திரைவிமர்சனம்: செக்கச்சிவந்த வானம்

மாஸ் நடிகர்களைவிட க்ளாஸ் மணிரத்தினத்தின் படத்துக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும். அதுவும் விஜய் சேதுபதி, அரவிந்சாமி, சிம்பு கூட்டணி.

ஆகவே ஏக எதிர்பார்ப்பு! எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா செக்கச்சிவந்தவானம்?

முதலில் கதையைப் பார்ப்போம்.

பிரகாஷ்ராஜ் பெரிய தாதா.  அவரது மகன்கள்  அரவிந்த்சாமி, அருண்விஜய், சிம்பு ஆகியோர்.  அரவிந்த்சாமி அப்பாவுக்கு உதவியாக தாதா வேலை செய்துவருகிறார். அருண்விஜய், துபாயில் தொழில் செய்கிறார். சிம்புவுக்கு வேலை, செர்பியாவில் துப்பாக்கி, ஆயுதக் கடத்தல் செய்வது.

இந்த நிலையில் அப்பா பிரகாஷ்ராஜை குண்டு வைத்து கொல்ல முயற்சி நடக்கறது. அதில் தப்பிக்கும் பிரகாஷ்ராஜ் பிறகு மாரடைப்பில் இறக்கிறார். அவரது இடத்தை மூத்த மகன் அரவிந்த்சாமி பிடித்துவிடுகிறார்.  இதனால், ஏமாற்றமடையும் தம்பிகள் அருண்விஜய், சிம்பு ஆகியோர் அரவிந்த்சாமிக்கு எதிராக களம் இறங்குகிறார்கள்.

அப்பா பிரகாஷ் இடத்தை அரவிந்த்சாமி தக்க வைத்துக் கொண்டாரா, இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

எத்தனையே தாதா படங்கள் தமிழில் வந்திருந்தாலும் நாயகனுக்கு தனியிடம் உண்டு அல்லவா.. அந்தப் படத்தை அளித்த மணிரத்தினத்தின் “தாதா” படம் என்பதால், எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.

தவிர இந்தப் படத்தை நாயகனின் தொடர்ச்சி என்றும் சொல்லலாம்.

ஆனால் எதிர்பார்ப்பை பொய்யாக்கிவிட்டார் இயக்குநர் மணிரத்தினம்.

 

மணிரத்தினம்

தாதா பிரகாஷ்ராஜ் மரணடைவதற்கு முன் தன்னைக் கொல்ல முயற்சித்தது யார் என்ற உண்மையை சொன்ன போதே படத்தின் சஸ்பென்ஸ் உடைந்துவிடுகிறது.  ஆகவே  அவருடைய இடத்தைப் பிடிக்க மகன்கள் போட்டி போடுவதை முழு நீளக்கதையாக சொல்வதால் அலுப்புதட்டுகிறது.

தவிர.. அப்பா பிரகாஷ்ராஜ் குண்டடிபட்டு சாகக் கிடக்க, மகன் சிம்புவை செர்பியாவில் அறிமுகம் செய்யும் காட்சி எரிச்சலூட்டுகிறது.

நாயகன் தாதா படமாக இருந்தாலும் துப்பாக்கிச் சத்தம் குறைவு. ஆனால் இதில் மற்ற தாதா தமிழ்ப் படங்களைப் போலவே துப்பாக்கிச் சத்தம் காதைப் பிளக்கிறது.

நடிப்பைப் பொறுத்தவரை, அரவிந்த்சாமி தன் இயல்பில் வழக்கம்போல் நடித்திருக்கிறார். ஒட்ட வெட்டப்பட்ட முடி, ரஃப்பான ஆடை… ஆனாலும் அவரை தாதாவாக ஏற்கமுடியவில்லை. என்ன செய்ய.. அந்த பிஞ்சு முகம் தடுக்கிறதே!

(மனைவி ஜோதிகாவோடு, கூடுதல் இணைப்பாக அதிதி ராவ் ஹைதரியும் அரவிந்த் சாமிக்கு இருக்கிறார்கள். ஆனாலும் “இவரு ரொம்ப நல்ல மனுசன்டா” என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது!)

சிம்புவைப்பொ பொறுத்தவரை அவருக்கு ஏற்ற கதாபாத்திரம். தவிர தனது காட்சிகளை அவரே இயக்கிக்கொண்டாரோ என்று தோன்றுகிறது. மணிரத்தினத்தின் பாணியிலிருந்து விலகி, வழக்கம்போல தனது பாணியில், “நான் யார் மேலயும்  அன்பு வைக்கிறதில்லை, அப்புறம் அவங்க பிரிஞ்சா  தாங்க முடியறதில்ல” என்கிற ரீதியில் வசனம் பேசுகிறார்.

ஜோதிகா

அதிதியை மிரட்டுகிற காட்சியிலும், தாய்ப் பாசத்துக்கு ஏங்கும் காட்சியிலும் மட்டுமே ஈர்க்கிறார்.

பிஸினஸ் மேன் தோற்றத்தில் வருகிறார் அருண் விஜய். கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார். தன்னை அடிக்க வந்த அரவிந்த்சாமி அடியாட்களிடமே தனது பிசினஸ் திறமையைக் காட்டி ரசிக்கவைக்கிறார்.

ஏ.ஆர்.ரகுமான்

ரசிகர்களில் ஏகோபித்த எதிர்பார்ப்பு விஜய் சேதுபதியிடம்தான்.  அவருக்கு தனக்கு ஏற்ற அதிரடி கேரக்டர் என்பதால் புகுந்துவிளையாடுகிறார்.

ஜோதிகா, அதிதிராவ் ஹைதரி, ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா எரப்பா ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். அவ்வளவுதான்.

பிரகாஷ்ராஜ், ஜெயசுதா ஆகியோரின் நடிப்பு இயல்பு.

ஏ.ஆர்.ரகுமான் இசை என்று டைட்டிலில் பார்த்த நினைவு.

சாயம்போன செக்கச் சிவந்த வானம்…!

கார்ட்டூன் கேலரி