Random image

திரைவிமர்சனம்: கலங்கலாய்  கொட்டும்   ‘அருவி’

விமர்சனம்: சந்திரலேகா

கீழே என்ன இருக்கிறது என்பதை பற்றிய கவலையற்று, தலைக்குப்புற விழுந்து கட்டுப்பாடில்லாமல் கரை புரண்டு ஓட நினைக்கும் அருவி போன்ற  நாயகி. சமூகத்தின்  வரையறைகளும், செயல்பாடுகளும் தடுப்பணைகளாக நின்று , போக்கை திசைமாற்ற முயல, அதை முறியடிக்க முட்டி மோதும் ‘அருவி’, தடை தாண்டினாளா ? தேங்கி நின்றாளா? என்பதே கதை.

‘தீவிரவாதி’ அருவியையும், அவரது தோழியையும் ஆம்புலன்சில் ஏற்றும் முதல் காட்சி, வாயில் சுருட்டுடன்  பெட்ரோல் குண்டு பற்ற வைக்கும், சோடா பாட்டில்கள் அடுக்கிய பின்புலம் என்று பட போஸ்டர்கள் கிளப்பிய எதிர்பார்ப்பில் எண்ணெய் ஊற்றுகிறது.

தொடர்ந்து வரும் விசாரணை காட்சிகள் அருவியின் வாழக்கையின் மூன்று அத்தியாயங்களை சொல்லி அவளை நமக்கு அறிமுகம் செய்து வைக்கின்றன.

அருவியை மிக அழகாக காட்டவும்,அவர் மீதான தந்தையின் பாசத்தை பதிவு செய்யவும், அதீத மெனக்கெடல் இருப்பதை பார்க்கும் போதே, ‘இவை பின்னாடி தலைகீழாக மாற போகின்றன பார்!’ என்று நம் உள்ளுணர்வு சொடக்கு போட்டு சவால் விடுகிறது. எழில் கொஞ்சும் கிராமத்தில் துவங்கும் அருவியின் பால்ய பருவம் ரொம்பவே மெல்ல்ல்ல்ல நகர்ந்து சென்னையை வந்தடைவதற்குள் இரண்டு பாட்டுகளும் வந்து போகின்றன.

பதின்பருவ அருவியின் விளையாட்டுத்தனம், சக மாணவிக்கு சானிடரி நாப்கின் கொடுக்க மாட்டேன் என்று சொல்லும் சிறு குரூரம், பணக்கார தோழியின் வாழ்க்கையை தானும் வாழ முயற்சிக்கும் தருணங்கள், பாலியல் தொடர்பான குறுகுறுப்பு பேச்சுக்கள் எல்லாம், அருவியை, All-perfect-angel ஆக காட்டாமல், நம்மை போல் ஒருத்தியாக, இயல்பாக காட்டுவது ரசிக்க வைக்கிறது.

தோழி எமிலியாக வரும் திருநங்கை பாத்திரம் அறிமுக காட்சியில் இருந்து இறுதி வரை  நட்புக்கான இலக்கண விதிகளை எந்த இடத்திலும் மீறாமல் திருத்தமாக நடித்து இருக்கிறார்.

சேனல் இயக்குனர், உதவி இயக்குனர், அரங்க உதவியாளர்களுக்கு இடையேயான உரையாடல்கள்,அவர்களின் தினசரி வாழ்வின் குறுக்குவெட்டு தோற்றமாக எதார்த்தமாக அமைந்துள்ளன.

தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தி கொண்ட தோழியின் தந்தை, தையல் கம்பெனி முதலாளி, ஆன்மிக குரு மூவரையும், ரியாலிட்டி பஞ்சாயத்து நிகழ்ச்சிக்கு, சேனல் டீமின் உதவியுடன் வரவைக்கிறார் அருவி. அங்கே ஏற்கெனவே ‘கவண்’ படத்தில் பார்த்த மாதிரியான சேனல் செட்டப் செண்டிமெண்ட் சீண்டல் காட்சிகள். ஒரு கட்டத்தில் மொத்த சேனல் அலுவலகத்தையும் துப்பாக்கி முனையில் சிறைபிடிக்கிறார். 

சீரியசான காட்சிக்கு நடுவே டூயட் வருவதை, காலம் காலமாய் பார்த்து பழகிய தமிழ் ரசிகன் மேல் கொண்ட நம்பிக்கையில், பணயக் கைதியாக வைத்து இருப்பவர் மீது பேரன்பு கொண்டு, ஆடி, பாடி, பிரியாணி தின்று, செல்ஃபி எடுத்து கொள்ளும் Stockholm syndromeத்தனமான காட்சிகள் அதன் பின்னர் வருகின்றன.

