திரை விமர்சனம்: நம்பியார்

வ்வொருவருக்குள்ளும் நல்ல எண்ணம், கெட்ட எண்ணம் இரண்டும் இருக்குமல்லவா.. அதுதான் “நம்பியார்” படத்தின் கதைக்கு அடிப்படை.

ஸ்ரீகாந்தை ஏ.எஸ் அதிகாரியாக்கிவிட வேண்டும் என்று துடிக்கிறார் தந்தை ஜெயபிரகாஷ். அப்பாவின் கனவை நிறைவேற்ற  மெனக்கெட்டு படிக்கிறார் ஸ்ரீகாந்த். ஆனால் அவருக்குள் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் அவரை அலைக்கழிக்கின்றன. அதற்கு நம்பியார் என்கிற பெயர் வைத்து  ஒரு உருவத்தையும் கொடுக்கிறார் ஸ்ரீகாந்த். (அந்த உருவம் சந்தானம்!)

ஆனால் ஸ்ரீகாந்தின் கெட்ட மனசாட்சியாக இருந்து தவறான ஐடியாக்களை கொடுத்து  அவருக்கு அனைவரிடமும் கெட்ட பெயர் வாங்க வைக்கிறார் (நம்பியார்) சந்தானம்.

இந்த சிக்கலால் தன்னை தேடிவந்த காதலி சுனைனாவை உதாசீனப்படுத்துகிறார் ஸ்ரீகாந்த். குடும்பத்தினரை அடித்து உதைக்கிறார். காவல்துறை  அதிகாரி ஜான்விஜய்யிடம் வம்பிழுத்து என்கவுண்டர் பண்ணப்படும்  அளவுக்கு போய்விடுகிறார்.

NTLRG_20160811110236385396

ஆனால் இது அனைத்துக்கும் காரணம் தனக்குள் இருக்கும் நம்பியார் தான் என்பதை உணர்ந்து,  அவரை எதிர்த்து வெற்றிகொள்ளும்  ஹீரோ எம்.ஜி.ஆராக தன்னை  உருவாக்கிக்கொள்கிறார். அதாவது நேர்மறை எண்ணங்களால் தன்னை மாற்றிக்கொள்ள முயல்கிறார். அதில்  ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றாரா என்பதுதான் கதை.

கதை என்னவோ நன்றாகத்தான் இருக்கிறது.. அதைச் சொன்ன விதம்தான் அத்தனை உவப்பாக இல்லை.

இதுவரையில் வெளியான படங்களிலேயே மிக அதிகமான வசனங்கள் உள்ள படம் என்று “விருது” (!) கொடுக்கலாம். அதுவும் சந்தானம் பேசும், மொக்கை வசனங்கள்.. தாங்க முடியவில்லை.

ராத்திரி நேரத்தில் ஸ்ரீகாந்த், தனது குடும்பத்தினரை அடித்து உதைத்து அவமானப்படுத்தும் காட்சி… ரொம்பவே ஓவர். அதைவிட ஓவர்.. மறுநாளே குடும்பத்தினர் எதுவும் நடக்காதது போல இயல்பாக இருப்பதும், தேவதர்ஷிணி நடனமாடுவதும்!

ஸ்ரீகாந்த் நடிப்பை குறை சொல்ல முடியாது. வழக்கமாக தனக்கு என்ன முடியுமோ, அதைச் செய்திருக்கிறார்.. பாவம்!

நெகட்டிவ் மனசாட்சியாக வரும் “நம்பியார்”  சந்தானம்… இதுவரை ஆயிரத்தெட்டு படத்தில் பேசிய வசனங்களை, கொஞ்சமும் மாற்றாமல் பேசியிருக்கிறஆர்.

ஹீரோயின் சுனைனாவுக்கும் தகுந்த காட்சிகள் இல்லை. ஏதோ துணை நடிகை ரேஞ்சுக்கு ட்ரீட் செய்திருக்கிறார்கள்.

அதே நேரம் டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ்,  சுப்பு பஞ்சு, தேவதர்ஷிணி என்று “மற்றும் பலர்” சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.

விஜய் ஆண்டனி இசையில் ‘ஆற அமர..”  பாடல் ரசிக்க வைக்கிறது.

படத்தில் பல குறைகள் இருந்தாலும் இறுதிக்காட்சியில் அசத்திவிட்டார் இயக்குநர்.   அதிலும் ஆர்யா தொடர்பான பகுதி, மிக அருமை.

மொத்தத்தில்..  “நம்பியார்”  என்ற பெயர் மிகப் பொருத்தம்.