திரிபுரா : ஆளும் பாஜகவை எதிர்க்கும் கூட்டணிக் கட்சி

கர்தலா

திரிபுராவில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள திரிபுரா மக்கள் முன்னணிக் கட்சி இரண்டே மாதத்தில் எதிர்க்கொடி தூக்கி உள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு திரிபுரா மாநிலத்தில் பாஜக தனது கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை பிடித்தது.   கூட்டணிக் கட்சிகளில் திரிபுரா மக்கள் முன்னணிக் கட்சியும் ஒன்றாகும்.   திரிபுரா பழங்குடியினர் மாவட்டக் குழுவின் சார்பில் மாநிலக்குழுவுக்கு உறுப்பினர்கள் சேர்க்கை பணி நிகழ்ந்து வருகிறது.  இந்தக் குழு தன்னுரிமை பெற்றக் குழுக்களில் ஒன்றாகும்.

இந்தக் குழுவில் 60% உறுப்பினர்கள் மக்கள் முன்னணிக் கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்க வேண்டும் என அந்தக் கட்சி கோரிக்கை விடுத்தது.   ஆனால் பாஜக அரசு தகுதி உள்ளவர்களாக இருப்பவர்கள் மட்டுமே தேர்ந்திடுக்கப்படுவார்கள் எனவும் இதில் கட்சிக்கு முன்னுரிமை இல்லை எனவும் மறுத்து விட்டது.  இதனால் இரு கட்சிகளுக்கும் இரண்டே மாதங்களில் இடைவெளி ஏற்பட்டுள்ளது.

மக்கள் முன்னனிக் கட்சியின் தொண்டர்கள் இதை ஒட்டி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.   சாலை மறியல் போன்ற  போராட்டங்களில் இந்தக் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.   சில இடங்களில் இந்த போராட்டத்தினால் வன்முறை வெடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

திரிபுரா முதல்வர் தற்போது அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.   இரு தரப்பிலிருந்தும் மாநிலத்தில் அமைதியை உருவாக்கும் முயற்சியில் கட்சி பிரமுகர்கள் ஈடுபட்டுள்ளனர்.   விரைவில் மக்கள் முன்னணிக் கட்சியின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளது மாநிலத்தில் சிறிது அமைதியை ஏற்படுத்தி உள்ளது.