இம்பால்:

நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் கோவா, மணிப்பூர் மாநிலங்களில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடை க்கவில்லை. ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பலம் காங்கிரஸ், பாஜ ஆகிய இரு கட்சிகளுக்கும் கிடைக்காததால் அங்கு இழுபறி நிலை நீடிக்கிறது.

இந்த இரு மாநிலங்களிளும் சுயேட்சைகள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளனர். அனைத்து சுயேட்சை எம்எல்ஏ.க்களின் ஆதரவை பெறும் கட்சியே இங்கு ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் இங்கு வெற்றி பெற்ற சுயேட்சை எம்எல்ஏ.க்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.

இதை மனதில் வைத்துக் கொண்டு தான் இரு மாநிலங்களிலும் பாஜ ஆட்சி அமைக்கும் என்று பாஜ தேசிய தலைவர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இதனால் மணிப்பூர், கோவா மாநிலங்களில் வெற்றி பெற்ற சுயேட்சைகளை விலை பேசும் செயல்களிலும், அவர்களை கடத்தும் செயல்களிலும் பாஜ தீவிரம் காட்டி வருகிறது.

இந்த வகையில் மணிப்பூர் மாநிலத்தில் வெற்றி பெற்ற சுயேட்சை எம்எல்ஏ அசபுத்தீன் என்பவர் இம்பால் ஏர்போர்ட்டில் சிஐஎஸ்எப் வீரர்களால் சிறை வைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. சிஐஎஸ்எப் மற்றும் விமான நிலைய ஆணைய அதிகாரிகள் உதவியுடன் அவர் கொல்கத்தாவுக்கு விமானம் மூலம் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா கூறுகையில், ‘‘மணிப்பூரில் ஏற்பட்ட இழப்பை சரி செய்ய எம்எல்ஏ.க்களை கடத்தி ஜனநாயக படுகொலையில் மோடி அரசு ஈடுபடுகிறது. இதற்கு சிஐஎஸ்எப், விமான நிலைய அதிகாரிகளை மோடி அரசு தவறாக பயன்படுத்துகிறது’’ என்று குற்றம்சாட்டியுள்ளார்.