சில வருடங்களுக்கு முன்பு, ஏடிஎம்மில் கொள்ளையடித்ததாகச் சொல்லப்பட்ட வட நாட்டைச் சேர்ந்த கொள்ளைக் கூட்ட கும்பலொன்றை துரத்திச் சென்ற நம்மூர் ஸ்காட்லாந்துயார்ட்’ அந்த கொள்ளைக் கூட்ட கும்பலை வேளச்சேரியில் வைத்து என்கௌண்ட்டர் செய்தது. “அந்த கொள்ளைக் கும்பலை எப்படி சார் கண்டு பிடித்தீர்கள்” என்ற மீடியாவின்  கேள்விக்கு, “கொள்ளைக்காரர்களில் ஒருவன் மஞ்சள் கலர் சட்டை போட்டிருந்தானா….. வேளச்சேரியில் ஒரு வீட்டு மொட்டை மாடியில் மஞ்சள் சட்டை காயப்போடப்பட்டிருந்துச்சா.. விடுவோமா.. போட்டுத் தள்ளிட்டோம்” என்று போலிஸார் கூலாக சொல்லியது யாருக்கேனும்  நினைவிருக்கலாம். கூடவே இனிமேல் மொட்டை மாடியில் மஞ்சள் கலர் சொக்காய் காயப்போடவே கூடாது என்று சென்னை வாசிகளை யோசிக்க வைத்ததும் நினைவிருக்கலாம்..

அப்போது என்கௌண்ட்டர் செய்யப்பட்ட வட இந்தியத் தொழிலாளிகள்தான் நிஜமான குற்றவாளிகள் என்பதை  நம்மில் பெரும்பாலானவர்கள் நம்பவில்லை. காரணம் நம்மூர் போலிசின் லட்சணங்கள் நாமறிந்ததுதான். தப்பிப் போன நிஜமான குற்றவாளிகளை பிடிக்க கையாலாகாமல் டூப்ளிகேட் குற்றவாளிகளைக் கொன்று சீன் போட்டிருக்கலாம் என்கிற எண்ணம் எழாமலில்லை. வட இந்தியாவிற்கு தப்பிப் போன குற்றவாளிகளை எல்லாம் யார் சார் தேடிப் போவார்கள். ராம் குமார் போல உள்ளூராக இருந்தால் லட்டு மாதிரி…..

ஆனால், வட இந்தியாவிற்குப் போய் அலைந்து திரிந்து குற்றவாளிகளைப் பிடித்த, நாமறியாத போலிஸ்காரர்களும் நமக்குக் காட்டப்படாத  தீரன்களும் நம்மிடையே இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள் என்பதை மிக நேர்த்தியான போலிஸ் படமாக்கியுள்ளார் இயக்குனர் ஹெச். வினோத்.

முதல் படத்தில் வெற்றி பெற்ற ஒரு இயக்குனருக்கு அவருடைய இரண்டாவது படம் தான் சவாலானது. அந்த சவாலை தனது கடுமையான உழைப்பின் மூலமாக  தாண்டியுள்ளார் வினோத்.

அப்ளாஸ் வினோத்.

1990 களில் ஆரம்பித்து 2005 வரை தமிழக, பெங்களுரு நெடுஞ்சாலை ஓரங்களில் இருக்கும் தனித்த பங்களாக்களில் நடந்த கொலை கொள்ளை சம்பவங்கள் குறித்து யாதொரு தடயங்களும் கிடைக்காத பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அந்த வழக்குகள் எல்லாம் போலிஸ் அதிகாரி தீரன் திருமுருகனின் டேபிளுக்கு வருகிறது. (நல்ல வேளை சின்னமலை எல்லாம் இல்லை) தீரன் வழக்கமான தமிழ் சினிமா போலிஸ்தான். லஞ்சம் வாங்காமல் நெஞ்சம் நிமிர்த்துபவர். அதனால் ஊர் ஊராக மாறுதலாகிக் கொண்டிருப்பவர். திருவள்ளூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்ட பிறகுதான் அந்த வழக்குகள் அவருடைய பார்வைக்கு வருகிறது. அம்மாதிரியான கொலை கொள்ளைகள் தொடர்ந்து நடந்தும் வருவதைக் காணும் தீரன் அந்த கேசில் தீவிரமாக இறங்குகிறார். அவர்களுக்குக் கிடைப்பதோ ஒரு கை ரேகை, வெளி மாநில ஷூ, பான் பராக் பாக்கெட். இவற்றை வைத்துக் கொண்டு இந்தியா முழுக்க தேடி அலைகிறார். இறுதியாக அந்த கொலைக் குற்றவாளிகளை எவ்வாறு நெருங்குகிறார் என்பதை படு சுவாரசியமான திரைக்கதையுடன் நகர்த்துகிறார் இயக்குனர் வினோத்.

