான்ஸியர் போத்ரா பற்றிதான்.
இதுபற்றி கூறப்படுவதாவது..
திரைப்பட தயாரிப்பாளரும், பச்சமுத்துவுக்கு நெருங்கிய சகாவுமான மதன், கடந்த மே மாதம் 29ம் தேதி கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு தலைமறைவானார்.
அவரது குடும்பம் பதறியது. விவரம் அறிந்த அத்தனை பேர் பார்வையும் பச்சமுத்துவின் பக்கம் திரும்பியது.
பச்சமுத்துவுக்கும் மதனுக்குமான நெருக்கம் அப்படி!
அது மட்டுலம்ல.. மதன் எழுதி வைத்த கடிதத்திலேயே, “என்னிடம் (மருத்துவக்கல்லூரி) Admission பணம் தந்தவர்களும், எனக்காக சினிமாவில் முதலீடு செய்தவர்கள் பயப்பட வேண்டாம். பணம் SRM நிறுவனத்திலும் mgm(ODY) நிறுவனத்திலும் safe ஆக உள்ளது. நீங்கள் அவர்களிடம் பெற்று கொள்ளலாம்.
என் வாழ்வில் எனக்கு தெரிந்த ஒரே மந்திரம் வேந்தர். எனக்கு ஒரு பெயரை கொடுத்து என்னை எந்த உலகுக்கு காட்டியவர். SRM நிறுவனம் என்றால் Admission, சினிமாவில், கட்சியில் (IJK) மதன் தான் என்று பெயரை கொடுத்தவர். என் தலைவருக்காக வாழ்ந்தேன். தலைவனால் போகிறேன்” என்று மதன் எழுதியிருந்தார்.
அப்போதுகூட இந்த விவகாரத்தில் ஏனோ பச்சமுத்துவை விசாரிக்க போலீஸுக்கு தோன்றவில்லை.

பச்சமுத்து -மதன்
பச்சமுத்து -மதன்

பிறகு ஜூன் மூன்றாம் தேதி, மதனின் தாயார் தங்கம், பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “மதன் கடந்த பல ஆண்டுகளாக எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரிக்கான மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டிருந்தார்.  அதற்காக பெறப்படும் பணத்தை முறையாக பாரிவேந்தரிடம் அளித்து வந்தார். பாரிவேந்தர் (பச்சமுத்து) மற்றும் அவரது மகன் ரவி ஆகியோருடன் ஏற்பட்ட மனக்கசப்பால் மதன் தலைமறைவாகியிருக்கலாம்.  இப்பிரச்சனைக்கு குறித்து பாரிவேந்தரிடம் பேச பலமுறை தாங்கள் முயற்சி செய்தும், அதற்கு அவர்கள் அனுமதியளிக்கவில்லை” என்று கண்ணீர் மல்க கதறினார்.
மதன் குடும்பத்தினர்
மதன் குடும்பத்தினர்

அப்போதும் மதன் விவகாரம் குறித்து, பாரிவேந்தரை காவல்துறை அணுகவே இல்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களை சந்தித்தார் திரைப்பட பைனான்ஸியர் போத்ரா. அப்போது அவர், “மொட்ட சிவா, கெட்ட சிவா” என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக பச்சமு்தது முன்னிலையில் மதன் கோடிக்கணக்கில் என்னிடம் பைனான்ஸ்  பெற்றனர்.   மூன்று மாதங்களில்  பணத்தை திருப்பி தருவதாக உறுதி பத்திரத்தில் இருவரும் கையெழுத்துயிட்டனர். ஆனால், இதுவரை அந்த பணம் வரவில்லை. இந்த விவகாரத்தில் பச்சமுத்துவும் ஈடுபட்டுள்ளதால் அவரை கைது செய்யக்கோரி காவல் துறை ஆணையரிடம்  மனு அளித்துள்ளேன்” என்றார்.
ஃபைனல் பஞ்ச் ஆக அவர் சொன்ன வார்த்தைகள்தான் மிக முக்கியம்.
“மதன். காணாமல் போய் பல மாதங்கள் ஆகியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.  பச்சமுத்துவை கைது செய்து விசாரித்தால் உண்மை நிலவரம் தெரிய வரும்” என்றார் போத்ரா.
நேற்று முன்தினம் போத்ரா சொல்ல.. இன்று பச்சமுத்துவை கைது செய்துவிட்டது போலீஸ்.
போத்ரா
போத்ரா

“மதனுக்கும் பச்சமுத்துவுக்குமான நெருக்கம், நெருடல் எல்லாம் ஊரறிந்த விசயமான இருந்தபோதும்… மதன் தனது கடிதத்திலேயே பச்சமுத்துவை குறிப்பிட்டிருந்த போதும்.. மதன் பெற்றோர் “பச்சமுத்துவுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் எங்கள் மகன் தலைமறைவாகியிருக்கலாம்” என்று கதறியபோதும்..  பச்சமுத்துவை அணுகாத காவல்துறை போத்ரா சொன்னவுடன், விசாரணையில் இறங்கி கைதும் செய்துவிட்டது. ஆக பச்சமுத்து கைதுக்குக் காரணம் இந்த போத்ராதானா” என்று ஆச்சரியப்படுகிறது திரையுலகம்.
அதே நேரம், “பிரச்சினைகள் “பேசி” முடிக்க முயன்றார்கள். “ஒப்பந்தத்துக்கு” பச்சமுத்து தயாராக இல்லாததால் கைது வரை போய்விட்டது” என்றும் சொல்கிறார்கள்.
ஆனால், “பச்சமுத்துவின் மருத்துவக்கல்லூரியில் சீட் பெற பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் தெரிவித்திருந்தார்கள். இது குறித்த வழக்கில் உயர்நீதிமன்றம், பச்சமுத்துவை ஏன் விசாரிக்கக்கூடாது என்ற கேள்வியை எழுப்பியது. இதன் அடிப்படையிலேயே அவர் விசாரிக்கப்பட்டார்” என்கிறார்கள் சட்டப்பிரமுகர்கள்.