சிறிய பட்ஜெட்டில் ஒரு ஆக்‌ஷன் படத்தை எடுக்க ஆசைப்பட்டிருக்கிறார்கள்.

’திருடன் போலிஸ்’ என்கிற கவனிக்க வைத்த, வெற்றிப் படத்தைத் தந்த இயக்குனர் கார்த்திக் ராஜு மறுபடியும் தினேஷை வைத்து இயக்கியிருக்கிறார்.

எதிரியின் கூட்டத்தில் எந்தவிதமான அடையாளமுமில்லாமல் நுழைந்து அவர்களை ஒவ்வொருவராகப் போட்டுத் தள்ளும் காக்கி சட்டை ( கமல் ) , ’போக்கிரி’ வகையான கதைதான். இம்மாதிரிக் கதைகள் எல்லாம் மிகப் பெரிய ஆக்‌ஷன் ஹீரோக்களுக்கானது என்றெல்லாம் யோசிக்காமல் தினேஷை வைத்து இறங்கியிருக்கும் துணிச்சலுக்குப் பாராட்டுக்கள்.

சொந்தம் என்று யாருமற்ற தினேஷுக்கு அடைக்களம் தருகிறார் பால சரவணன். அடைக்களம் தந்த பால சரவணனின் தங்கை நந்திதாவைக் காதலிக்கிறார் தினேஷ். இடையிடையில் அந்த குப்பத்தில் கந்து வட்டி  தாதாவான சரத் லோகிதாவின் அடியாட்களுடன் வாலண்டியராகப் போய் வம்பிழுத்து அவர்களை அடித்து நொறுக்குகிறார். அத்துடன் நிற்காமல், தாதாவின் மகனான திலீப் சுப்பராயனுடனும் வம்பு சண்டைக்குப் போய் அவரையும் அடித்து துவைக்கிறார். ஒரு படகு போட்டியில் திலீப் சுப்பராயனிடம் வலுக்கட்டாயமாகத் தோற்று திலீப் மற்றும் அவருடைய அப்பாவான தாதா இருவரின் மனதிலும் நல்ல இடத்தைப் பெறுகிறார். பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் திலீப்பையே கொலை செய்கிறார்.

தினேஷின் இந்த ரகசிய கொலைகளையும் அடிதடிகளையும் பார்த்து விடும் நந்திதா, தினேஷை வீட்டை விட்டுத் துரத்துகிறார். உண்மையைக் கண்டுபிடித்து விட்ட நந்திதாவிடம் எதற்காக இந்த அடிதடி வெட்டு, குத்து என்கிற காரணங்களையெல்லாம் சொல்கிறார்.

அந்த பிளாஷ்பேக் பிறகு.

தினேஷைப் பொறுத்தளவில் இதுவரையில் அவர் நடித்த படங்கள் எல்லாமே வெற்றி பெற்றிருக்கின்றன அல்லது கவனிக்க வைத்திருக்கின்றன. அட்டகத்தி, குக்கூ, ஒரு நாள் கூத்து, விசாரணை உள்ளிட்ட படங்கள் உதாரணம். குக்கூவில் சமகால ஹீரோக்கள் எவரும் ஏற்கத்தயங்கும் சவாலான பாத்திரத்தை முயற்சித்தவர். கபாலியில் கூட ரஜினிக்கு அடுத்து கவனிக்க வைத்தவர். அப்படிப்பட்டவர் இதுவரை தான் ஏற்காத ஒரு ஆக்‌ஷன் கதையை தேர்ந்தெடுத்திருப்பது புத்திசாலித்தனம்.

படத்தின் தொடக்கத்தில் யாருமற்ற ஒரு அனாதையாக ஒரு கடல் பகுதியின் குப்பத்திற்கு வந்து சேரும் போது இறுக்கமான, எவ்வித உணர்வுமற்ற முகத்துடன் விறைப்பாக இருக்கிறார். தொடர்ந்து எல்லா காட்சிகளிலும் அதே போன்றதான உடல் மொழியுடன் இருக்கும் போது நமக்கே கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கிறது. அதே உடல் மொழியுடன் பயங்கரமான சண்டைக் காட்சிகளில் நடிக்கும் போது “இது என்னடா வம்பா போச்சி“ என்று தோன்றுகிறது.

வில்லன் சரத்துடன் தினேஷ் கபடி ஆடும் காட்சி, படத்தின் சுவாரசியமான காட்சிகளில் ஒன்று. வழக்கமாக கபடி ஆடி தனக்குப் பிடிக்காதவர்களைக் கொன்று போடும் சரத்துடன் கபடி விளையாடும் தினேஷ், சரத்தின் பாணியிலேயே அவரைக் கவிழ்ப்பது சிறப்பாக இருக்கிறது.

