Random image

சினிமா விமர்சனம் : இந்திரஜித்

”மயிருள்ள சீமாட்டி அவிழ்த்தும் விடலாம் அள்ளியும் முடியலாம்”  என்கிற கணக்காக, அப்பா பெரிய தயாரிப்பாளர் என்பதால் மகன் எப்போது வேண்டுமானலும் எப்படி வேண்டுமானாலும் படம் எடுக்கலாம்தானே!

கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்பு ஏ.ஆர்.ரகுமானின் இசை, பிரபல இயக்குனர் பாக்கியராஜின் மகன் கதாநாயகனாக அறிமுகம் என்று பயங்கர ஆர்ப்பாட்டத்துடன் இயக்குனராக அறிமுகமானவர் கலைப்புலி தாணுவின் மகன் கலாபிரபு. ’சக்கரகட்டி’ என்கிற அந்த படத்தின் பாடல்கள் மட்டுமே ஹிட்டானது.

பத்தாண்டுகள் கழித்து ’இந்திரஜித்’ மூலம் திரும்ப வந்துள்ளார் இயக்குனர் கலாபிரபு.

அதென்ன இந்திரஜித்?

கடந்தாண்டு ஒரு படத்திற்கு ’சிகண்டி’ என்று தலைப்பு வைத்திருந்ததை அறிந்து அந்த படத்தின் இயக்குனர் மீது மரியாதை ஏற்பட்டது. காரணம், சிகண்டி என்கிற தலைப்பிற்கு அவர் கொடுத்த விளக்கம்தான். ”மஹா பாரதத்தில் ’சிகண்டி’ என்கிற பாத்திரத்தை  முன்னிருத்தி பீஷ்மர் கொல்லப்படுவது போல இந்த படத்தின் ஹீரோவும் இன்னொருவர் பின்னணியிலிருந்து எதிரிகளை வெற்றி கொள்வார்”  .என்பது போல ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். ஆனால் அந்த படம் வேறொரு பெயரில் வெளிவந்தது. ( அச்சமின்றி ) .

அதே போலதான் ராவணன் மாதிரி வெயிட்டான கை ஒருவரின் மகன் தான் ஹீரோ கேரக்டர். அதனால்தான் இந்திரஜித்தாக்கும் என்று ஓவராக யூகித்திருந்தேன். நாங்கள் அவ்வளவெல்லாம் வொர்த்தில்லை ஜஸ்ட் ஒரு டைட்டில் அவ்வளவுதான் என்கிறார்கள்.

ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு விண்வெளியிலிருந்து வந்து  விழுந்த ஒரு விண்கல் துண்டு அபூர்வமான மூலிகைத் தன்மை வாய்ந்ததாக இருப்பதை நம் முன்னோர்கள் கண்டறிந்திருக்கிறார்களாம். அந்த கல்துண்டின் மருத்துவ மகிமையை அறிந்த தொல்பொருள் ஆராய்ச்சித் துறையை சேர்ந்த பேராசிரியர் ஒருவர், அதனை நான்காண்டுகளாக மெனக்கெட்டுத் தேடிக் கொண்டிருக்கிறார். அதனைக் கண்டுபிடித்தால் அடுத்த நானூறு ஆண்டுகளுக்கு நோயில்லாத உலகை உருவாக்கலாமாம். அப்படி ஒரு நல்ல காரியத்தை செய்யலாம் என்றால் செய்யச் சொல்லி யார் விடுகிறார்கள். அதற்குத் தடையாக வில்லனாக அவருடைய மாணவர் ஒருவரே வந்து விடுகிறார். அந்த முன்னாள் மாணவர்தான் தொல்லியல் துறையின் இயக்குனர் / தலைவரும் கூட. அவர் அதைக் கைப்பற்றி…. வேறென்ன வெளி நாடுகளுக்கு விற்று காசாக்க நினைக்கிறார்.  இந்த சூழலில் பேராசிரியரின் உறவினராக அவர் வீட்டுக்கு வருகிறார் ஹீரோ கவுதம் கார்த்திக். பேராசிரியரின் நல்ல முயற்சிக்கு துணையாக இருந்து அந்த விண்கல் துண்டைத் தேடி பயணமாகிறார்கள். அந்த விண்கல் எங்கே இருக்கிறது? கிடைத்தா?

