பாஜக கூட்டத்தில் கைகலப்பு மற்றும் நாற்காலி வீச்சு

மானாமதுரை

மானாமதுரையில் நடந்த பாஜக கூட்டத்தில் கைகலப்பு மற்றும் நாற்காலி வீச்சு நடந்துள்ளது.

நேற்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் பாஜக பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது.    அந்தப் பகுதியில் முன்னாள் நிர்வாகிகளுக்கும் இந்நாள் நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.   முன்னாள் நிர்வாகியான கருப்பையா உள்ளிட்டோரும் இன்னாள் நிர்வாகிகளான கண்ணன் மற்றும் சங்கர சுப்ரமணியண் ஆகியோர் தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் வாக்குவாதமும் ஆரம்பித்தது.  பிறகு இந்த வாக்குவாதம் முற்றிப் போனது.   இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர்.   ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள ஆரம்பித்தனர்.  அப்போது ஒரு தரப்பினர் திடீரென அங்கிருந்த நாற்காலியை வீசினார்கள்.

பதிலுக்கு மற்றொரு தரப்பினரும் நாற்காலிகளை வீசி தாக்குதல் நடத்தினர்.   மண்டபமே இந்த தாக்குதலால் களேபரம் ஆனது.   இந்த தகவல் அறிந்து அங்கு வந்த மானாமதுரை காவல்துறையினர் கலவரத்தை அடக்கி உள்ளனர்.  அத்துடன் இரு தரப்பிலும் பேச்சு வார்த்தை நடத்திய காவல்துறையினர் கூட்டத்தினரை சமரசம் செய்துள்ளனர்.