திரைவிமர்சனம்: வடசென்னை.. சிந்தியுங்கள் திரைக்கலைஞர்களே!

டசென்னையில் ஆதிக்கம் செலுத்தும் ரவுடி கும்பல்.. அவர்களுக்குள் நடக்கும் முட்டல் மோதல்தான் கதை.

வடசென்னையில் செல்வாக்கு செலுத்தும் கேங் லீடர் ராஜன். (அமீர்). அவரது கும்பலில் குணா (சமுத்திரக்கனி), செந்தில் (கிஷோர்), வேலு (பவன்), தம்பி (டேனியல் பாலாஜி) ஆகியோர் உள்ளனர்.

பணத்தாசையில் அரசியல்வாதி முத்து (ராதா ரவி) கடலோர பகுதி மக்களை அப்புறப்படுத்தி அவர்களுக்கு குவாட்ரஸ் கட்டித்தருவதாக   களம் இறங்குகிறார். ஆனால் அப்படி மக்களை அப்புறப்படுத்தினால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று ராஜன் எதிர்க்கிறார்.

இதற்கிடையே சிலரது துரோகங்களால் ராஜன் கொல்லப்படுகிறார். அவரிடம் இருந்த. குணா – செந்தில் ஆகியோர் தனித்தனி அணியாக பிரிகிறார்கள். செந்தில் ஒரு வழக்கில் சிறையில் அடைக்கப்படுகிறார். இங்குதான்  அன்பு (தனுஷ்) அறிமுகமாகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறL என்பதுதான் கதை.

ராஜன் கொல்லப்பட்டதற்கான காரணம் என்ன? குணா – செந்தில் இடையேயான விரோதம் ஏன் ஏற்பட்டது? அன்பு இவர்களுக்கு மத்தியில் வந்தது ஏன் என்பதை எல்லாம் இயல்பாகச் சொல்கிறது கதை.

1980, 1990, 2000க்குப் பிறகு என்று மூன்று காலகட்டங்களில் கதை நகர்கிறது. வெற்றிமாறனின் சிறப்பான திரைக்கதை நம்மை படத்துடன் ஒன்ற வைத்துவிடுகிறது.

படம் பார்த்து முடியும் வரை தாதா உலகில் நாமும் ஒரு அங்கமோ என்கிற அளவுக்கு நம்மை படத்துடன் ஒன்றச் செய்துவிடுகிறார் வெற்றிமாறன்.

ஆனால் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்வதில் இவ்வளவு நீ…. ளம் தேவையா. அலுப்புத்தட்டுகிறது.

வழக்கம்போல இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் தனுஷ். பங்க் தலையுடன் கேஷூவலாய் பேசித் திரிவது,  ஐஸ்வர்யா ராஜேஷ் மீதான காதல், முதல் கொலை செய்யும்போது ஏற்படும் உணர்ச்சிகள், தன்னைப் பிறர் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை உணரும் காட்சி… இப்படி மனசுக்கு நெருங்கி வருகிறார் தனுஷ்.

அமீர் நடிப்பும் அற்புதம்.  முத்திரக்கனி – கிஷோர் இருவரும் பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார்கள். டேனியல் பாலாஜியும் ரசிக்கவைக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் தனது அடாவடி நடிப்பின் மூலம் நம்மைக் கவர்கிறார்.

அதே போல ஆண்ட்ரியா… இப்படி ஒரு வேடத்தில் அவரை எதிர்பார்த்திருக்கவே முடியாது. சந்திராவாக வரும் அவர், “கூட்டினு வர்றேன்னு சொல்லிதான இட்டுனு போன” என அசால்ட்டாக பேசும் காட்சி ஒரு உதாரணம்.

இயக்கம், நடிப்பு, இசை… இவற்றுக்கு ஈடாக பேசவைப்பது கலை.  குடிசைப் பகுதிகளும், சிறையும் செட்தான் என்று நம்பவே முடியவில்லை. அத்தனை எதார்த்தம். கலை இயக்குநர் ஜாக்கிக்கு ஒரு சபாஷ். படத்துக்கு இன்னொரு பெரிய பலம் ஒளிப்பதிவு.  கேமரா கோணங்கள் மூலம் திரைக்கதைக்கு வலு  சேர்த்திருக்கிறார் வேல்ராஜ்.  இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின்  பின்னணியும் படத்துடன் ஒன்றுவதற்குக் காரணமாகிறது.

கதையுடன் கேரம் விளையாட்டை இணைத்துச் சொல்லியிருக்கும் காட்சிகள் சிறப்பு.

கதைப்படி அன்பு கேரம் ப்ளேயர். இந்தப் படமும் ஒரு கேரம் ஆட்டம் போலவே. அன்புதான் ஸ்ட்ரைகர், வீழ்த்தப்பட வேண்டியவர்கள் கருப்பு வெள்ளை சிவப்பு காயின்கள். ஆனால், ஆட்டத்தை ஆடும் வீர்ர் சந்திரா. ரசிக்கவைக்கிறார் இயக்குநர்.

தவிர படத்தில் பெண்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் கவனிக்கத்தக்கது.

அன்பு மற்றும் குணாவின் மனைவியர் கதாபாத்திரம் சிறப்பு. அதே போல மோதலுக்கு முடிவு கட்ட நிபந்தனை விதிக்கும் தாதா செந்திலின் மனைவியும் மனதில் நிற்கிறார்.  கணவனின் மறுப்பை மீறி அன்புவுடன் மகளை அனுப்பிவைக்கிறார் பெண்ணின் அம்மா.  இட ஆக்கிரமிப்புக்காக வருகிறவர்களோடு ஒத்துழைக்கத் தயாராக இருக்கும் ஆண்களை அதட்டுகிறார்கள் பெண்கள்.

தவிர, காதல் கனவுக் காட்சிகள் படத்துடன் ஒட்டாத நகைச்சுவை என்று துருத்திக்கொண்டு நிற்கு காட்சிகள் எதுவும் இல்லாதது  பெரும் ப்ளஸ்.

அதே நேரம் வட சென்னை என்றாலே சமூக விரோதிகள் மட்டுமே வாழும் பூமியா.. இப்படியேதான் படம் எடுக்க வேண்டுமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

வடசென்னையில் பகுதியில் இருந்து எத்தனையோ சமூக மாற்றங்கள் நடந்திருக்கின்றன. அரசியல் திருப்பங்களுக்குக் காரணமாக இருந்திருக்கிறது.

ஆனால் வன்முறை மட்டும்தான் வட சென்னையின் அடையாளமா?

திரைக்கலைஞர்கள் சிந்திக்க வேண்டும்!

 

கார்ட்டூன் கேலரி