டில்லி

டில்லியில் நடந்த விவசாய போராட்டம் தொடர்பான டூல் கிட் பகிர்ந்த வழக்கில் பெண் சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி கைது செய்யப்பட்டுள்ளார்.

பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டில்லியில் விவசாயிகள்  சுமார் 75 நாட்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  மத்திய அரசு இவர்கள் கோரிக்கையை ஏற்கப் பிடிவாதமாக மறுத்து வருவதால் போராட்டம் தொடர்ந்து வருகிறது.  இந்நிலையில் போராட்டத்தின் ஒரு பகுதியாக டில்லியில் குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர்கள் பேரணியில் கடும் வன்முறை வெடித்தது.

இந்த வன்முறையை காலிஸ்தான் ஆதரவாளர்கள் தூண்டியதாக டில்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  குறிப்பாக இதற்கு டிவிட்டரில் உலாவிய டூல் கிட் ஆதாரமாக உள்ளதாக டில்லி காவல்துறையினர் தெரிவித்தனர்.  இந்த டூல் கிட்டை சூழல் இயல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் தனது பக்கத்தில் பகிர்ந்ததால் அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

மேலும் பெங்களூருவைச் சேர்ந்த 25 வயதான திஷா ரவியை டில்லி காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு இன்று கைது செய்துள்ளது.  இவர் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார்.   இவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டுள்ளார்.  அவரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.