மும்பை: பிரிஹன்மும்பை முனிசிபல் கார்பரேஷன்(BMC) என்று அழைக்கப்படும் மும்பை மாநகராட்சி, சமீபத்தில் பார்க்கிங் கட்டணங்களை மிகவும் அதிகளவில் உயர்த்தி அறிவித்துள்ளது.

புதிதாக உயர்த்தப்பட்ட பார்க்கிங் அபராத கட்டணத் தொகை ரூ.5,000 முதல் ரூ.23,000 வரை நீள்கிறது. நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களுக்கான அபராதத் தொகை, முறையே ரூ.10,000 முதல் ரூ.15,000 வரையாகும்.

பார்க்கிங் விதிமீறலை தடுத்து, அதன்மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவே இந்த புதிய விதிமுறைகள் என்று மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டாலும், இந்தப் புதிய முடிவுக்கு பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

“முதலில் மும்பையில் தரமான சாலைகளை போடட்டும் மற்றும் சரியான பார்க்கிங் வசதிகளை ஏற்படுத்தட்டும். பின்னர், அபராதத் தொகையை உயர்த்திக் கொள்ளட்டும்” என்றும்,

“மும்பை நகரத்தில் ‘No Parking’ சின்னத்தைக் காண்பதே அரிதாக இருக்கையில், எவ்வாறு பார்க்கிங் இடத்தைக் கண்டுபிடிக்க முடியும்? நிலைமை இப்படியிருந்தால், வாகனத்தை நான் எனது சொந்த வீட்டின் அருகில் நிறுத்தி வைத்திருந்தால்கூட அபராதம் போட்டுவிடுவார்கள் போலும்” என்றும் சமூகவலைதளங்களில் எதிர்ப்புகள் பதிவுசெய்யப்பட்டு வருகின்றன.