படத்தின் பின்பாதியில் தினேஷின் கடந்த கால கதையைச் சொன்ன பிறகு, இதுவரையிலான அவருடைய விறைப்பான, இறுக்கமான முக பாவனைகளுக்கு இதுதான் காரணம் போல என்று நினைத்து, சற்றே நம்மை ஆறுதல் படுத்திக் கொள்ளத் தோன்றுகிறது. தினேஷ், உடல் மொழியிலும்  வசனங்களை உச்சரிக்கும் தன்மையிலும் தன்னை இன்னும் முன்னேற்றிக் கொண்டால் மிகப் பெரிய உயரத்திற்குச் செல்வார்.

தினேஷின் நண்பனாக பாலசரவணன். ’திருடன் போலிசில்’ எடுபட்டது போல இந்த படத்தில் அவருடைய நகைச்சுவை எடுபடவில்லை. ”சுறா சங்கர்னா சும்மாவா…” என்கிற வசனத்தை முதல் முறை சொல்லும் போது நமக்கு சிரிப்பு வருவது போலிருந்தாலும், படம் முழுக்க அதையே சொல்லிக் கொண்டிருக்கும் போது, முதலில் கூட ஏந்தான் சிரித்தோமோ என்றாகி விடுகிறது. ரூட்டை மாத்துங்க பாஸ்!

கதாநாயகியாக நந்திதா. மீனவக் குடும்பத்துப் பெண் என்பதால் மீன் குழம்பு செய்து பறிமாறுவதும் தினேஷுடன் சில மான்டேஜ் காட்சிகளில் காதலிப்பதோடும் சரி. பெரிதாக வேலையில்லை.

பிறகு, கதாநாயகனின் பின்னணிக் கதையை நண்பனிடம் சொல்ல வைக்கலாமா அல்லது கதாநாயகியிடம் சொல்ல வைக்கலாமா என்று குழம்பிய இயக்குனர், கதாநாயகிக்கு நிறைய காட்சிகள் இல்லை என்பதை உணர்ந்ததாலோ என்னவோ கதாநாயகியிடமே சொல்ல வைக்கிறார். (தமிழ் சினிமாவில் பிளாஷ் பேக் கதைகளைக் கேட்பதற்கெனவே இருப்பவர்கள் கதாநாயகியும் நண்பனும் தானே!)

அதாவது, அந்த பின்னணிக் கதை என்னன்னா…

தினேஷும் அவருடைய அக்காவான சாயா சிங்கும் பெற்றோர் இல்லாமல் வளர்ந்தவர்கள். அக்கா கோவிலில் பூமாலை விற்று தம்பியை வளர்த்து ஆளாக்குகிறார். அக்கா சாயா சிங், ஆட்டோ ஓட்டுனரான ஜான் விஜயை காதலித்துக் கல்யாணம் செய்து கொள்கிறார். ஆனால், ஜான் விஜய் உண்மையில் ஒரு ஆட்டோ ஓட்டுனர் இல்லை. கந்து வட்டி தாதாவான சரத்திடம் அடியாளாக வேலை செய்பவர். பொய் சொல்லித்தான் சாயா சிங்கை கல்யாணம் செய்து கொள்கிறார். ஒரு கந்து வட்டி வசூல் பிரச்சினையில் தாதா சரத்தின் மகனான திலீப் சுப்பராயனுடன் ஜான் விஜய்க்கு மோதல் ஏற்படுகிறது. அந்த அவமானத்தில் ஜான் விஜய்யையும் சாயா சிங்கையும் கொலை செய்து விடுகிறார் திலீப் சுப்பராயன்.

இப்போது புரிந்திருக்குமே. தன்னை வளர்த்து ஆளாக்கிய அக்கா மற்றும் அக்க புருஷனைக் கொன்றவர்களைப் பழிவாங்கத்தான்……

கதை என்னவோ கேட்பதற்கு சுவாரசியமாக இருந்தாலும் கதையை சொன்ன விதத்திலும் காட்சி படுத்தலிலும் ஏற்பட்ட சுணக்கத்தால் பெரிய அல்ல சிறிய தாக்கத்தைக் கூட ஏற்படுத்தவில்லை.

ஒரு  சினிமாவுக்கு திரைக்கதை எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியமானது ஒரு ஆக்‌ஷன் கதைக்கு படமாக்கும் முறை. அதாவது மேக்கிங். இந்த எளிமையான ஆக்‌ஷன் படத்திற்குத் தேவையான குறைந்த பட்ச திரைக்கதையையும் மேக்கிங்கையும் கூட தரத் தவறியதுதான் இந்த படத்தின் மிகப் பெரிய குறைபாடு.

