மதிமுக, நாம் தமிழர் கட்சியினரிடையே திருச்சி விமான நிலையத்தில் மோதல்


திருச்சி:

திருச்சி விமான நிலையத்தில் மதிமுக, நாம் தமிழர் கட்சி தொண்டர்களிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக இரு தரப்பினரும் ஒருவரை மாற்றி ஒருவர் அடித்துக்கொண்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் விமானம் மூலம் இன்று  திருச்சி வந்தனர். அவர்களை வரவேற்க வந்த இரு கட்சி தொண்டர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இரு தரப்பினரும் தங்களது தலைவர்களை வாழ்த்தி கோஷமிட்டுக்கொண்டிருந்தனர். இந்நிலையில், சிறிது நேரத்தில் இரு கட்சி தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. தாங்கள் கொண்டு வந்திருந்த கட்சி கொடிகளின் கம்புகளை வைத்து ஒருவரை மாற்றி ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

இந்த மோதலில் நாம் தமிழர் கட்சி தொண்டர் கரிகாலன் என்பவருக்கு கால் எலும்பு முறிந்தது. மேலும் மற்றொரு தொண்டருக்கு வலிப்பு வந்து மயங்கி விழுந்தார்.

இதையறிந்ததும் விமான நிலைய மத்திய பாதுகாப்பு படை போலீசார் மற்றும் கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியய்யா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோதலை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் காயமடைந்த 2பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டதையடுத்து இரு கட்சி தொண்டர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மோதலால் அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்பானது.