தமிழக பள்ளி கல்லூரிகளில் பாரம்பரிய பொங்கல் கொண்டாட்டம்…

சென்னை:

மிழர்களின் பாரம்பரிய பண்டிகையான அறுவடை திருநாளான  பொங்கல் பண்டிகை வரும் 15ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை வரவேற்கும் விதமாக  தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் மற்றும்  பள்ளிகளில் பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் சென்னையில் பல்வேறு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளிலும் கடந்த சில நாட்களாக  பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.

இன்று போரூர் வெங்கடேஷ்வரா  ஓமியோபதி மருத்துவக் கல்லூரியில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.  கல்லூரி மாணவ மாணவிகள் திரளாக கலந்துகொண்டு பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டையும், பெண்கள் தாவனி, சேலைகளும் அணிந்து கொண்டு பொங்கலை பொங்கி கொண்டாடினார்.

சென்னை பூந்தமல்லியில் அரபிந்தோ பள்ளியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில், ஏராளமான மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடையணிந்து பங்கேற்ற னர். புதுப்பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்த அவர்கள், தமிழர்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளான ஒயிலாட்டம், மயிலாட்டம் ஆகியவற்றிலும் பங்கேற்றனர்.

அதுபோல சென்னையில் உள்ள வேளாங்கண்ணி குழும பள்ளிகளிலும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் போட்டிகளான   உரியடி, ரங்கராட்டினம், மாட்டுவண்டி, மயிலாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம் சிலம்பம் அசத்தலாக நடைபெற்றது.  இவ்விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் ஒன்று கூடி பொங்கல் வைத்து கொண்டாடினர், 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வேட்டி சேலை அணிந்து வந்திருந்தனர்.

அதுபோல காஞ்சிபுரம் மாவட்டம் பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த பாரம்பரிய நிகழ்ச்சில் வெளிமாநிலத்தை சேர்ந்த மாணவ மாணவிகளும் கலந்துகொண்டு பொங்கல் பொங்கி மகிழ்ந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும்  தனியார் கல்லூரி வளாகத்தில் வயல்வெளிக்கு அருகே மாதிரி கிராமம் அமைத்து நடைபெற்ற பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பொங்கல் பொங்கியபோது அங்குள்ள பெண்கள் குலவையிட்டு அதகளப்படுத்தினர்.  அத்துடன் மயிலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் கரகாட்டம் ஆகிய நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள ஸ்ரீசக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மாணவிகள் பாரம்பரிய உடைகள் அணிந்து  பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர். மேலும் பாரம்பரிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.