டெல்லி:

யோத்தி வழக்கு தொடர்பாக, சுமார் இரண்டு மாத கடின உழைப்புக்கு பிறகு, உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வு இன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது.

இதையடுத்து, தன்னுடன் சேர்ந்து உழைத்த சக நிதிபதிகளுக்கு இன்று இரவு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இரவு விருந்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் புதிய தலைமை நீதிபதியாக பதவி ஏற்க உள்ள பாப்டேவின் பதவி உயர்வுக்காகவும் இந்த விருந்து நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான பிரச்சினை  500ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த விவகாரத்தில் ஒருமித்த தீர்வை ஏற்படுத்தும் நோக்கில் உச்சநீதி மன்றம் மத்தியஸ்தர் குழுவை நியமித்து விசாரணை நடத்தியது. ஆனால், அதில் எந்தவொரு முடிவும் எடுக்க முடியாத நிலையில், உச்சநீதி மன்றமே விசாரணையை மேற்கொண்டது.

தொடர்ந்து சுமார் 40 நாட்கள் கூடுதல் நேரத்துடன் விசாரணை நடத்தியதுடன், அயோத்தி நிலம் தொடர்பான தொல்லியல்துறை அறிக்கைகள் மற்றும் விசாரணையின்போது தாக்கல் செய்யப்பட்ட ஆவனங்களை தொடர்ந்து, தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர்.

அதைத்தொடர்ந்து இன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு  வழங்கியது.

ரஞ்சன் கோகாய்  நவம்பர் 17-ம் தேதி பதவி ஓய்வுபெற உள்ள நிலையில், தன்னுடன் அயோத்தி வழக்கில் பணியாற்றிய சக நீதிபதிகளுக்கு இன்று இரவு தாஜ் மான்சிங் ஓட்டலில் விருந்தளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.