வழக்கமான ஒரு போலிஸ், அவருடைய மனைவி, உடன் பணியாற்றும் நல்ல இன்ஸ்பெக்டர், அவருடைய குடும்பம் அவர்களில் சிலர் பலியாவது, அப்படி இருந்தும் உறுதியாக பணியில் ஈடுபடுவது என்கிற எல்லா போலிஸ் பட அம்சங்களும் இதிலும் இருக்கிறது. ஆனால் தனது அபாரமான திரைக்கதை, மற்றும் அட்டகாசமான மேக்கிங்கில் தீரனை தனித்துக் காட்ட இயக்குனர் எடுத்திருக்கும் முயற்சி  அவ்வளவு பிடித்தமானதாகயிருக்கிறது.

கார்த்தி. தேர்ந்தெடுத்துக் கொண்ட போலிஸ் அதிகாரி பாத்திரத்திற்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு அந்த பாத்திரத்திற்கு உயிரூட்ட அவர் செய்திருக்கும் ’ஹோம் ஒர்க்’ பிரமிக்க வைக்கிறது. தொடக்கத்தில் விறைப்பான காக்கியாக இருப்பவர் ரகுல் ப்ரீத்தைக் கண்டதும் காதலில் குழைகிறார். நெகிழ்கிறார்.

ஹீரோ,  சாகசத்திற்கு தயாராவதற்கு முன்பு கொஞ்சம் காதலில் திளைக்கட்டும் என்கிற வழக்கமான ஃபார்முலாவில் முடிந்த வரை க்ளிஷேக்களைத் தவிர்த்து அதையும் ரொமண்டிக்கான நடிப்பால் சுவாரசியப்படுத்தியிருக்கிறார். தீரன் ஒரு சாகசக்கார போலிஸ் என்பதற்காக பின்னணியில் ஒரு துதி பாடும் பாடலை வைத்தெல்லாம் நகர்த்தாமலேயே அவருடைய பராக்கிரமத்தைச் சொல்லிய விதம் சிறப்பாக வந்திருக்கிறது..

தமிழ் சினிமாவின் வழக்கமான ’கர்ஜிக்கும்’ சிங்கப் போலிஸ்கள் போல இல்லாமல் மிடுக்கும் கூர்மையும் கொண்ட இயல்பான போலிசாக கார்த்தியைப்  பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கிறது. நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட ஸ்க்ரிப்டுகள் அமைந்தால் கார்த்தியின் திறமை வெளிப்படும் என்பதற்கு இந்த ஸ்க்ரிப்ட் ஒரு சாட்சி.

போலிஸ் பயிற்சி, வழக்கு, விசாரணை, தடயங்கள் எல்லாவற்றிலும் முந்தைய போலிஸ் படங்களையெல்லாம் மறக்கடிப்பதுதான் தீரனின் தனித்தன்மை.

போலிஸ் பயிற்சியின் போது ஒரு உயர் அதிகாரி, “கொலையாளியின் கத்தியை எப்படி எடுப்பீர்கள் என்று கேள்வி கேட்க, அதற்கு ஒரு போலிஸ்காரர் கத்தியின் மீது கர்ச்சிப்பைப் போட்டு மெதுவாக எடுக்கிறார். உடனே அந்த உயர் அதிகாரி, “ சினிமாவில் பார்த்து கத்துக்கிட்டீங்களா” என்று கேட்டு இதுவரையிலான மொத்த சினிமா போலிசையும் காலி செய்யும் போது , நமக்கே, அட.. அப்போ அது அப்படியில்லையா என யோசிக்கத் தோன்றுகிறது.

