டில்லி

நேற்று நடைபெற்ற சட்டக்கல்விக்கான நுழைவுத் தேர்வில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளால் பல குழறுபடிகள் ஏற்பட்டுள்ளன.

மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வாக நீட் உள்ளது போல சட்டக்கல்லூரிக்கான நுழைவுத் தேர்வாக கிளாட் 2018 (CLAT 2018) அமைந்துள்ளது.  இந்த தேர்வு நாடெங்கும் பல தேர்வு மையங்களில் நேற்று நடைபெற்றது.    ஆன்லைன் தேர்வாக நடைபெற்ற இந்தத் தேர்வில் பல மையங்களில் குழறுபடிகள் ஏற்பட்டுள்ளன.

அனைத்து தேர்வு மையங்களிலும் ஒரே நேரத்தில் இந்த தேர்வுகள் ஆரம்பிக்கும் என குறிப்பிடப் பட்டிருந்தது.   ஆனால் பல இடங்களில் தொழில்நுட்பக் கோளாறுகளால் இந்த தேர்வு ஆரம்பிப்பதற்காக ஒரு மணி நேரம் மாணவர்கள் காத்திருக்க நேர்ந்துள்ளது.

உதராணமாக நொய்டாவில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் தேர்வு நிர்வாக அதிகாரி கடவுச்சொல்லை (பாஸ்வர்ட்) மறைந்து விட்டதால் அதை மீட்டெடுக்க சுமார் ஒரு மணி நேரம் ஆனது.  அதன் பிறகு பல கணினிகள் இடையில் சரியாக வேலை செய்யாததால் தேர்வு எழுதிய மாணவர்கள் ரிசெட் செய்ய நேர்ந்தது.   அதனால் அவர்கள் ஏற்கனவே பதில் அளித்த கேள்விகளுக்கும் மீண்டும் பதில் அளிக்க நேர்ந்தது.  அனைத்து கணினிகளின் நேரமும் தவறாக இருந்ததால் மாணவர்கள் பத்து நிமிடம் முன்பாகவே தேர்வுகளை முடிக்க நேர்ந்துள்ளது.

தானே நகர மையத்தில் மாணவர்கள் கணினியை ஆன் செய்து பல நிமிடங்களுக்கு திரையில் எதுவும் தெரியவில்லை.  அவர்கள் மீன்டும் ஓரிருமுறை கணினியை ஆன் செய்த பின்னரே திரையில் வினா/விடைத்தாட்கள் தெரிய வந்தது.   மேலும் இந்த நேரமும் தேர்வு நேரமாக கணினி கணக்கிட்டதால் மாணவர்கள் நேரமின்மையால் துயருற்றுள்ளனர்.  இது போல பல தேர்வு மையங்களில் நேரம் ஒவ்வொரு விதமாக கணக்கிடப்பட்டு சுமார் 10 நிமிடங்கள் மாணவர்களுக்கு நேர இழப்பு ஏற்பட்டுள்ளது

இது குறித்து தேர்வு மையங்களின் அதிகாரிகளில் சிலர், “ஏற்கனவே இந்த தேர்வுக்கான மென்பொருட்கள் டி சி எஸ் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டு வந்தன.  தற்போது இந்த மென்பொருட்களை சிஃபி என்னும் நிறுவனம் குறைந்த விலைக்கு அளித்து வருகிறது.    இது போன்ற தொழில் நுட்பக் கோளாறுகள் இந்த வருடம் மட்டுமே நிகழ்ந்துள்ளது.    மொத்தத்தில்  இந்த வருட நுழைவுத் தேர்வு மாணவர்களுக்கு பயங்கரமாக ஆகி விட்டது” எனத் தெரிவித்துள்ளனர்