ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யனுக்கு இந்திய ஒளிப்பதிவாளர் சமூகத்தின் உயரிய அங்கீகாரம்….!

1995-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ISC (The Indian Society of Cinematographers) புகைப்படத்துறையில் சிறந்து விளங்குபவர்களைத் தானாக முன் வந்து அங்கீகரிக்கும் ஒரு அமைப்பாக திருவனந்தபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது .

கே.வி.ஆனந்த், ராஜீவ் மேனன், ரவி.கே.சந்திரன் உள்ளிட்ட ஒளிப்பதிவாளர்கள் இதில் உறுப்பினர்களாகச் செயல்படுகின்றனர். தற்போது இந்த அமைப்பு ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யனை அங்கீகரித்துள்ளது.

இந்த அங்கீகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னை ISC-ல் ஒருவனாக சேர்த்துக்கொண்ட இந்திய ஒளிப்பதிவாளர்கள் சமூகத்துக்கு நன்றி. துறையில் உயர்ந்தவர்களுடன் சேர்ந்து இந்த மதிப்புமிக்க அமைப்பில் ஒரு அங்கமாக இருப்பது பெரிய கவுரவம். சன்னி ஜோசப், அனில் மேதா, ரவிகே சந்திரன் ஆகியோருக்கு நன்றி” என்று சத்யன் சூர்யன் பகிர்ந்துள்ளார்.

‘மாயா’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘கைதி’ உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவுக்காக பல தரப்பிலிருந்து பாராட்டைப் பெற்றவர் சத்யன் சூர்யன் என்பது குறிப்பிடத்தக்கது .