டெல்லி:

குடியுரிமை சட்டதிருத்த மசோதா விவகாரம் தொடர்பாக நிதிஷ்குமார் கட்சி எம்.பி.க்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால், கட்சி பிளவுபடும் சூழல் உருவாகி உள்ளது.

பாஜக ஆதரவு கட்சியினா நிதிஷ்குமார் ஐக்கிய ஜனதாதளம், ஏற்கனவே காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பதிலும், நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே இருவேறான கருத்துக்கள் நிலவி வருகின்றன.

இந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதா கடும் எதிர்ப்புக்ளுக்கிடையே, மக்களவையில் 311 எம்.பி.க்கள்  ஆதரவுடன் நிறைவேறியது. இதையடுத்து, இன்று   மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த சமீபத்தில் பிரிந்த சிவசேனா, ஐக்கிய ஜனதாதள கட்சிகளின் எம்.பி.க்கள் இடையே கருத்து வேறுபாடுகள் தலைதூக்கி உள்ளன.

சிவசேனா மக்களவையில், பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்ட நிலையில், மாநிலங்களவையில் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அறிவித்து உள்ளது. அதுபோல, நிதிஷ்குமாரின்  ஐக்கிய ஜனதா தள கட்சியும்  மக்களவையில் ஆதரவு அளித்த நிலையில், தற்போது  கட்சிகள் பூகம்பம் வெடித்துள்ளது.

கட்சியின் மூத்த தலைவர் பவன் கே வர்மாவுக்கும், பிரசாந்த் கிஷோருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.  கட்சி தலைவரும், பீகார் முதல்வருமான நிதீஷ் குமார், இந்த மசோதா குறித்த கட்சியின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாநிலங்களவையில் ஐக்கிய ஜனதா தள கட்சிக்கு 6 எம்பிக்கள் உள்ள நிலையில், மசோதா குறித்து இருவேறான கருத்துக்கள் எம்.பி.க்கள் இடையே நிலவுவதால்,  கட்சியில் பிளவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற குறைந்தது 128 எம்பிக்களின் ஆதரவு தேவை. மாநிலங்களவையில் பாரதிய ஜனதாவுக்கு 83 எம்பிக்கள், அதன் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் (6), சிரோன்மணி அகாலிதள கட்சி (3), மாநில கட்சிகளான அதிமுக (11). பிஜூ ஜனதா தள கட்சி (7), ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (2) எம்பிக்கள் உள்ளனர்.

காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மக்களவையில், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி மசோதாவுக்கு எதிராக வாக்களித்த நிலையில், எதிர்க்கட்சி கள் தரப்பில் 112 வாக்குகள் உள்ளன.

இந்த நிலையில்,  ஐக்கிய ஜனதா தள கட்சியின் பவன் கே வர்மா டிவிட்டர் பதிவில், மக்களவை யில், ஐக்கிய ஜனதா தள கட்சி இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் கட்சி தலைமை மாநிலங்களவையில், இந்த மசோதா குறித்த நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த மசோதா, அரசியல் சட்ட அமைப்பிற்கு எதிரானது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு உதாரணமாக திகழும் இந்தியாவில், பிரிவினைவாதத்தை தூண்டுவதாக இந்த மசோதா அமைந்துள்ளது. ஐக்கிய ஜனதா தள கட்சியின் கோட்பாடுகளுக்கு எதிராக இந்த மசோதா அமைந்துள்ளது. மகாத்மா காந்தி இருந்திருந்தால், நிச்சயமாக இந்த மசோதாவை நிராகரித்திருப்பார் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

பிரசாந்த் கிஷோர் தனது டிவிட்டர் பதிவில் , மக்களவையில், இந்த மசோதாவை ஐக்கிய ஜனதாதள கட்சி ஆதரவு அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நாட்டு மக்களை அவர்கள் சார்ந்த மதங்களின் பேரால் இது பிரிக்க நினைக்கிறது. கட்சியின் அடிப்படை சிந்தாந்தங்கங்களுக்கு எதிராக உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள  ஐக்கிய ஜனதா தள கட்சியின் செய்தித் தொடர்பாளர், கட்சியின் நிலைப்பாடு எம்பி ராஜிவ் ரஞ்ஜன் சிங் மூலம் மக்களவையில் எடுத்துரைக்கப்பட்டது. சிறுபான்மையினர் பாதிக்கப்படுவர் என்ற தங்கள் கட்சியின் கேள்விக்கு, மத்திய அமைச்சர் அமித் ஷா, எவ்வித பாதிப்பு் ஏற்படாது என்று பதிலளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்