ஒரு வழியாக, அனைவருக்கும் பாவ மன்னிப்பு நல்கி , தீவிரவாத தாக்குதலோ  என்றெண்ணி தயாராக இருக்கும் காவல்துறையிடம் தம்மை ஒப்பு கொடுக்கிறார். உடல்நிலை காரணமாக சேர்க்கப்படும் மெடிக்கல் கேம்ப்பில் சில   மனதை உருக்கும் காட்சிகள். நோயும் நோய் சார்ந்த இடமுமாக இருக்கும் அந்த சூழலே கொன்று விடுமோ என்ற அச்சத்தில்
எல்லாரையும் விட்டு ஒரு தூர பயணம்.

வாழ்க்கை நிமிடங்களாக குறுகிக் கொண்டு இருக்கும் தருணத்தில், தன் ஆசைகளையும், நிராசைகளையும் பகிரும் காணொளி, அன்பு கொண்டவர்களை அருவியின் அருகே கொண்டு வருகிறது.

படத்தின் மிக முக்கிய காட்சியாக சொல்லப்படும், இடைவெளிக்கு முன்னான, அந்த நீண்ட வசனம் பலருக்கு goosebumps  தந்து இருப்பதாக தெரிகிறது. குடும்பத்தார் தன்னிடம் பேசாது இருந்த ஒதுக்கிய நிலையிலும், தம்பியிடம் பிறந்தநாள் பரிசு கேட்பதும், பணக்கார தோழியுடன் சேர்ந்து புகையும், குடியுமாக, பப் கலாச்சாரத்தை அனுபவிப்பவருமாக முந்தைய காட்சிகளில் வரும் அருவி, நுகர்வு கலாச்சாரத்தை இலுமிநாட்டி சதி என்ற ரீதியில் சாடும் போது, ஆர்.கே.நகர் வாக்காளர்கள், வோட்டுக்கு பணம் வாங்குவதை வசைபாடினால் எப்படி முரணாக இருக்குமோ அப்படியே இருக்கிறது. சமூகம் எப்படி இருக்க வேண்டும், ஹெச்ஐவி வைத்து பெரும் மருந்து வியாபாரம் நடக்கிறது என்று பாடமெடுக்கும் சமுத்திரக்கனி வகையறாவின் second generation என்றும் சொல்லலாம். குடும்ப அமைப்பு, மகிழ்ச்சி என்பவை சமூகம் ஏற்படுத்தும் அழுத்தம் என்று சொல்பவர் இறுதிக்காட்சியில் திருமணம் செய்து, குழந்தை பெற விரும்பியதை சொல்லும் போது எட்டா பழம் புளிக்கும் என்ற மனோநிலையில் சொன்னதாகவே உணர்வு ஏற்படுத்துகிறது.

விமர்சகர்கள் எல்லாம் வேண்டுமென்றோ/புரியாமலோ பேசாமல் விட்ட படத்தின் இன்னொரு மிகப்பெரிய ஓட்டை, தனக்கு துரோகம் செய்து பாலியல் அத்துமீறல் செய்தனர் என்று குற்றம் சாட்டிய இருவரை பார்த்து, தங்களுக்கு HIV பாதிப்பு ஏற்பட்டு இருக்குமோ என்று கலவரப்படும் நேரத்தில். ‘கவலைப்படாதீங்க! உங்க கூட இருக்கும் போது நான் safe-ஆ தான் இருந்தேன்’ என்று சிரித்தபடியே சொல்கிறார். அதாவது தான் பெண்கள் அணியும் காண்டம் (பயண காட்சியில் நெருப்பில் வீசுவதாக காட்டப்பட்ட காண்டம்களை எத்தனை பேர் பார்த்தார்கள் என்று தெரியவில்லை). இது என்ன மாதிரியான ரேப் என்று தலையைச் சொறிந்து கொள்ள வைத்த காட்சி.

