குடியுரிமை திருத்த சட்டம்: சென்னை உள்பட பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை:

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக,  சென்னையில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின் றன. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்திலும் எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

சென்னை கிண்டியில்,  பல்வேறு அமைப்பினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு, சர்வாதிகார ரீதியில் குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். இந்தியாவில் ஹிட்லர் ஆட்சி நடப்பதாக உலக நாடுகள் தெரிவித்து உள்ளதாகவும் கூறினார்.

இதேபோல, சென்னை பாரிமுனையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமா வளவன் பங்கேற்ற இந்த போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனால், கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து ராயபுரம் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை சென்டரல் அருகே பல்வேறு மாணவர்கள் சங்கத்தினர் சார்பில் பெரும் பேரணி நடைபெற்றது. பேரணியாக சென்ற மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவையிலும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மதுரை காந்தி அருங்காட்சியகம் முன்பு கண்களில் கருப்பு துணிகளை கட்டி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலை அருகில் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டம்.

நாகை அவுரி திடலில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் எஸ்ஆர்கே பகுதியிலிருந்து தாலுகா அலுவலகம் வரை ஜமாத் அமைப்பினர் மற்றும் அனைத்து கட்சியைச் சேர்ந்தவர்களும் கண்டன பேரணி நடத்தினர். பேரணியைத் தொடர்ந்து தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

மேலும் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் நடைபெற்ற  போராட்டங்கள் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.