ஐசிஐசிஐ பெண் அதிகாரியின் குற்றமற்றவர் சான்றிதழ் திரும்ப பெறப்பட்டது.

டில்லி

சிஐசிஐ வங்கியின் பெண் தலைமை அதிகாரி சந்தா கோச்சார் குற்றமற்றவர் என அளிக்கப்பட்ட சான்றிதழ் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு வீடியோகோன் நிறுவனத்துக்கு ஐசிஐசிஐ வங்கி ரூ. 3250 கடன் அளித்தது. அந்த கடனை வீடியோகோன் நிறுவனம் திருப்பித் தராததை ஒட்டி தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த கடனை பெறுவதற்கு முன்பு வீடியோகோன் நிறுவனத்தின் துணை நிறுவனத்தை ஐசிஐசிஐ வங்கியின் தலைமை அதிகாரி சந்தா கோச்சாரின் கணவருக்கு அளிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.

இதை ஒட்டி எழுந்த சர்ச்சையினால் சந்தா கோச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு மீண்டும் அவர் பணியில் அமர முடிவு செய்து விண்ணப்பித்தார். ஐசிஐசிஐ வங்கி இது குறித்து உள்கட்ட விசாரணையை நடத்த பிரபல சட்ட நிறுவனமான சிரில் அமர்சந்த் மங்கள்தாஸ் நிறுவனத்தின் உதவியை நாடியது.

அந்த சட்டநிறுவனம் அப்போது சந்தா கோச்சார் குற்றமற்றவர் என சான்றிதழ் அளித்ததாக ஐசிஐசிஐ வங்கி தெரிவித்தது. அதை ஒட்டி அவர் மீண்டும் பணியில் சேரலாம் எனவும் அவர் மீது முழு நம்பிக்கை உள்ளதாகவும் ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் சர்மா கடந்த மார்ச் மாதம் தெரிவித்தார்.

ஐசிஐசிஐ வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில், “சட்ட நிறுவனமான சிலில் அமர்சந்த் மங்கள் தாஸ் நிறுவனம் சந்தா கோச்சாருக்கு தாம் அளித்த குற்றமற்றவர் என்னும் சான்றிதழை திரும்பப் பெறுவதாகவும் அது இனி செல்லாது எனவும் அறிவித்துள்ளது.

இந்த மாதம் 4 ஆம் தேதி வங்கியில் இருந்து சந்தா கோச்சார் விலகி முன் கூட்டியே பணி ஓய்வு பெற விண்ணப்பித்து இருந்தார். அவருடைய விண்ணப்பத்தை வங்கி நிர்வாகம் ஏற்றுக் கொள்கிறது. மேலும் அவர் மீதுள்ள விசாரணை முடியும் வரை அவருக்கு அளிக்க வேண்டிய சில சலுகைகள் நிறுத்தி வைக்கப்பட்டுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.