குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: பீகாரில் முழு அடைப்பு… வன்முறை….

பாட்னா:

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, இன்று பீகாரில்முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில்,பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

மத்தியஅரசு கொண்டுவந்துள்ள புதிய குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்கள் உள்பட நாடு முழுவதும்  பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

வடகிழக்கு மாநிலங்கள் மட்டுமின்றி, உபி. , கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. உ.பி. கர்நாடகாவில் நேற்று நடந்த போராட்டத்தில் கடும் வன்முறை ஏற்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் துப்பாக்கிச்சூட்டுக்கு உ.பி.யில் 11 பேரும், கர்நாடகாவில் 2 பேரும் உயிரிழந்து உள்ளனர்.

இந்த நிலையில்,  குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பீகார் மாநிலத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த ராஷ்டிரிய ஜனதா தளம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

போராட்டத்தையட்டி, பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ராஷ்டிரிய ஜனதா தளம் தொண்டர்கள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். இது பல இடங்களில் வன்முறையாகவும் வெடித்துள்ளது.

சாலைகளில் டயர்களை கொளுத்திப்போட்டு போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருவதால், காவல்துறையினர் அவர்களை விரயடித்து வருகின்றனர். இதனால் பீகாரில் பரபரப்பு நிலவுகிறது.

குடியுரிமை சட்டதிருத்தம் அரசியலமைப்பு எதிரானது என்றும், இது பாஜகவின் பிளவுபடுத்தும் தன்மையை காட்டுவதாகவும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.