திரைப்பட விமர்சனம் :  களவாடிய பொழுதுகள்

ழகி படம் தந்த தங்கர்பச்சானை மறக்க முடியுமா? எத்தனை ஈர்ப்பான படம் அது!

சரி அழகிக்கு அடுத்து என்ன என்பதை ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்தபோது, எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் ’தலை கீழ் விகிதங்கள்’ நாவலை கதையாக எடுத்துக் கொண்டார். சரி, அடுத்து என்ன என்ற போது ’எவளோ ஒருத்தியின் கடிதம்’ என்கிற வெளி நாட்டு நாவலை ’தென்றல்’ என்கிற பெயரில் எடுத்தார்.. ம்ம்..அப்புறம் வேற என்ற போது, ஒரு மலையாள படத்தில் சரணடைந்தார்  ”சிந்தாவிஷ்டாய சியாமளம்”, ’சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி’யானது. பிற்கு பள்ளிக் கூடம் அம்மாவின் கைபேசி என்று அலைந்தவர் மறுபடியும் தன்னுடைய முதல் படத்திற்கே வந்து நிற்கிறார்.

ஆமாம், ’அழகி’யின் இன்னொரு வடிவம்தான் ’களவாடிய பொழுதுகள்’. ’அழகி’யில் முன்னாள் காதலி வறுமையில் வாடுபவராக இருப்பார். இதில் முன்னாள் காதலர். அவ்வளவுதான். அத்துடன் தங்கரின் வெறும் வாய்க் கொள்கையான தமிழ், தமிழர் நலன், பெரியார் ப்ளா..ப்ளா.. ஆகிய முழக்கங்கள் எல்லாம் இதிலும் உண்டு.

அடிப்படையில் ஒரு எழுத்தாளரான தங்கர் பச்சான் தன்னுடைய கல்வெட்டு என்கிற சிறுகதையைத்தான் ’அழகி’யாக்கிருந்தார். மறுபடியும் தன்னுடைய ’சறுகுகள்’ என்கிற கதையையே களவாடிய பொழுதுகளாக்கியிருக்கிறார். ஓ…. இடையில் அவர் தன்னுடைய  ஒனபது ரூபாய் நோட்டு நாவலை அதே பெயரில் படமாக்கியிருந்தது மறந்து விட்டது. அதுவும் ஒரு நல்ல உணர்வுள்ள படைப்புதான். எதற்கிந்த வரலாறென்றால் தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல ‘அழகி’யைத் தந்தவராச்சே என்பதற்காகத்தான்.

சரி இனி களவாடிய பொழுதுகள். கவித்துவமான தலைப்பு. பாராட்டுக்கள்.

ஈரோட்டில் கால் டாக்சி டிரைவராக இருக்கும் பிரபுதேவா,  சாலை விபத்தொன்றில் சிக்கும் பிரகாஷ்ராஜை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறார். ஒரு நாள் முழுக்க அருகில் இருந்து கவனித்துக் கொள்கிறார். விபத்து செய்தியறிந்த பிரகாஷின் மனைவியான  பூமிகா மருத்துவமனை வருகிறார். பூமிகாவைப் பார்க்கும் பிரபுதேவா யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் நைசாக கிளம்பிப் போய் விடுகிறார். பிறகு பிரகாஷின் வற்புறுத்தலின் பேரில் பூமிகா, தன் கணவரைக் காப்பாற்றியவர் யாரென விசாரித்து அவரைத் தேடிப் போனால். அவர் பூமிகாவின் முன்னாள் காதலராக இருந்தவர்.

