டில்லி

ருதலைக் காதல் காரணமாகப் பெண் ஐ ஏஎஸ் அதிகாரி காரில் போதை மருந்தை வைத்த பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதுகாப்புப் படை அதிகாரியான ரஞ்சன் சிங் பிரதாப் என்பவர் கடந்த 2000 ஆம் ஆண்டில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அமைப்பின் சார்பில் நடந்த ஒரு நான்கு மாத பயிற்சி வகுப்பில் கலந்துக் கொண்டார்.  அவருடன் அந்த வகுப்பில் கலந்துக் கொண்ட பெண் ஐஏஎஸ் அதிகாரியுடன் அவருக்கு நட்பு உண்டாகி இருக்கிறது.

அந்த நட்பு ரஞ்சன் சிங் தரப்பில் ஒரு தலைக் காதலாக மாறி உள்ளது.   இதை அறியாத அந்த ஐஏஎஸ் அதிகாரி மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சக ஆலோசகரை திருமணம் செய்துக் கொண்டர்.  இதனால் ரஞ்சன் மிகவும் ஆத்திரம் அடைந்துள்ளார்.   ஆயினும் அந்த அதிகாரியுடன் நட்பு பாராட்டி வந்துள்ளார்.

ரஞ்சனின் எண்ணத்தைப் புரிந்துக் கொண்ட அந்த பெண் அதிகாரி அவரை புறக்கணிக்கத் தொடங்கி உள்ளார்.  இதனால் கோபம் அடைந்த ரஞ்சன் அதிகாரியின் கணவரால் தான் தன்னை அவர் புறக்கணிக்கிறார் என முடிவு செய்தார்.   அதையொட்டி  அவர் தனது நண்பரும் வழக்கறிஞருமான நீரஜ் சவுகான் உதவியுடன் 550 கிராம் போதைப் பொருளை அலிகாரில் இருந்து வாங்கி உள்ளார்.

இந்த மாதம் 4 ஆம் தேதி அன்று அவர்கள் இருவருமான அதிகாரியின் கணவரின் காரில் இந்த போதை மருந்தை ஒளித்து வைத்துள்ளனர்.    அதன் பிறகு ஒரு பழ வியாபாரியிடம் மொபைலை இரவல் வாங்கி அந்தக் குறிப்பிட்ட வாகனத்தில் போதை மருந்து கடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.   அதையொட்டி அதிகாரியின் கணவர்  கார் சோதனை இடப்பட்டது.

அந்தக் காரில் 550 கிராம் போதை மருந்து தொலைபேசி தகவலின்படி  கிடைத்துள்ளது. நேரடியாகப் பாதுகாப்புத் துறைக்கு இந்த புகார் வந்ததும், போதை மருந்துகள் எடை குறித்துச் சரியான தகவல் புகாரில் அளிக்கப்பட்டதும் சந்தேகத்தை எழுப்பியதால் பாதுகாப்புத் துறையினர் துப்பறிந்து இந்த விவகாரத்தின் முழு விவரங்களையும் கண்டறிந்தனர்.

இதையடுத்து ரஞ்சன் மற்றும் அவர் நண்பர் சவுகான் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அப்போது ரஞ்சன் தனது ஒருதலைக் காதல் காரணமாக அதிகாரியின் கணவரைச் சிக்க வைக்க இவ்வாறு செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.   கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேலும் விசாரணை தொடர்கிறது.