இது தான் இந்திரஜித். ’இண்டியான ஜோன்ஸ்’ போல ஒரு படம் எடுக்க நினைத்து ’தங்கமலை ரகசியம்’ போல ஆகிவிட்டிருக்கிறது.

’நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களில்லை’ என்கிற பீஜேபியின் நவீன கோட்பாட்டை யார் நம்புகிறார்களோ இல்லையோ தமிழ் சினிமா இயக்குனர்கள் தீர்க்கமாக நம்புகிறார்கள் போல. அதனால்தான் வரலாறு , புராண, இதிகாச கதைகளில் கிடைக்கும் மனித குல மீட்சிக்குண்டான எல்லா தகவல்களையும் கதைகளாக்குகிறார்கள். அந்த வகையில் இந்திரஜித் இன்னொரு ஏழாம் அறிவு. அதாவது முன்னோர் பெருமை பேசுவதில் மட்டும்.

விண்கல் குறித்த சுவாரசியமான தகவல்களுடன் தொடங்குகிறது படம், கவுதம் கார்த்தியின் துள்ளலான அறிமுகமும் அவருடைய துறு துறு பேச்சும் இதுவொரு சுவாரசியமான படம்தான் போல என்கிற நினைப்பை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து வில்லனின் அறிமுகமும் கவுதமின் புத்திசாலித்தனமான நடவடிக்கைகளும் அந்த நம்பிக்கையை ஓரளவுக்குத் தக்க வைத்துக் கொண்டேயிருக்கிறது.

ஆனால், திடீரென ஒரு மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டு விடுகிறது. நமக்கல்ல… இயக்குனருக்கு. அதாவது நாம் எடுத்துக் கொண்டிருப்பது சீரியஸ் படமா இல்லை காமெடி படமா என்கிற குழப்பம். அதன் விளைவாகத்தான் எம்.எஸ் பாஸ்கர் வந்ததும் படம் சிரித்து விடுகிறது. இடைவேளைக்குப் பிறகு அவ்வப்போது சிரிப்பு மூட்டுவதும் திடீரென சீரியஸ் ஆவதுமாக ஒரே கன்ஃபியூஸனாகவே இருந்து ஒரு வழியாக படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர்.

படத்தின் பிளஸ் கண்டிப்பாக கவுதம் கார்த்திக்.  குறும்பு, வாய்க்கொழுப்பு, எதையும் அசட்டையுடன் ஆனால் கொஞ்சம் புத்திசாலித்தனத்துடன் அணுகுவது என்கிற நவீன பையன்களுக்கேயுண்டான குணங்களுடன் அழகாகப் பொருந்திப் போகிறார். சமீபமாய் திரையுலகில் ’ஏ’டாகூட ஹீரோ என்று நற்பெயர் எடுத்திருப்பவர் வேறு. இதிலும் சட்டையைக் கழட்டி பேண்ட்டைக் கழட்டி ஜ… (நல்ல வேளை இல்லை.) ’ஹர ஹர மஹாதேவகி’ என்று தியேட்டரையே கத்த விடுகிறார். இந்த மாதிரி ஒரு ‘நல்ல’ புள்ளையைப் போய் கல்லைக்கட்டி ’கடல்’லில் தள்ளிவிட்டு தத்தளிக்க வைத்தாரே மணி சார்?

