பருவ நிலை மாற்றத்தால் கருச்சிதைவு ஏற்படும் அபாயம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

--

டாக்கா:

பருவ நிலை மாற்றத்தால் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் உள்ளது, என விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர்.

பூமியின் வெப்பம் அதிகரிப்பதால், கடல் மட்டம் உயர்வது, பனி மலைகள் உருகுவது போன்ற பல்வேறு பருவநிலை பாதிப்புகளைப் பற்றி பார்த்திருக்கிறோம். பூமியின் வெப்பம் உயர்ந்துகொண்டே போவதால் மக்கள் உடல் நலம் பெரிதும் பாதிப்படையும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆனால் தற்போது, பருவநிலை மாற்றத்தால் கருச்சிதைவும் ஏற்படும் ஆபத்து இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

வங்கதேச கடலோர கிராமங்களில் வசிக்கும் பெண்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் இந்த அதிர்ச்சி தகவல் கண்டுபிடிக்கப்பட்டதாக பிபிசி தெரிவித்துள்ளது.

வயிற்றுப்போக்கு தொடர்பான பங்களாதேஷ் அனைத்துலக ஆய்வு நிலைய அறிவியலாளர் டாக்டர் மன்சூர் ஹனிஃபி கூறுகையில், கடற்கரைக்கு மிக அருகில் வசிக்கும் பெண்களிடையே கருச்சிதைவுகள் ஏற்படும் சாத்தியம் அதிகம், என்றார்.

சக்காரியா, மத்லாப் வட்டாரங்களில் வாழும் கர்ப்பிணிகள் ஆய்வுக்காகக் கண்காணிக்கப்பட்டனர். இதில், சக்காரியாவில் 11 சதவீதமும், மத்லாப்பில் 8 சதவீதமும் கருச்சிதைவுச் சம்பவங்கள் ஏற்படுவதாகத் தெரியவந்துள்ளது.

பருவநிலை மாற்றத்தால் கடல் மட்டம் உயரும் போது உப்புத்தன்மை மிக்க கடல் நீர், நன்னீர் நதிகளிலும் ஓடைகளிலும் கலக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. கடல்நீர் உட் புகுந்து நிலத்தடி நீரும் உப்புக் கரிக்கத் தொடங்குகிறது.

உப்பு மிகுந்த தண்ணீரைக் குடிப்பதால் கர்ப்பிணிகளுக்குக் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

பெரியவர்கள், நாளொன்றுக்கு 5 கிராமுக்கும் குறைவான உப்பையே உட்கொள்ளலாம் என்று உலகச் சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. ஆனால், சக்காரியா கிராமத்தில் வசிக்கும் மக்கள் 16 கிராம் வரையிலான உப்பை உட்கொள்கின்றனர்.

மிதமிஞ்சிய உப்பை உட்கொள்வதால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது, பக்கவாதம் மற்றும் இதயத் தாக்குதல்களின் ஆபத்து அதிகரிக்கிறது, மேலும் கர்ப்பிணிப் பெண்களி டையே, கருச்சிதைவுகள் மற்றும் ப்ரீக்ளாம்ப்ஸியாவும் ஏற்படுகிறது.

கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பிற நாடுகளைச் சேர்ந்த கர்ப்பிணிகளும் இதுபோன்ற பாதிப்புக்கு உள்ளாகக் கூடுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.