எளிமையான ஒரு கதையை எவ்வளவு முடியுமோ  அவ்வளவு சிக்கலாகச் சொல்லி குழப்பியடிக்க வேண்டும் என்று கர்த்தர் மீது சத்தியம் செய்து விட்டுத்தான் இந்த படத்தை எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஓ.. ஜீசஸ்! அவர்கள் செய்தது இன்னதென தெரிந்தே செய்திருக்கிறார்கள். அவர்களை மன்னிக்காதீர்கள். ஒரு வேளை நீங்கள் மன்னித்தாலும் ரசிகர்கள் மாட்டார்கள். .

’ரிச்சி’ என்கிற ஒரு பிரபலமான ரவுடியின் மரணம் குறித்த பின்னணிச் செய்தியைச் சேகரிக்கச் செல்லும் ஒரு பத்திரிக்கையாளரின் விவரணையில் படம் தொடங்குகிறது. ரிச்சியைச் சுற்றியிருந்த அத்தனைப் பேர்களும் அவரவர்களுக்குத் தெரிந்த விவரங்களைச் சொல்கிறார்கள். ரிச்சியை சிறு வயதில் கொலைகாரனாக்கிய நண்பன், கொலைகார மகனை ஏற்க மறுக்கும் ஃபாதர் அப்பா, ரிச்சியின் நண்பர்கள், ரிச்சியை கொலை செய்தவன் என்று எல்லோருடைய கதைகளும் அந்த விவரணைகளில் சொல்லப்படுகிறது. இடையில் கடலில் கிடைக்கும் ஒரு சிலை, அந்த சிலையை வைத்திருக்கும் குமரவேல், அவரின் தங்கையைக் காதலிக்கும் நட்ராஜ், சிலையைகக் கைப்பற்றத் துடிக்கும் கொல்கத்தா கொள்ளைக் கும்பல் என்று சில கிளைக் கதைகள்.

நான் கதையைச் சொல்ல முடியாமல் தடுமாறுகிறேன் என்பதைக் கண்டு பிடித்து விட்டீர்களா? யெஸ்.. இரண்டு கைகளையும் மேலே தூக்கி விட்டேன். ‘ஐ அம் சரண்டர்’. வேறு வழியில்லை. உண்மையில் ரிச்சியில் சொல்லியிருக்கும் கதை புரியவில்லைதான். ஒருவாறு நாமாகவே எதையாவது யூகித்துக் கொள்ள வேண்டும் என்று விட்டு விட்டார்கள் போலிருக்கிறது.

மலையாளத்தில் ’கத பறையும் போள்’. என்றொரு படம் வந்தது. நல்ல கதை, திரைக்கதை கொண்ட அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. உடனே அதைத் தமிழில் எடுக்கிறோம் பாருங்கள் என்று கிளம்பி ‘குசேலனாக’ மாற்றினார்கள். படம் திராபையானது. தமிழில் ரஜினிக்கு இருக்கும் செல்வாக்கை வைத்து அவரை முன்னிறுத்தி அது ரஜினியின் படம் என்று சொல்லி ஏமாற்றினார்கள் அல்லவா? கிட்டத்தட்ட அதைப் போன்றதொரு ஏமாற்றுத்தனம் தான் ’ரிச்சி’..

’பிரேமம்’ படத்திற்குப் பிறகு தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிற்கும் பிடித்தமான நெருக்கமான ஒரு கதாநாயகனாக உருவாகி விட்ட நிவின் பாலியை பெரிதாக முன்னிறுத்தி ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறார்கள்.

தமிழ் மக்களைப் பொறுத்தளவில் ஓட்டுப் போட்ட பின் ஏமாற்றும் அரசியல்வாதிகளைக் கூட மறந்து மன்னித்து மறுபடியும் ஓட்டு போட்டு விடுவார்கள். ஆனால், சினிமா கொட்டாயில் ரசிகர்களை ஏமாற்றுபவர்களைச் சும்மாவே விட மாட்டார்கள். ரத்தம் சூடேற கழுவி ஊற்றுவார்கள். ரிச்சிக்கும் அதுதான் நடக்கிறது. இனி நிவின் பாலி அவ்வளவு சுலபத்தில் தமிழில் நுழைய முடியாது போலிருக்கிறது. மறுபடியும் மலையாளம் வழியாகத்தான் வர வேண்டும்.

