திரைவிமர்சனம்: சண்டைக்கோழி 2

2005-ம் வருடம் வெளியாகி வெற்றி பெற்ற “சண்டக்கோழி” படத்தின் பெயரோடு வந்திருந்தாலும் முந்தைய கதைக்கும் இதற்கும் தொடர்பில்லை.

கிராமத்து திருவிழாவை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஏழு  வருடங்களுக்கு முன்னர் நடந்த ஒரு கொலையால் ஊர்த் திருவிழா நின்றுபோகிறது. அந்த விழாவை மீண்டும் நடத்திவிட வேண்டும் என ஊர் பெரிய மனிதர் ராஜ்கிரண் மெனக்கெடுகிறார்.

ஏழு வருடங்களுக்கு முன் தன் கணவனைப் பறி கொடுத்த வரலட்சுமி, தன் கணவனைக் கொன்றவர்களின் பரம்பரையையே அழித்துவிட வேண்டும் என்று சபதம் எடுத்திருக்கிறார்.  அந்த குடும்பத்தை சேர்ந்த பலரையும் வெட்டிக் கொலை செய்கிறார். வரலட்சுமியின் தொடர் கொலைகளில் இருந்து தப்பிய ஒருவரை காப்பாற்றி அவரை படிக்கவைத்து பாதுகாக்கிறார் ராஜ்கிரண்.

இந்த நிலையில்தான் மீண்டும் திருவிழாவை நடத்த ஏற்பாடு ஆகிறது. ஆகவே வரலட்சுமியும் அவரது ஆட்களும் அந்த எஞ்சிய நபரை கொல்லத் துடிக்கிறார்கள். செயலிலும் இறங்குகிறார்கள். இதில்  காயமடைந்த ராஜ்கிரண், படுத்த படுக்கையாகிவிடுகிறார்.

அவரது கடமையை அவர் மகன் விஷால் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் மீதிக்கதை.

கிராமத்து அதிரடி ஆக்சன் கேரக்டர் என்றால் விஷாலுக்கு கருப்பட்டி சாப்பிடுகிற மாதிரி. இதிலும் அப்படித்தான். எதிரிகளை அடிக்கிறார், உதைக்கிறார், குத்துகிறார், துவம்சம் செய்கிறார். ஆமாம்… அவர் திரையில் தோன்றினாலே யாரை அடிக்கப்போகிறார் என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது. சண்டைக்காட்சிகளைப் பார்த்து நமக்கே உடல் வலி ஏற்படுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

நாயகி கீர்த்தி சுரேஷ் மதுரை கிராமத்துப் பெண்ணாக வலம் வருகிறார். ஆனாலும் மனதில் ஒட்டவில்லை. விஷாலை யார் என்று தெரியாமல் அவரைக் கலாய்க்கும் காட்சிகள் எரிச்சலூட்டுகின்றன.

ராஜ்கிரண் வழக்கம்போல இயல்பான நடிப்பு. ஆச்சரியகரமாக வரலட்சுமியும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். பார்வையில் தெரிக்கும் வில்லத்தனம் அதிரவைக்கிறது.

முனிஷ்காந்த், கஞ்சா கருப்பு ஆகியோர் நகைச்சுவைக்காக சேர்க்கப்பட்டிருப்பார்கள் என்று தோன்றுகிறது. அவர்கள் வருவதும் தெரியவில்லை போவதும் தெரியவில்லை.

இசை.. யுவன்ஷங்கர் ராஜா. “கம்பத்துப் பொண்ணு..” பாடல் தாளம்போட வைக்கிறது. கிராமிய மணம் வீசும் பின்னணி இசை ரசிக்கவைக்கிறது.

ஒளிப்பதிவு சக்திவேல். சிறப்பு. குறிப்பாக திருவிழாக் காட்சகளை கண் முன் நிறுத்தியிருக்கிறார்.

வழக்கமான பழிவாங்கும் கதை. அதிரடி.. ஆக்சன். தவிர  முந்தைய சண்டைக்கோழியில் இருந்த உற்சாகம் மிஸ்ஸிங்.

 

கார்ட்டூன் கேலரி