ஒரு வழக்கில் ஒரு இளம் அதிகாரி காட்டும் அக்கறையும் சீனியர் அதிகாரிகள் காட்டும் மெத்தனமும் போகிற போக்கில் அழகாக சொல்லப்படுகிறது. ஒரு சீனியர் உயர் அதிகாரி “ இந்த மாதிரி கேசையெல்லாம் கண்டு புடிக்கவே முடியாது” என்று சலித்துக் கொள்ளும் போது, கார்த்தி, ”கண்டு புடிக்கலாம் சார்.. மந்திரிகளையோ இல்ல உங்கள மாதிரி யாராவது பெரிய அதிகாரிகளையோ கொல்லும் போது வேகமா கண்டுபுடிச்சிரலாம் “ என்று படு கேஷுவலாக சொல்வது என்று படம் முழுக்க அமைதியாக இருந்தே அதகளப்படுத்தியிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் கார்த்தி காட்டும் வேகம் அசர வைக்கிறது. ஆனால் வட இந்தியப் பகுதிகளில் அலையும் போது மொத்த டீமும் முகம் வாடி, உடைகள் அழுக்காகியிருக்க கார்த்தி மட்டும் எப்போதும் டக் இன் கலையாத லினன் ஷர்ட்டில் இருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

ரகுல் ப்ரீத்திற்கு ( சிங் வேண்டாம். அதென்னவோ ஹர்பஜன் சிங், மன் மோகன் சிங், யுவராஜ் சிங் போல இருக்கிறது) வழக்கமான ஒரு போலிஸ் அதிகாரியின் காதல் மனைவியின் பாத்திரம்தான் என்றாலும் அதிலும் முடிந்த வரை சுவாரசியம் காட்ட முயற்சித்திருக்கிறார்.

ரொமான்ஸ் ஃபோர்ஷனெல்லாம் முடிந்த பிறகு ஒரு சினிமா கதாநாயகி நாயகனிடம் சொல்லும், “மாமா நீங்க அப்பாவாகப் போறிங்க “ என்கிற ரெண்டாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்டதான ஒரு காட்சியைக் கூட முடிந்தளவிற்கு ஃப்ரெஷ்ஷாக்க யோசித்த முயற்சி பாராட்டப்பட வேண்டியது.

இயக்குனர் வினோத்தின் கதைத் தேர்வும் அதைப் படமாக்க அவர் கொடுத்துள்ள உழைப்பும் அபாரமாக இருக்கிறது. வெறுமனே நெடுஞ்சாலையோரத்து வீடுகளில் நடக்கும் கொலை கொள்ளை செய்திகளுக்குப் பின்னே இருக்கும் இவ்வளவு பெரிய நெட் ஒர்க்கை ஆராய்ந்து மிகப் புத்திசாலித்தனமாக திரைக்கதையாக்கியுள்ளார்.

அந்த கொலை கொள்ளைகளில் ஈடுபட்டவர்கள்  வெளி மாநிலத்தவர் என்றதும் சிங்கம் போல ஸ்ட்ரெந்தாகப் போயி டமால் டுமீல் என சுட்டு விட்டு வில்லனைக் கொண்டு வராமல், அந்த கொள்ளைக் கூட்டம் குறித்த வரலாற்றுத் தரவுகளுடன் களமிறங்கியிருப்பதிலேயே வினோத்தின் திறமை தெரிகிறது. ஹாட்ஸ் ஆஃப் வினோத். நீங்கள் ஒரு வெற்றிகரமான இயக்குனராகி விட்டீர்கள்.