மொத்த படத்தின் போக்குக்கும் முதுகெலும்பென கருதப்படும் பின்பாதிக் கதையை வலுவாக சொல்லியிருக்க வேண்டும். அது மட்டுமின்றி படத்தின் மொத்த பாத்திரங்களும் அவசர கதியில் உருவாக்கப்பட்டது போல பட்டும் படாமலும் வந்து போகின்றன.

படத்தின் ஆறுதலான அம்சங்களில் ஒன்று திலீப் சுப்பராயனின் வில்லத்தனம். முதல் படமாம். வாழ்த்துக்கள். இனி, அதிகமான படங்களில் அவரைப் பார்க்கலாம். அத்துடன் தினேஷுக்கேற்ற வகையில் கொஞ்சம் இயல்பான சண்டைக் காட்சிகளையும் அமைத்திருப்பதற்கும் சேர்த்து பாராட்டுக்கள்.

இன்னொரு ஆறுதல் சாயாசிங். தினேஷின் அக்காவாக வந்து அனாமத்தாக செத்துப் போகிறார். ஜான் விஜய்யும் ஸ்ரீமன் பாத்திரங்கள் கூட ஓக்கேதான்.

படத்தின் மிகப் பெரிய குறைகளில் திரைக்கதைக்கு அடுத்து படப்பதிவுக்கு அதிக பங்கிருக்கிறது. பி.கே..வர்மா. ஒரு கதையின் மையத்தையும் காட்சியின் தன்மையையும் புரிந்து கொண்டு கோணங்களை அமைக்கும் வித்தை இவருக்கு இன்னும் பிடிபடவில்லை. சரி படத்தொகுப்பிலாவது அதை ஓரளவு சரிக் கட்டியிருக்கலாம். அதுவும் பெரிய மெனக்கெடல்கள் இன்றியே இருக்கிறது.

ஜஸ்டின் பிரபாகரின் இசையில் பாடல்கள் தியேட்டரில் கேட்க நன்றாகவே இருக்கின்றன. பின்னணி இசையும் குறையொன்றுமில்லை.

இயக்குனர் கார்த்திக் ராஜு தன்னுடைய முதல் படமான திருடன் போலிசில் சில காட்சிகளை மிகுந்த உணர்ச்சிகரமாக உருவாக்கியிருந்தார். தினேஷின் அப்பா இறந்ததும் அப்பாவின் கான்ஸ்டபிள் வேலையில் சேரும் தினேஷ், அப்பா இதுவரை செய்து வந்த எடுபிடி வேலைகளை செய்து, அவரை நினைத்து உருகும் காட்சி ஒரு உதாரணம்.

அம்மாதிரியான உணர்ச்சிபூர்வமான காட்சிகளுக்கு தகுந்த இடம் இந்த கதையில் இருந்தும் அதைச் செய்ய தவறியிருக்கிறார்.

அக்கா சாயா சிங், மாமா ஜான் விஜய் தொடர்பான காட்சிகள்  உணர்ச்சிகரமாகப் படமாக்கப்பட்டிருக்க வேண்டியவை. மேலோட்டமாக இருக்கின்றன.   அத்துடன் மட்டுமின்றி கதை நிகழும் நிலப்பகுதி குறித்த குறைந்தபட்ச நம்பகத்தன்மையைக் கூட தரத் தவறியிருக்கிறார் இயக்குனர். கடலோரப் பகுதிதான். ஆனால், அதற்குண்டான வழக்காறுகள் எதுவும் இல்லாமல் இருக்கிறது.

படத்தின் இறுதிக் காட்சியும் தினேஷ் பேசும் வசனங்களும் மட்டும் கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் வகையில் இருக்கின்றன.

ஒரு எளிமையான ஆனால், வலுவான ஆக்‌ஷன் படத்திற்குண்டான அத்தனை அம்சங்களும் கொண்ட கதையாக இருந்த போதிலும் மிக எளிமையாகத் தவற விட்டிருக்கிறார்கள்.

சுருக்கமாக ஆனால், கொஞ்சம் பழசாக சொல்வதானால், அனாயசமாக பவுண்டரி அடித்திருக்க வேண்டிய பந்து. இரண்டு ரன்கள் எடுக்கவே மூச்சு வாங்குகிறார்கள்.

தினேஷ் மற்றும் கார்த்திக் ராஜு… அடுத்த மேட்ச்களில் கவனமுடன் ஆடுங்கள்.