தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும்! ஆர்.கே.செல்வமணி

சென்னை:

தொழிலாளர்களின் பாதுகாப்பை தயாரிப்பு நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று பெப்சி தலைவர்  ஆர்.கே.செல்வமணி தெரிவித்து உள்ளார்.

இந்தியன்-2 படப்பபிடிப்பின்போது நடைபெற்ற விபத்தில் 3 பேர் இறந்துள்ள நிலையில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், சினிமா தொழிலாளர்கள் கூட்டமைப்பான பெப்சி கூட்டம் அதன் தலைவர் ஆர்கே செல்வமணி தலைமையில் நடைபெற்றது. இதில்,  இனி தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தால் மட்டுமே படப்பிடிப்பு தளங்களோடு ஒப்பந்தம் செய்யப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி,   இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில்  உயிரிழந்த கிருஷ்ணன், மது ஆகியோர் ஃபெப்சி  உறுப்பினர்கள் என்றும், உயிரிழந்த சந்திரன் தயாரி்ப்பு நிர்வாக ஊழியர் சங்க நிர்வாகியாக பல ஆண்டுகள் பணியாற்றியவர் எனவும் கூறியவர்  “மிகப்பெரிய விபத்தாக முடிந்திருக்க வேண்டிய படப்பிடிப்பு தள விபத்து கடவுள் புண்ணியத்தால் சிறிய விபத்தாக முடிந்துள்ளது. காயம்பட்டவர்களில் 2 பேர் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர்.

பெப்சி கட்டடம் உருவாக முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர்  இறந்த  எஸ் ஆர் சந்திரன் என்று கூறியவர், விபத்து நடந்த பின்னர் சரியான நேரத்திற்கு அவசர ஊர்தி வந்து சேரவில்லை. பட நிறுவனம் காப்பீடு செய்துள்ளதால் இறந்தவர்களுக்கு இழப்பீடு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழ்த் திரைத்துறை அடுத்தகட்டத்திற்கு தயாராகி வருகிறது. ஆங்கில படங்களுக்கு இணையான படங்கள் தயாரிக்கும் நிலை உருவாகியுள்ளது, அதேபோல ஆங்கிலப் படங்களுக்கு இணையான பாதுகாப்பையும் வழங்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. திரைத்துறைக்கு சம்பந்தமில்லாத உபகரணங்கள் தற்போது படப்பிடிப்பில் பயன்படுத்தப்படுகிறது. சரியான உபகரணங்கள் இல்லாததால் தொழிற்சாலை உபகரணங்கள் பயன்படுத்தப்படுகிறது. அதைப் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்ப அறிவு இங்கிருக்கும் பணியாளர்களுக்கு , ஓட்டுநர்களுக்கு கிடையாது.திரைத்துறை சாராத உபகரணங்களை படப்பிடிப்புக்கு பயன்படுத்தும் போது சம்மேளனத்தின் அனுமதி பெற்ற பிறகே தொழிலாளர்கள் இனிமேல் படப்பிடிப்பில் பங்கேற்பார்கள்.

தனியார் படப்பிடிப்பு தளங்கள் பணியாளர்களின் மீது பொறுப்பு, கருணை இல்லாமல் இருக்கிறது. காலா, பிகிலை தொடர்ந்து ஈவிபி தளத்தில் இப்போது விபத்து ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பு தளத்தினர் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்துடன் ஒப்பந்தம் போட்ட பின்னரே இனி பணியாளர்கள் தொழில் செய்ய முன்வருவார்கள் என்று கூறியவர்,  அஜித்திடம் படப்பிடிப்பை தமிழகத்தில் நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் ரஜினி படமும் அடுத்த கட்டமாக தமிழகத்தில் படம்பிடிக்கப்பட உள்ளது.

80 சதவீத படப்பிடிப்பை தமிழகத்தில் நடத்த வேண்டும் என்பது எங்களது நிபந்தனையாக இனி இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.