பதினெட்டாம் நூற்றாண்டுகளில் இந்தியா முழுவதிலும் ஆங்கிலேய ஆட்சிக்கு சவாலாக கொள்ளை, வழிப்பறிக் குற்றங்களில் ஈடுபட்ட பல்வேறு நாடோடி, பழங்குடி இனத்தவர்களை கொன்றுத்தள்ளி அவர்களை குற்றப்பரம்பரை என முத்திரைக் குத்தி ஒடுக்கிய, வரலாற்றையும் பின்புலத்தையும் விரிவாகச் சொல்கிறார்.  குற்றப்பரம்பரையினர் என்று சொல்லப்படுபவர்கள் யார், அவர்களின் பூர்வீகம் எது, அவர்கள் எவ்வாறு குற்றப்பரம்பரை ஆக்கப்பட்டார்கள், அந்த வாழ்வை ஏன் தொடர்ந்து மேற்கொள்கிறார்கள் என்பதையெல்லாம் மிகத் துல்லியமான தரவுகளுடன் சொல்லி ஆச்சரியப்படுத்துகிறார். ஒரு ஸ்க்ரிப்டுக்குள் நுண்ணிய தரவுகளுடன் வேலை செய்வது என்பது இப்படியாகத்தான் இருக்க வேண்டும். கடுமையான மெனக்கெடல். தேடல். உழைப்பு. இவையெல்லாமும் இந்த ஸ்க்ரிப்ட்டில் இருக்கிறது. அதுதான் இந்த போலிஸ் படத்தை தனித்துக் காட்டுகிறது. வெல்டன்.

வட இந்திய கொள்ளைக்காரர்களாக வரும் நடிகர்களின் தேர்வு மிரட்டும்படியாக இருக்கிறது..

கதை வட இந்தியாவிற்கு நகர்ந்ததும் சத்யனின் கேமிரா நம்மையும் கூடவே அழைத்துப் போகிறது. ராஜஸ்தான், ஹரியானா ஆரவல்லி மலைப் பகுதிகளில் நடக்கும் காட்சிகளை அந்த நிலப்பரப்பிற்கேற்ற வண்ணத்தில் காட்சிப்படுத்துகிறது.

ஜிப்ரானின் பின்னணி இசை இம்மாதிரியான க்ரைம் த்ரில்லருக்கு கூடுதல் விறுவிறுப்பைத் தர தவறவில்லை. அமர்க்களப்படுத்திரிருக்கிறார். குறிப்பாக க்ளைமேக்சில் பாலைவனப் பகுதிகளில் நடக்கும் சண்டைக் காட்சிகளின் போது அவருடைய பின்னணி இசை அந்த சூழலை பயமுறுத்த வைக்கிறது. அட்டகாசமான ஒலிப்பதிவு. உயர் தரமான ஒரு தியேட்டரில் பார்ப்பவர்கள் அதை அனுபவிக்கலாம்.

ஆரம்பத்தில் இடம்பெரும் கார்த்தி- ரகுல் ப்ரீத்தின் சற்றே அலுப்பூட்டும் நீளமான ரொமான்ஸ் காட்சிகளை எடிட் செய்ய யோசித்து அதனுடைய அழகியலுக்காக அனுமதித்திருக்கிறார்  எடிட்டர் சிவநந்தீஸ்வரன். ஆனால், இடைவேளைக்குப் பிறகான தேடல் காட்சிகளை சற்று குறைத்திருக்கலாம். இன்னும் எங்கெங்கெல்லாம்தான் தேடுவீங்க… என லேசாக அலுப்பை ஏற்படுத்துகிறது.

ஆக்‌ஷன் ஃபோர்ஷன்களின் எடிட்டிங் அசர வைக்கிறது. அந்த போர்ஷன்களை அமைத்துத் தந்த திலீப் சுப்பராயனின் திறமை ஊரறிந்ததுதான். ஆனாலும் எதிரிகளின் காலை வாரியடிக்கும் அந்த ஆக்‌ஷன் ஸ்டைல் அட்டகாசமாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. க்ளைமேக்சில் கார்த்தியும் ஓமாவும் வெட்ட வெளி பாலை நிலத்தில் கட்டிப் புரண்டு போடும் சண்டையில் கார்த்தியின் கழுத்தை ஓமா ஒரு மலைப் பாம்பைப் போல பிடித்து வளைத்து இறுக்கி நெறுக்கும் போது ….ப்பா.. கார்த்தியோடு சேர்ந்து நம்மையும் மூச்சு வாங்க வைக்கிறார்.

தொடக்கத்தில், காவல் நிலையத்தில் பழைய கோப்புகளைக் காட்டும் போதும், வட இந்திய பகுதிகளைக் காட்டும் போதும் கலை இயக்குனரின் பங்களிப்பு தெரிகிறது.

