சிவில் சர்வீஸ் தேர்வை ஒத்திவைக்க முடியாது! உச்சநீதி மன்றத்தில் யுபிஎஸ்சி தகவல்…

--

டெல்லி: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு மற்றும் இந்திய  பொருளியர் தேர்வுக்கான தேதிகள், கொரோனா தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு, மீண்டும் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதை ஒத்திவைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தேர்வை ஒத்தி வைக்க முடியாது என யுபிஎஸ்சி திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.

2021ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு மே 31 ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக, தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.  பின்னர், புதிய தேதி அறிவிக்கப்பட்டது.  அதன்படி  யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வை வருகிற அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து நடைபெறும் முதன்மைத் தேர்வு 2021 ஜனவரி மாதம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல இந்திய பொருளியல் தேர்வுகள் அக்டோபர் 16 ஆம் தேதியும் நடைபெறும்  என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  யுபிஎஸ்சி தேர்வர்கள் வழக்கறிஞர் அலக் அலோக் ஸ்ரீவாஸ்தவா மூலம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுவில்,  நாட்டில் கொரோனாவின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது என்றும் பல பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பிரச்சினைகள் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில் தேர்வு சில மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட வேண்டும் என கோரப்பட்டிருந்தது. மேலும்,  நாடு முழுவதும் 72 தேர்வு மையங்களில் சுமார் 6 லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதயுள்ளனர். அத்தகைய சூழ்நிலையில், அவர்களின் உடல்நிலை கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்படலாம் எனவே தேர்வை 2-3 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்த மனுமீதான விசாரணை  உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ. எம். கன்வில்கர் மற்றும் சஞ்சீவ் கண்ணா அமர்வு விசாரித்து வருகிறது. இன்றைய விசாரணையின்போது,  யுபிஎஸ்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேர்வு மே மாதம் நடைபெற இருந்தது. ஆனால், கொரோனா காரணமாக செப்டம்பர் 30 தேதி  ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், அக்டோபர் 4 ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  தற்போதைய நிலையில், தேர்வை மேலும் ஒத்திவைக்க முடியாது என தெரிவித்தார்.
இதையடுத்து,  தேர்வை ஏன் ஒத்திவைக்க முடியாது என்ற காரணங்களை பட்டியலிட்டு, பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யுமாறு யுபிஎஸ்சி -க்கு உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 30 ம் தேதிக்கு ஒத்திவைத்தது.