பெங்களூரு:

நாடு முழுவதும் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், பெங்களூரில் ஏற்கனவே 500 இடங்களில் காற்று சுத்தப்படுத்தும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 44ஆயிரம் காற்று சுத்தப்படுத்தும் இயந்திரம் பொருத்த  முடிவு செய்யப்பட்டு உள்ளது.

காற்று மாசுவினால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. இங்கு தொடர்ந்து காற்று மாசு அதிகரித்தபடி இருக்கிறது. அதுபோல  இந்தியாவில் மரணம் அடைபவர் களில் 8-ல் ஒருவர் காற்று மாசுவினால் பாதிக்கப்பட்டு உயிர் இழக்கிறார்கள் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. நாட்டில் 77 சதவீத மக்கள் மோசமான காற்று மாசுவை சந்திக்கும் நிலை இருக்கிறது.

காற்று மாசை அளவிடும் முறையில் 2.5 மைக்ரான்கள் இருந்தால், அது மோசமாக பாதிக்கப்பட்டு உள்ள இடமாக அறிவிக்கப்படும் நிலையில், “2030 ஆண்டுக்குள் 10 மைக்ரான் அளவுக்கு மாசளவு உச்சத்தை தொடும் என அஞ்சப்படுகிறது. இதன் காரணமாக காற்று மாசை குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

கார்டன் சிட்டியான கர்நாடக மாநிலம் காற்று மாசினால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தலைநகர் பெங்களூரில், தினமும்  85 லட்சம் வாகனங்கள் வெளியிடும் புகை காரணமாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் சுகாதாரப் பிரச்சினையில் இருந்து நகரை காப்பாற்ற, ரூ. இரண்டரை லட்சம் செலவில் காற்று சுத்தப்படுத்தும் இயந்திரங்கள் பொதுஇடங்களில் பொருத்தப்பட்டு உள்ளது.

கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி திட்டத்தின்கீழ் பெங்களூருவைச் சேர்ந்த காப்பரேட் நிறுவனம் ஒன்று இந்த காற்று சுத்தப்படுத்தும் இயந்திரத்தை அமைத்து கொடுத்துள்ளது.

இந்த நிலையில், பெங்களூரு மாநகரம் முழுவதும் மேலும் 44,000 காற்று தூய்மைப்படுத்தும் இயந்திரங்கள்  சாலையின் சந்திப்புகள் மற்றும் முக்கிய இடங்களில் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.