தன்னுடைய முன்னாள் காதலியின் கணவரைத் தான் விபத்திலிருந்து காப்பாற்றியிருக்கிறோம் என்பதை அறிந்துதான் பிரபு தேவாவும் மருத்துவமனையிலிருந்து சொல்லிக் கொள்ளாமல் சென்று விடுகிறார்

.அழகியில் முன்னாள் காதலி ஏழ்மையில் இருந்தார். இதில் காதலர் ஏழ்மையான டாக்சி டிரைவர். அழகியில் எழையான முன்னாள் காதலிக்கு நிறைய உதவிகள் செய்வார் பார்த்திபன். இதில் முன்னாள் காதலருக்கு நிறைய பண உதவி செய்கிறார் காதலியான பூமிகா. இப்படி நிறைய விஷயங்களை தன்னுடைய அழகி உள்ளிட்ட பல படங்களிலிருந்தே எடுத்துக் பிங்கி பாங்கி போட்டிருக்கிறார்.

அழகியில் தொடாத இன்னொரு விஷயத்தை இதில் தொடுகிறார். பழைய காதலிக்கு இன்னும் குழந்தையில்லை என்பது. படத்தின் இந்த பகுதியை மிகுந்த கவனமாகக் கையாண்டிருப்பது சிறப்பு.

இவ்வளவு வருடங்கள் கடந்து தாமதமாக இந்த படம் வந்தாலும் கூட அழகியின் நினைவிலிருந்து தப்பிக்க முடியவில்லை. பேசாமல் அழகி-2 என்றே தலைப்பு வைத்திருக்கலாம்.

அதனால் தான் சொன்னேன் பல இயக்குனர்களிடம் புதிய புதிய கதைகள் இல்லை. தங்கரும் அந்த பட்டியலில் வருபவர்தான். அவர் திரும்ப திரும்ப பால்ய கால நினைவுகளையே கிளரிக் கொண்டிருக்கிறார். தவறில்லை. ஆனால், அழகி வந்த காலகட்டம் வேறு. இப்போதைய காலகட்டம் வேறு.

பழைய காதல் குறித்த பெரிய உணர்வுப் பூர்வமான ஏக்கங்களெல்லாம் கொண்டதல்ல இன்றைய காலகட்டம். அவ்வாறிருக்கும் கொஞ்ச நஞ்ச பேர்களும் வலுக்கட்டாயமாக ’வாட்ஸ் அப்’ காலத்துக்கு மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ’சொல்லாத காதல் கேஸ்’களை ’இதயம் முரளி’யாக்கிக் கலாய்க்கும் காலம் இது. இன்றைய காலத்தில் பழங்காதல் என்று மறுகிக் கொண்டிருந்தால் வினோதமாகப் பார்க்கப்படுவார்கள். இந்த படமும் அப்படித்தான். பிரபு தேவாவும் பூமிகாவும் ஏக்கங்களாகப் பார்த்துக் கொள்ளும் போது ” இவங்களுக்கு என்ன பிரச்சினை” என்கிற உணர்வுதான் எழுகிறது.

பிரிந்த காதலர்கள் எங்காவது எதேச்சையாக சந்தித்துக் கொள்வது இயல்புதான். அப்போது உணர்வுப் பிரவாகம் எடுப்பதும் இயற்கைதான். அதை ஏற்றுக் கொள்ளலாம்.  ஆனால், அவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்ள வேண்டும் என்று பிரியப்படும் இயக்குனர்  அவர்களை அருகருகிலேயே இருக்கும்படியே வைத்துக் கொள்கிறார். அதுவும் அழகியைப் போலவே..

இழந்த காதலைச் சொல்ல வேண்டும் என்று முடிவாகி விட்ட பிறகு காதலர்களைப் பிரித்து தானே ஆக வேண்டும். அதற்கு வலுவான காரணமெல்லாம் எதற்கு. ஒரு பொய் வழக்கைப் போட்டால் போகிறது என்று முடிவெடுத்து பிரபுதேவாவை சிறைக்கு அனுப்பி விடுகிறார் பூமிகாவின் பணக்கார அப்பா. பிரபுதேவா சிறையிலிருந்து திரும்பி வந்து பார்த்தால்….. அதற்குள் பூமிகாவுக்கு திருமணமாகி … மறுபடியும் அவர்கள் சந்தித்து….