படம் தொடங்கி சுமார் அரை மணி நேரமாக ரிச்சி… ரிச்சி.. என்று ஆளாளுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்களே ஒழிய, ரிச்சியைக் காட்டித் தொலைக்க மாட்டேன்கிறார்கள். ஒரு வழியாக ரிச்சியைக் காட்டி இவர் தான் அந்த பிரபல ரவுடி ரிச்சி என்கிற போது நமக்கு ’அவுக்’ என்றிருக்கிறது. அதுவும் அந்த தாடி, கருப்பு சட்டையில் நிவினைப் பார்க்கும் போது, ”மலர் மிஸ் எவிடெ” என்று கேட்டு விடத் தோன்றுகிறது.

பொதுவாக மற்ற மொழிப் படங்களை மறு ஆக்கம் செய்யும் போது அந்த படத்தின் உயிர் நாடியைப் பிடித்து கதையையும் களத்தையும் அமைக்க வேண்டும். அதைச் செய்ய தவறும் போது தான் ’ரிச்சி’கள் உருவாகின்றன.

கன்னட திரைப்படங்களைப் பொறுத்தளவில் 70 களில் பி.வி. சிவராம காரந்த், கிரீஷ் கர்னாட், கிரீஷ் காசரவல்லி, எம்.எஸ். சத்யூ என்று கலைப் படங்களை உருவாக்கிய படைப்பாளிகளின் காலம் ஒன்றிருந்தது. அதற்குப் பிற்பாடு 2010 களுக்குப் பிறகு தான் லூசியா, திதி, யு டர்ன் என்று கவனிக்க வைக்கக் கூடிய படங்கள் வருகின்றன. ( என நினைக்கிறேன்).

ஆனால் ’உளிதவரு கண்டந்தே’ வின் வெற்றிக்குக் காரணம் அந்த படத்தின் நிலவியல் மற்றும் கலாச்சார பின்புலம் தான்.  நேர்த்தியான உருவாக்கமும் முன் பின்னான கதை கூறு முறையும் ஒரு காரணமாக இருந்தாலும் அதன் கலாச்சாரப் பின் புலமே பிரதான காரணம்.  அம்மாதிரிப் படங்களை மறு ஆக்கம் செய்ய வேண்டும் என யோசிக்கவே கூடாது என்பது என் எண்ணம். (சுப்ரமணியபுரம் படத்தை ஹிந்தியில் எடுக்க முடியுமா?  ஆனால் அதே சாயலில் கேங்ஸ் ஆஃப் வாசேப்பூர் எடுத்தால் வெற்றியடையும் ) ஒரு வேளை அப்படியான படங்களை மறு ஆக்கம் செய்யத் துணியும் போது அதற்கேற்றது போன்ற களத்தையும் நடிகர்களையும் தேர்வு செய்ய வேண்டும்.

’உளிதவரு கண்டந்தே’ வில் ரிச்சியாக வரும் ரக்‌ஷித்தின் அலட்டலான பாத்திரத்திற்கு நிவின் சரியான பொறுத்தமல்ல. வெற்றிலையைக் குதப்பி குதப்பி வசனங்களைப் பேசி சமாளித்து விடலாம் என்கிற அவருடைய  ராஜ தந்திரம் கை கொடுக்கவில்லை. ’தபாங்’ சல்மானுக்கு எப்படி ’ஒஸ்தி’ சிம்பு சரிப்படவில்லையோ அதைப் போல. ஆனால், ’கப்பர் சிங்’கில் சல்மானை மிஞ்சி அசத்தினார் பவன் கல்யாண் என்பதைக் கவனிக்க வேண்டும். ஒரு மறு ஆக்கம் அப்படித்தான் அமைய வேண்டும்.

சரி, பாத்திர தேர்வு தான் சரியாக இல்லை. கதையையாவது குழப்பமில்லாமல் சொல்லியிருக்கலாம். கதை, களம், பின்னணி , காலம் எல்லாமே குழப்பமாகவும் அந்நியப்பட்டு நிற்பது தான் ரிச்சியின் மிகப்பெரிய பலவீனம்.

உடுப்பி பகுதியில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஜன்மாஷ்டமி மாதிரியான ஒரு விழாவை தமிழ் நாட்டின் எந்த பகுதியின், எந்த விழாவோடு பொறுத்துவது? பலரும் புலி வேஷம் போட்டு உன்மத்தம் கொண்டு ஆடுவது போன்றதொரு திருவிழா கலாச்சாரத்தைத் தமிழ் சினிமாவில் என்ன மாதிரியான விழாவாகக் காட்ட முடியும்? கன்னட படத்தில் அந்த அத்தியாயத்திற்கு முக்கியமான பங்கிருக்கிறது.

