திரைவிமர்சனம்: தமிழ்ப்படம் 2

பார்ட் ஒன் மாதிரியே இதிலும் தமிழ்ப்படங்களை கலாய்ப்பது என்கிற ஒரே முடிவோடு களம் இறங்கியிருக்கிறார்கள்.

“அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா” என்று டைட்டிலில் போடும்போதே அதகளம் துவங்கிவிடுகிறது.

ரஜினி, கமலில் ஆரம்பித்து அஜீத், விஜய், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, விஷால் என்று தமிழ் திரைப்பட ஹீரோக்களை எல்லாம் உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டார்கள்.

“நான் எப்ப வருவேன்… எப்படி வருவேன்னு தெரியாது. ஏன்னா நான் வரவே மாட்டேன்” என்று ஸ்டைலாக சிவா வசனம் பேசும்போது சிரிக்காமல் இருக்கமுடியாது.

அதே போல், ஒரு காட்சியில் விவேகம் அஜீத்தை சிவா, இமிடேட் செய்ய.. திரையரங்கே அதிர்கிறது.

“உன்னை லூசுன்னு நினைச்சுதான் லவ் பண்ணேன்.  நீ டாக்டர்னு தெரிஞ்சுருந்தா காதலிச்சுருக்கவே மாட்டேன்” என்று சிவா சீரிஸாக சொல்லும்போதும் கதைட்டல் காதைப்பிளக்கிறது.

சந்தான பாரதிக்கு பொட்டு வைத்து, நர்ஸ் யூனிஃபார்ம் மாட்டி, “ரெமோ” ஆக்கியிருப்பதும், அவரை  ஹீரோயின் சிஸ்டர் சிஸ்டர் என்று நொடிக்கு நூறுமுறை அழைப்பதும்… முடியலை.

வால்டர் வெற்றிவேல், தேவர் மகன் படத்தில் ஆரம்பித்து, மெட்ராஸ், வேதாளம், வீரம், விவேகம், துப்பாக்கி, வேட்டையாடு விளையாடு, விஸ்வரூபம், வேலையில்லா பட்டதாரி, பாகுபலி, கபாலி.. இன்னும் திரைக்கு வராத 2.0 வரை ஏராளமான  படங்களின் காட்சிகளை கேலி செய்திருக்கிறார் இயக்குனர் அமுதன்.

சினிமா நடிகர்கள் மட்டுமல்ல நரேந்திர மோடி, ஓ.பன்னீர்செல்வம், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களையும் கலாய்த்திருக்கிறார்கள்.

சரி..  படத்தின் கதை, பாடல், நடிப்பு குறித்தெல்லாம்..?

இவை பற்றி சொல்ல ஏதுமில்லை. தமிழ்படம் முதல் பாகத்தில் கிண்டல் கேலி இருந்தாலும் மைய ஒட்டமாக சின்னதாக கதை இருந்தது.  ஆனால் இரண்டாம் பாகத்தில் கதை என்ற ஒன்றே இல்லை. ஆகவே, ஸ்டேண்ட் அப் காமெடி பார்ப்பது போல் இருக்கிறது. ஒருகட்டத்துக்கு மேல் அலுப்பு தட்டுகிறது.

தவிர பொதுவாக தமிழ் திரைப்படங்களை விமர்சிக்காமல், குறிப்பிட்ட படங்களின் காட்சிகளை கிண்டலடிப்பதால் அப்படங்களைப் பார்க்காதவர்கள் ரசிக்கமுடியாது.

படத்தின் கொடூரமான நகைச்சுவை என்னவென்றால், கஸ்தூரி போடும் குத்தாட்டம்தான்.

காமெடிக்கு ஒரு அளவே இல்லையா இயக்குநரே!

தமிழ்ப்படம் 2- கொஞ்சம் சிரிப்பு.. நிறைய அலுப்பு!

 

 

கார்ட்டூன் கேலரி