உலகிற்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் பருவநிலை உச்சி மாநாடு..!

கான்பெரா: உலகின் பெரிய சவாலாக உள்ள பருவநிலை மாற்றத்தால், புவியின் சராசரி வெப்பநிலை இன்னும் 1.5 டிகிரி அளவிற்கு அதிகரித்தால், கடலடிப் பாறைகள் முற்றிலும் அழிந்து கடல்நீர் மட்டம் பல மீட்டர்களுக்கு உயரக்கூடிய பேரபாயம் நேரும் என்று பருவநிலை தொடர்பான உச்சி மாநாட்டில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது ஆஸ்திரேலியாவை படுத்தி எடுத்துவரும் காட்டுத்தீ, அதற்கோர் தொடக்கம்தான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் பருவநிலை தொடர்பான உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கூறப்படுவதாவது; அன்டார்டிகா, ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் பகுதிகள் காலநிலை மாற்றத்தால் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன. தற்போது, உயிரினங்களின் தாங்கும் திறனைத் தாண்டி புவி வெப்பமடைந்து வருகிறது.

குறிப்பாக, உலகளாவிய சராசரி வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்னும் 1.5 டிகிரி செல்சியசிற்கு அதிகமாக வெப்பநிலை பதிவானால், கடலடிப் பாறைகள் முற்றிலும் அழிந்துவிடும். அப்படியான நிலை வந்தால், கடல் மட்டம் பல மீட்டர்களுக்கு உயரும்.

இதனால், அமேசான், கிரீன்லாந்து போன்ற கரிமத்தைக் கிரகித்து வைத்துள்ள பகுதிகள் அழிந்து, மில்லியன் கணக்கிலான டன் கரிமத்தை வளிமண்டலத்தில் வெளியிடும். ஆஸ்திரேலிய காட்டுத்தீ மனித நாகரிகத்தின் முடிவுக்குக் கிடைத்த ஓர் எச்சரிக்கை.

கொதித்துக்கொண்டிருக்கும் பூமியில், உயிருடன் இருப்பதற்கும் மரணிப்பதற்கும் நடுவிலான இடைவெளியை இந்தக் காட்டுத்தீ சேதங்கள் வெளிப்படுத்துகின்றன. அதிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள உடனடி நடவடிக்கை தேவை என்று கூறப்பட்டுள்ளது.

“காலநிலை மாற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவர, தேசியளவில் மட்டுமின்றி உலகளவில் அனைத்து நாடுகளும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் இந்தப் பேரபாயத்திலிருந்து தப்பிப் பிழைக்க முடியும். மாறாக, காலநிலை மீது அக்கறை கொண்டு பேசும் தன்னார்வலர்களையும் ஆய்வாளர்களையும் ‘முட்டாள்களின் வாரிசுகள்’ என வல்லரசு நாடுகள் கேலி செய்வதானது அபத்தத்தின் உச்சமே தவிர வேறொன்றுமில்லை” என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளனர் நிபுணர்கள்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-