கவுதமிற்கு அடுத்து கவனிக்க வைப்பது வசனங்கள். படம் முழுக்கவே போரடித்து விடாதவாறு ஓரளவு சுவாரசியமாகவே எழுதியிருக்கிறார் இயக்குனர். “ அதிகாரம் மனசு வச்சா நல்லவனைக் கெட்டவனாக்கும் கெட்டவனை நல்லவனாக்கும்” என்பதாகவும் ”கெட்டவனுக்கு நல்லவன் கெட்டவனாகத்தான் தெரிவான்” என கவனிக்க வைக்கிறார். குறிப்பாக க்ளைமேக்சில் அந்த அதிசயக் கல்லைத் தூக்கி வில்லனிடம் வீசி விட்டு கவுதம் பேசும் வசனம் சிறப்பாக இருக்கிறது ( நீ கெட்டவன்னா உன்ன துரத்துறவன் கண்டிப்பா நல்லவனாத்தான் இருப்பான்) இத்தனை நல்லவன் கெட்டவன் வருகிறதே என பயப்பட வேண்டாம். மற்ற உரையாடல்களும் போரடிக்காமலே இருக்கின்றன. ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் பேசும் நிறைய வசனங்களுக்கு தமிழாக்கம் போடவில்லை. என்பதுதான் குறை.

அடுத்ததாக குறிப்பிடப்பட வேண்டியவர்கள் வில்லன்களாக வரும் இருவரும். அதிலும் ஹைடெக் வில்லனாக வரும் சுதன்ஷு பாண்டே பார்வையாலேயே வில்லத்தனம் காட்டுகிறார். அப்புறம் பேராசிரியராக நடித்திருக்கும் அந்த நடிகர். எத்தனை படங்களில் வந்தாலும் பேரே தெரிய மாட்டேன்கிறது. (மாற்றானில் சூர்யாவின் அப்பாவாக கெட்ட சயிண்டிஸ்ட்டாக வருவாரே…) தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரர் எதற்கோ வருகிறார். வந்து தன் சகோதரருடனான சொந்த கதையைச் சொல்லிச் செல்கிறார்.

மற்றபடி எம்.எஸ். பாஸ்கர் சில இடங்களில் சீரியஸாக பேசி சிவாஜி போல சிரித்து, சிரிக்க வைக்கிறார். ஒவ்வொருவரின் பெயர்களைக் கேட்கும் போதும் அவர் அடிக்கும் கமென்ட்கள் கொஞ்சூண்டு புன்னகைக்க வைக்கின்றன.

அப்புறம் கதாநாயகிகள். கோவாவில் கவுதமின் அத்தைப் பெண்ணாக வரும் பெண்ணை டிரெஸ்செல்லாம் மாற்ற வைத்து விட்டு பிறகு, அம்போவென அங்கேயே அப்படியே விட்டு விட்டு ஆண்கள் மட்டும் அருணாச்சல பிரதேசம் நோக்கிக் போகும் போது, அடேய்களா… கீரோயின் இல்லாம காட்டுப்பகுதிக்கு போறிங்களே என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய நினைக்கும் நம் போராட்ட குணத்தை இன்னொரு கீரோயினை அறிமுகப்படுத்துவதன் மூலம் அடக்கி ஒடுக்குகிறார்கள். நமக்கும் ஹப்பாடா என்றிருக்கிறது. உதயம் NH4 ல் வருவாரே ஒரு அழகுப் பெண். ( யாரோ இவன்.. என்கிற பாடலை மறந்திருக்க மாட்டீர்கள்) அவர்தான் செகண்ட் ஆஃப் கதாநாயகி.

ஓ…மை காட்… இரண்டு ஹீரோயின்கள் இருந்துமே ஒரே ஒரு டூயட் கூட இல்லை. தமிழ் சினிமா மாறிக் கொண்டிருக்கிறதுதான்.

இளமை ததும்பும் துள்ளலான பின்னணி இசையில் அட்டகாசம் செய்திருக்கிறார் இசையமைப்பாளர் கே.பி. சில காட்சிகளில் இசை புராதன மன நிலையை உண்டு பண்ணுகிறது. பாடல்கள் ரசிக்கும்படியாகவே இருக்கின்றன.