இப்படியான அம்சங்களையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் ஏனோ தானோ வென இறங்கியிருக்கிறார்கள். அரபிக் கடலோரத்தின் மல்பெ என்கிற மீன்பிடி ஊரை மட்டும் தமிழ் நாட்டின் மணப்பாடு ஊராகக் காட்டலாம் என்பதை மட்டுமே யோசித்திருக்கிறார்கள்.

பீட்டராக வரும் குமரவேல் அவர் தங்கையாக வரும் பிலோமினா ( அட குறும்பட ’லக்ஷ்மி’) அவரைக் காதலிக்கும் நட்ராஜ் என்று துண்டு துண்டாக நிற்கும் பாத்திரங்கள். அதுவும் நட்ராஜை அவர் சமீபத்தில் கட் அவுட் வரைபவராக நடித்த ’எங்கிட்ட மோதாதே’ படத்தின் செட்டிலிருந்து கையோடவே கூட்டி வந்திருக்கிறார்கள். இதிலும் ஒரு காட்சியில் ரஜினி கமலுடன் இருப்பது போன்ற படத்தைக் காட்டுகிறார்கள்.

நண்பன் செய்த குற்றத்திற்காக ஜெயில் தண்டனைப் பெற்று ரவுடியாகத் திரும்பி, தான் குற்றமற்றவன் என்பதை யாரிடமும் சொல்லாமல் ரவுடியாகவே செத்துப் போகும் ரிச்சி என்கிற ஒருவனின் வாழ்வைச் சொல்ல ஏன் இவ்வளவு குழப்பம். எல்லாம் குழப்பம். எல்லாமும் குழப்பம்.

’ரிச்சி’யுடன் வெளியான ’சத்யா’ படத்தின் எடிட்டர்தான் ரிச்சியின் இயக்குனர் என்பதாக அறிகிறேன். கவுதம் ராமச்சந்திரன். சத்யாவில் எடிட்டராக கவனிக்க வைத்தவர் ரிச்சியில் இயக்குனராக தோற்றிருக்கிறார். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

படத்தின் முக்கியமான அம்சம் பின்னணி இசை. அஜ்னீஷ் லோக்நாத். கன்னடத்திலும் இவரே தான். கொஞ்சம் புதுமையாக இருக்கிறது.  (கொரியன் படங்களுக்கு நன்றி)

பாண்டி குமாரின் படப்பதிவும் சிறப்பானதாகவே இருக்கிறது.  நிவினுக்கு சில காட்சிகளில் வைத்திருக்கும் கேமிரா கோணங்கள் அழகாக இருக்கின்றன. குறிப்பாக நிவின் காரின் பின் இருக்கையிலிருந்து எட்டிப் பார்த்தபடி வரும் ஒரு காட்சியில், திரையின் கால்வாசி பகுதி மட்டுமே நிவினின் முகம் தெரியும்படியாக அமைத்திருக்கும் கோணம் அந்த காட்சிக்கு பொறுத்தமாக இருக்கிறது.

நட்பு, துரோகம் குறித்த பல வசனங்கள் நன்றாக இருந்தாலும் அவை கதைக்குப் பிரயோசனப்படாமல் துறுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.

படத்தில் எக்கச்சக்கமான பிரச்சினைகள் இருந்தாலும் முக்கியமான ஒரு பிரச்சினை செய்தியாளராக வரும் ஷ்ரத்தாவின் பாத்திரம். அவர் ரிச்சியை இரண்டு முறை சந்தித்திருக்கிறார். முதல் முறை சிறு பிராயத்தில். சரி அப்போதாவது விட்டு விடலாம். ரிச்சி மிகப் பெரிய ரவுடியாகிய பிறகு ஒரு முறை சந்திக்கிறார். அப்போதாவது அவரிடம் கேட்டிருக்கலாம்.

”செய்யாத குற்றத்திற்காக ஜெயிலுக்கு போனதை சொல்லித் தொலைக்கலாமேடா.. ஏண்டா உயிரை வாங்குறே”

அவரைச் சொல்லி என்ன பிரயோசனம்? .

கொடிவீரனின் வன்கொடுமைகளிலிருந்து தப்பிக்க நினைத்து….

 

*அதீதன் திருவாசகம்