அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் 3 நாட்களில் 1540 புதிய கொரோனா தொற்றுகளும், 13 மரணங்களும் பதிவாகி இருக்கின்றன.

நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்று குஜராத் மாநிலத்திலும் வேகமாக பரவி இருக்கிறது. அம்மாநிலத்தில் கடந்த 12 நாட்களாக கொரோனா பலி எண்ணிக்கை இரட்டை இலக்கத்தை தொட்டிருக்கிறது. இந்த மாதத்தின் முதல் 3 நாட்களில் 42 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர்.

கிட்டத்தட்ட 64 சதவீதம் உயிரிழப்பு அகமதாபாத் நகரில் பதிவாகி இருக்கிறது. அதாவது அங்கு 27 பேர் பலியாகி இருக்கின்றனர். நேற்றைய தினத்தில் மட்டும் மாநிலத்தில் 1540 புதிய கொரோனா தொற்றுகளும், 13 உயிரிழப்புகளும் நிகழ்ந்திருப்பதாக மாநில அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, ஒட்டு மொத்தமாக மாநிலத்தின் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 14 ஆயிரத்து 309ஐ எட்டி உள்ளது.

பலி எண்ணிக்கை 4 ஆயிரத்து 31 ஆக இருக்கிறது. அகமதாபாத்தில் 336, சூரத் 246, வதோதரா 184, ராஜ்கோட் 141, காந்திநகர் 72 என உயிரிழப்புகள்  பதிவாகி உள்ளன. பகரூசா, பஞ்ச மஹால் பகுதிகளில் தலா 23, சபர்காந்தா 22, ஆனந்த் மற்றும் பாவ்நகர் பகுதியில் தலா 20, நர்மதா 17, மஹிசாகர் 16, சுரேந்திரகர் 15 என்று உயிரிழப்புகள் பதிவாகி இருக்கின்றன. நேற்று மட்டும் உயிரிழந்த 13 பேரில் 9 பேர் அகமதாபாதிலும், சூரத்தில் 2 பேரும், ராஜ்கோட் மற்றும் வதோதரா நகரங்களில் தலா ஒருவரும் பலியாகி இருக்கின்றனர்.

அகமதாபாத் மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவல்படி, கிட்டத்தட்ட 2.6 லட்சம் கொரோனா தொற்றுகள் ஒட்டுமொத்தமாக உள்ளன. மேலும் 9 புதிய நோய் கட்டுப்பாட்டு பகுதிகளும் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.