ராசாமதியின் ( அறிவுமதியின் மகன் ) படப்பதிவு பாராட்டும் படியாக இருக்கிறது. அருணாச்சலப் பிரதேசத்தின் காட்டுப் பகுதிகளில் நுழைந்து வெளி வருகிறது. ( அ. பிரதேசம் தானா?)

எடிட்டிங்கில் சில காட்சிகளை அகற்றியிருக்கலாம். குறிப்பாக கூட இருந்தே குழி பறிக்கும் ஒருவனைக் கையும் கணினியுமாகப் பிடித்து, அடித்து துரத்திய பிறகும் அவனைக் கூடவே வைத்திருப்பது போன்றதான காட்சிகள். இயக்குனரின் பொறுப்பற்ற தனத்திற்கு  எடிட்டர் என்ன செய்வார் பாவம்.. ஆனால், அந்த க்ளைமேக்ஸ் சர்ப்ரைசுக்காக இயக்குனரை மன்னித்து விடலாம்.

ஏன் இந்திரஜித் என்று குழம்பிக் கொண்டிருந்தேனில்லையா? இராமாயண இந்திரஜித் மேகத்தில் மறைந்து மாயாஜாலம் காட்டுபவன். மேகநாதன் என்றும் அவனுக்குப் பெயருண்டு. கவுதமும் மலையிலிருந்து குதித்து, ஆற்றில் விழுந்து, குகைகளில் நுழைந்து, எம்ஜிஆர் போல ஆல மர விழுதுகளில் தாவித்தாவி…. சாகசம் செய்து, மாய வித்தைகள் செய்கிறார். ஒரு வேளை அதற்காக இருக்குமோ.

மொத்தத்தில் இந்த படம் ஏ.ஆர். முருகதாஸ், கவுதம் மேனன், கே.எஸ். ரவிக்குமார், பேரரசு, ராம நாராயணன் எல்லோரும் ஒண்ணா சேர்ந்து இயக்கியது போல இருக்கிறது.

ஒரு புராதன கல். அது அதிசய சக்தி வாய்ந்தது. அது கிடைத்தால் நோய் நொடி போக்கும்… அதை தேடும் ஒரு கூட்டம்….. இதெல்லாம் ஓக்கே ஆனால் எதற்கு நடுவில் மாவோயிஸ்ட்டுகள்? அவர்களெல்லாம் யார் எதற்காக போராடுகிறார்கள் என்கிற செய்திகளை எல்லாம் நம்மூர் செய்தித்தாள்கள் தரும் ஒன்லைன் செய்திகளிலிருந்தோ அல்லது ரோட்டில் போகும் யாரோ ’தேஷ்பக்தாஸ்’களிடமிருந்தோ போகிற போக்கில் திரட்டியிருக்கிறார் இயக்குனர்.

மாவோயிஸ்ட்டுகள் குறித்த உண்மைத் தரவுகளை சேகரிக்கும் அளவுக்கு அறிவெல்லாம் இருந்திருந்தால், தொல்லியல் துறை தொடர்பான ஒரு கதையில் இந்திய அரசின் தொல்லியல் துறை நடத்தும் ’கீழடி’ அராஜகங்களையெல்லாம் குறித்து பேசியிருப்பார்தானே!.

அதுசரி… பழங்காலத்து ஓலைச்சுவடிகளையெல்லாம் ’தீக்‌ஷிதர்’கள்தான் சேகரித்து வைத்திருப்பார்கள் என்கிற பொதுப்புத்தி மன நிலையிலிருப்பவர்களிடம் வேறெதை எதிர்ப்பார்க்க முடியும்.?

இதில் என்னவொரு நகைமுரண் என்றால் இயக்குனரின் அப்பா ஒரு தீவிர தமிழ்ப் பற்றாளர். விடுதலைப் போராட்ட இயக்கம் ஒன்றின் முன்னாள் தீவிர ஆதரவாளர்.

அப்பாவுக்குப் பிள்ளை…

-அதீதன் திருவாசகம்   .

 

 

You may have missed