சென்னை: கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட, சிவில் நீதிபதி முதன்மை தேர்வு அக்டோபர் 17 மற்றும் 18ந்தேதிகளில் நடைபெறும் என  டிஎன்பிஎஸ்சி அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள  சிவில் நீதிபதி காலிப் பணியிடங்கள், தேர்வுகள் மூலம்  நிரப்பப்பட உள்ளன.  முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த கட்டமாக முதன்மைத் தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

முதன்மைத் தேர்வில் பெற்ற மதிப்பெண், நேர்முகத் தேர்வு மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண்கள் தரவரிசைப்படுத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இதன் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும்.

முதன்மைத் தேர்வில், வாதங்களை மொழிமாற்றும் திறமை, வழக்கின் முக்கிய அம்சங்கள், உத்தரவுகள், தீர்ப்புகள், ஆங்கிலத்தில் உள்ள ஆவணங்கள் உள்ளிட்டவற்றை தமிழிலும், தமிழில் உள்ளவற்றை ஆங்கிலத்திலும் மொழிமாற்றம் செய்யும் திறமை சோதிக்கப்படும்.

தேர்வில் மொத்தம் 3 தாள்கள் உள்ளன. இந்த தேர்வு சென்னையில் மட்டுமே நடைபெறும். மொத்த மதிப்பெண்கள் 400.

ஏற்கனவே முதல்நிலை தேர்வு முடிவடைந்த நிலையில்,  முதன்மைத் தேர்வு மார்ச் மாதம் இறுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில்,  சிவில் நீதிபதி பதவிக்கான முதன்மைத் தேர்வு அக்டோபர் 17, 18-ல் சென்னையில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பில், ‘‘உரிமையியல் (சிவில்) நீதிபதி பணியில் உள்ள 176 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வு 2019, நவம்பர் 24-ல் நடைபெற்றது.

கொரோனாவால் தள்ளிவைக்கப்பட்ட முதன்மைத் தேர்வு அக்டோபர் 17, 18-ல் சென்னை மையத்தில் மட்டும் நடத்தப்பட உள்ளது.

இதற்கான ஹால்டிக்கெட் விரைவில் வெளியிடப்படும்’’.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.