நானே ஜம்மு காஷ்மீர் செல்வேன்! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

டில்லி:

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட ஜம்மு காஷ்மீரில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில்,  தேவைப்பட்டால் நானே ஜம்மு காஷ்மீர் சென்று ஆய்வு செய்வேன் என்று தலைமை நீதிபதி  நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்தார்.

 

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ நீக்கப்பட்ட நிலையில், அங்கு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் காவல்துறை யினர், ராணுவத்தினர் என ஏராளமானோர் குவிக்கப்பட்டு உள்ளனர். அங்கு செல்ல அரசியல் கட்சியினருக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் இந்த எதேச்சதிகார நடவடிக்கையை கண்டித்து, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள்  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விசாரணையின்போது,  மத்திய அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஆஜராகி, காஷ்மீரின் தற்போதைய நிலவரம் மற்றும் மத்திய அரசின் நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கினார்.

மேலும், காஷ்மீரில் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருவதாகவும், ஊடகங்களுக்கு தடை எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.

இதையடுதுது பேசிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்,  ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலையை கொண்டு வருவதை  மத்திய அரசும் ஜம்மு காஷ்மீர் நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் முழுமையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அதேசமயம் தேசிய பாதுகாப்பையும் மனதில் கொள்ள வேண்டும் என்றார்.

அங்குள்ள மக்கள், அந்த மாநிலத்தின்  உயர் நீதிமன்றத்தை அணுக முடியாத நிலை இருப்பதாக வும், அங்கு . அசாதாரண நிலை நிலவுவதாக தகவல் வருகிறது. எனவே, அவசியம் ஏற்பட்டால் நானே ஜம்மு காஷ்மீர் சென்று ஆய்வு செய்வேன் என்று கூறினார்.

மேலும்,  ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து செப்டம்பர் 30-ம் தேதிக்குள் மத்திய அரசும், ஜம்மு காஷ்மீர் நிர்வாகமும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனுக்கள் மீதான அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 30-ம் தேதி நடைபெறும் என்றும் தலைமை நீதிபதி அறிவித்தார்.