அனைவரையும் மன்னித்து அன்பால் தண்டிப்பதே அருவியின் நோக்கம் என்றால் எதற்காக மெனக்கெட்டு டிவி நிகழ்ச்சிக்கு வர வைக்க வேண்டும் என்று புரியவில்லை. அதுவும், ஆன்மிக குருவின் மனைவி போன் நம்பர் எல்லாம் சேனல்காரர்களிடம் கொடுத்து மிரட்டி வர வைப்பதற்கு பதில் அந்த மனைவியிடமே சொல்லி இருக்கலாமே ? டிவி நிகழ்ச்சியும் நேரலை இல்லை என்பதால் அனைவர் முன் தப்பை ஒத்துக்க வைக்கும் முயற்சி என்றும் சொல்வதற்கில்லை. மொத்தத்தில், இது கதையின் மையத்தையே குழப்பும் முக்கிய முரண்.

அப்பாவின் சிகிச்சைக்காக, தையல் கம்பெனி முதலாளியிடம் பாலியல் உறவு கொண்டு, பணம் பெற்ற அருவி, அதை ஏற்க குடும்பம் மறுத்தவுடன், அந்த பணத்தில் தோழியுடன் உல்லாச பயணம் செல்கிறார் என்னும் போது அந்த முதலாளி மீது எந்த நியாய தர்மத்தின் அடிப்படையில் துரோக குற்றச்சாட்டு வைக்கிறார் என்பதும் விளங்கவில்லை. இது கதாபாத்திர படைப்பில் இருக்கும் முரண்.

குடும்பத்தார் தொடர்பே இல்லாத அருவிக்கு அப்பாவின் ஹார்ட் அட்டாக் செய்தி சொன்னது யார்? இரண்டாம் உலக போர் காலத்து துப்பாக்கியை வைத்து எந்த முன் பயிற்சியும் இல்லாமல் எப்படி சரியாக சுடுகிறார்? சுயமாக சிறுநீர் கழிக்க கூட முடியாதவர், ஜீப்பில் தான் பயணப்பட முடியும் என்று   என்னும் கரடுமுரடான பிரதேசத்துக்கு போனது எப்படி ? கையில் காசு இல்லாதவருக்கு ஹனிமூன் காட்டேஜ்கள் போல ரம்மிய தோற்றம் தரும்  குடிலில் வசிப்பது எப்படி ? இன்டர்நெட் வசதியுடன் ஃபோன் கிடைத்தது எப்படி என்று பெரிதும் சின்னதுமாக பல எப்படிகள் கேட்பதற்கு உண்டு.இவை காட்சியமைப்பில் உள்ள முரண்கள்.

விமர்சனம்: சந்திரலேகா

எய்ட்ஸ் பாதித்த நாயகி, டிவி நிகழ்ச்சியில் பங்கேற்பு, அனைவரும் ஒன்றுகூடி அன்பு பாராட்டும் இறுதிக்காட்சி என ஹாலிவுட் Philadelphia மற்றும் எகிப்திய Asmaaவின் தாக்கம் உறுதியாக அருவியில் உண்டு.

இந்து பெண் கடவுள் தோற்றத்தில் கையில் மெஷின் கன்னுடனான போஸ்டர்,  Zee டிவியின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மற்றும் அதன் தொகுப்பாளர் லக்ஷ்மி ராமகிருஷ்ணனை ஒட்டிய காட்சியமைப்பு, நடிகர் விஜயை வாரி வசனம், பாபா படத்துக்கு பிரச்சினை பண்ணிய கட்சியை சார்ந்தவராக, தையல் கம்பெனி முதலாளியை காண்பித்து இருப்பது என்று படத்திற்கு இலவச பப்ளிசிட்டி கிடைப்பதற்கான வேலைகளையும் நிறைய செய்து இருக்கின்றனர்.அந்த உழைப்பை, திரைக்கதையை செழுமைப்படுத்துவதில் காட்டி இருக்கலாம்.

காட்சி அழகியல், தமிழ் சினிமாவில் பேசப்படாத கதைக்களம், ஒன்றரை மணி நேர குறும்படமாக வெளியீடு, நாயகி அதிதியின் அற்புதமான நடிப்பு என்று, 2017-ஆம் வருடம் வெளியாகி உள்ள குறிப்பிடத்தக்க தமிழ் திரைப்படங்கள் வரிசையில் கண்டிப்பாக இடம் பிடிக்கும் தகுதி ‘அருவி’க்கு நிறையவே இருக்கிறது. தமிழ் சினிமாவில், புதிய செய்திகளை பேச, புதிய விஷயங்களை முயற்சிக்க நல்லதொரு ஆரம்பம் என்று சொல்லலாம்..

ஆனால், பிரபல ரிவியூவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தில் சொல்வது போல, மானுடத்தை உய்விக்க வந்தவளா அருவி என்றால், இல்லை என்பதே பதில்.