நெஞ்சில் ஓர் ஆலயம்.

படம் உணர்வுப் பூர்வமாக இருந்தாலும் , இன்றைய சினிமா ரசிகர்கள் இப்படியான பழைய காதல் உணர்வுப் போராட்டங்களை ஏற்கும் அல்லது கவனிக்கும் மன நிலையில் இல்லை என்பது சற்றே துயரம்தான்.

தமிழ் சினிமா சில நல்ல நடிகர்களைக் சாவடித்து விடுகிறது. பிரபு தேவா அந்த பலிகளில் ஒருவர். இப்படியான ஒரு பாத்திரத்தில் அவரைப் பார்க்கும் போது நன்றாகத்தான் இருக்கிறது. உணர்வுகளை நன்றாக வெளிப்படுத்திகிறார். கல்லூரிப் பருவ காட்சிகளில் காதலும் ஆக்ரோஷமும் காட்டுகிறார். அவரை ஒரு நடனக்காரராகவே அறிந்தவர்களுக்கு இந்த படத்தின் நடிப்பு ஆச்சர்யப்படுத்தும். அவரும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

பூமிகா. பத்ரி படம் வந்த போது அவருடைய உதடுகளுக்காகவே ரசிக்கப்பட்டவர். இதில் உணர்வுகளுக்காக ரசிக்கப்படுகிறார். கணவனுடன் இருந்தாலும் பழைய காதலனைக் கண்டு மறுகும் காட்சிகளில் அபாரமான நடிப்பை வழங்கியிருக்கிறார். இது தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத ஒரு பாத்திரம். இப்போது ரசிக்கவில்லையாயினும் கொஞ்ச நாட்கள் கழித்து பெண்ணியம் பேசும் சிலர் இந்த பாத்திரத்தைக் கொண்டாடலாம்.

முன்பு ஒரு முறை ’பூ’  என்கிற படத்தின் பார்வதி பாத்திரத்திற்கு இதுதான் நேர்ந்தது.

பிரகாஷ்ராஜ் எப்போதும் பிரமாதப்படுத்துபவர். போதாக்குறைக்கு இதில் கனமான கனவான் பாத்திரம். அந்த பாத்திரம் கொஞ்சம் பக்குவமானதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அவரும் எப்போதும் போல அந்த பாத்திரத்திற்கேற்ப அனாயசப்படுத்துகிறார்.

சத்யன், கஞ்சா கருப்பு என்று நகைச்சுவைக்கு சிலர் வந்து போகிறார்கள்.

படத்தின் முக்கியமான ஒரு அம்சம் இசை. பரத்வாஜ். மென்மையான உணர்வுகளுகேற்ற வருடும் பின்னணி இசையைத் தந்திருக்கிறார்.. பாடல்களும் கவனிக்க வைப்பவைதான். ஆனால், கவனிப்பார்களா என்பதுதான் சந்தேகம்.

தங்கரே படப்பதிவையும் கையாண்டிருக்கிறார். அதனால் நிறையே பழமைத்தன்மை எட்டிப்பார்க்கிறது. எடிட்டிங்கும் அப்படித்தான். மெதுவாக நகர்கிறது. அது சரி.. படமே பழங்காலத்துப் படம் தானே!

ஒரு வேளை இந்த படம் எடுக்கப்பட்ட  காலத்திலேயே சரியான நேரத்திலேயே வந்திருந்தால்…. நிச்சயம் பேசப்பட்டிருக்கும்.

காதலிப்பது முட்டாள்களின் செயல் என்று இந்த படத்தின் ட்ரைலரில் சொல்லப்படுகிறது. அப்படியான முட்டாள்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும். தவறாமல் பார்க்கலாம்.

அதீதன் திருவாசகம்