பொதுவாக வினோத்தின் படங்களில்…. ( டேய்.. நிறுத்து. ஒரு இயக்குனர் ரெண்டெ ரெண்டு படம் எடுத்து விட்டாலே…. இப்படி ஆரம்பித்து விடுவீர்கள் நான்சென்ஸ்.. மூட்றா ) ஓக்கே.. வினோத்தின் முந்தைய படமான சதுரங்க வேட்டையில் அதிகமும் பேசப்பட்ட அவருடைய பிரத்யேகமான வசனங்கள் இதில் குறைவுதான். ஆனாலும் சுவாரசியத்திற்குப் பஞ்சமில்லை.

வட இந்தியாவில் பிடிபடும் ஒரு குற்றவாளியை விசாரிக்கும் போது சதுரங்க வேட்டையின் விசாரணை நினைவுக்கு வந்து போகிறது. அந்த குற்றவாளி எவ்வளவு அடி வாங்கினாலும் ’மெ பேஃகுனா’ என்பதையே திரும்ப திரும்ப சொல்வதும், பிற்பாடு கார்த்தி அதையே ஒரு இடத்தில் சொல்வதும் ஒரு நீட்டான எண்டெர்டெயின்மெண்ட்டாக இருக்கிறது.

இன்னும் ஒரு இடத்தில் வட இந்திய காவல் நிலையத்தில் ஒரு டிஎஸ்பி வரும் போது ஒரு கடை நிலை கான்ஸ்டபிள் எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் அவன் பாட்டிற்கு உட்கார்ந்திருக்க “டிஎஸ்பிக்கே இந்த மரியாதைதானா” என நம்மூர் போலிஸ் வாயைப் பிளக்க, “அங்கே போலிசிற்கு சங்கம் இருக்கிறது“ என்கிற உண்மை இன்னும் வாயைப் பிளக்க வைக்கிறது.

வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் மெல்லிய நகைச்சுவை வசனங்களை வைத்து இறுக்கத்தை தளர்த்துகிறார்.

இந்தியா முழுக்க இருந்த குற்றப்பரம்பரையினரான தக்ஸ், பேரவாஸ், பவாரியா என்று பலரையும் குறிப்பிடும் இயக்குனர் தமிழக குற்றப்பரம்பரையினரின் பெயர்கள் குறித்து எதுவும் சொல்லாமல் தாண்டிப் போகிறார். எதுக்கு வம்பு என்று நினைத்திருப்பார் போல.

இதே போல வட இந்தியாவின் ’தக்ஸ் ‘குற்றப்பரம்பரையினர் குறித்து ஆமிர்கான் நடிப்பில் ஒரு படம் அடுத்த ஆண்டு வெளி வரவிருக்கிறது. ’தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான்’. என்ன.. அதில் ஆமிர், தீரன் போல அவர்களை வேட்டையாட மாட்டார். தக்ஸ்’ என்கிற கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்தவராக இருப்பார்.. அவர்கள் தரப்பு நியாயத்தை சொல்வார். அதுதான் ஆமிர்.

இவ்வளவு சிரமப்பட்டு வட இந்தியாவெல்லாம் அலைந்து திரிந்து கொள்ளையர்களைப் பிடித்த காவல் அதிகாரிகளுக்கு தமிழக அரசு எந்த விதமான பரிசோ பதவி உயர்வோ வழங்கப்படவில்லை என்பதோடு அவர்களை ஒரு டம்மியான பதவியில் உட்கார வைத்து விட்டது என்கிற செய்தியோடு படம் முடியும் போது நம்மையறியாமலேயே கண்ணுக்குத் தெரியாத அந்த ரியல் ஹீரோக்களின் மீது பரிதாபம் ஏற்படுகிறது.

ஆனால், இந்த சினிமா ஹீரோ பார்வையாளர்களை வசப்படுத்துகிறான்..

சரி… இம்மாதிரி கொலை கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டிருந்த கொள்ளைக்காரர்களெல்லாம் இப்போது காணவில்லையே.. எங்கே போய் விட்டார்கள் என்று யோசித்த போது, ” நான் பதவியேற்றதும் வட இந்திய கொள்ளையர்கள் பயந்து சொந்த ஊர்களுக்கே ஓடி விட்டார்கள் “ என்று புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சொன்னது நினைவுக்கு வந்தது.

ஆனால், இப்போது அம்மா அவர்கள் இல்லையென்பதை நினைக்கும் போது…..

-அதீதன் திருவாசகம்