டெல்லி:

த்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் ஜனவரி 10ந்தேதி முதல் அமலுக்கு வருவதாக அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது. ஆனால், இந்த சட்டத்திற்கான விதிகள் இதுவரை வடிவமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘மோடி தலைமையிலான பாஜக அரசு, வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள இஸ்லாமிய அகதிகளை மீண்டும் சொந்த நாட்டுக்கே திரும்பி அனுப்பும் வகையில்  குடியுரிமை (திருத்த) சட்டம் கொண்டு வந்ததுள்ளது. மேலும்,  பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேச நாடுகளில் இருந்து குடிபெயர்ந்து வந்துள்ள இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தவர்கள், ஜெயின்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.

இந்த திருத்த சட்ட மசோதா கடந்த ஆண்டு (2019)  டிசம்பர் 11ந்தேதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் 2019 குடியுரிமை திருத்த சட்டம் நாட்டில் ஜனவரி 10  (2020, ஜனவரி 10ந்தேதி( முதல் நடைமுறைக்கு வந்தது.

இந்த நிலையில்,  இந்திய குடியுரிமை வழங்கப்படும் சட்டம் (Citizenship Amendment Act) நாட்டில் ஜனவரி 10 முதல் அமலுக்கு வந்தது என்று அரசிதழில் வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் (Union Home Ministry) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “குடியுரிமை (திருத்தம்) சட்டம், 2019 (2019 இன் 47) இன் பிரிவு 1 இன் துணைப்பிரிவு (2) ஆல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்துவதில், இதன் மூலம் 2020 ஜனவரி 10 ஆம் தேதியை மத்திய அரசு நியமிக்கிறது. அன்று முதல் அந்தச் சட்டத்தின் விதிகள் நடைமுறைக்கு வரும்” என்று தெரிவித்துஉள்ளது.

இந்த சட்டத்துக்கு எதிராக  நாடு முழுவதும் கடுமையான போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வரும் வேளையில்,இந்தச் சட்டத்தில் இருந்து ஒரு அங்குலம் கூட பின்வாங்க மாட்டோம் என்று  மத்திய உள்துறை அமைச்சர் தெளிவுபடுத்தி  இருந்த நிலையில், அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த சட்டத்திற்கான விதிகள் என்ன என்பது இன்னும் வடிவமைக்கப்படாத நிலையில், சட்டம் அமலுக்கு வந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.