மனிதர்களிடம் கொரோனா தடுப்பு மருந்துகள் ஆய்வில் உள்ளன: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்

டெல்லி: கொரோனா மருந்து கண்டுபிடிக்கும் வகையில் 1000 தன்னார்வலர்களிடம் 2 மருந்து நிறுவனங்கள் ஆய்வுகளை நடத்தி வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

உலகையே ஆட்டி படைக்கும் இந்தியாவில் கொரோனாவுக்கு 2 தடுப்பு மருந்துகள் தற்போது ஆராய்ச்சி அளவில் இருக்கின்றன. முழுமையாக  இந்தியாவின் முயற்சியில் நடைபெறுகிறது.

ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது.

2 கட்டங்களாக மனிதர்களுக்கு மருந்தைச் செலுத்தி பரிசோதிக்க பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு  சில நாட்களுக்கு முன் மத்திய சுகதாதாரத்துறை அமைச்சகம், ஐசிஎம்ஆர் ஆகியவை அனுமதி வழங்கின.

இந்த 2 தடுப்பு மருந்துகளுமே முறையான ஆய்வுக்கு உட்படுத்தி விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு கொடுத்து சோதனை செய்ய உரிய அனுமதி பெற்றுள்ளன. மருத்துவ சோதனைக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி உரிய அனுமதி வழங்கியுள்ளார்.

இதுகுறித்து ஐசிஎம்ஆர் நிர்வாகி பல்ராம் பார்கவா கூறியதாவது:இந்தியாவில் கொரோனாவுக்கு 2 தடுப்பு மருந்துகள் ஆய்வில் இருக்கின்றன. எலி உள்ளிட்ட விலங்குகளுக்கு செலுத்தி இந்த மருந்தின் தன்மை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளன. அதன் அறிக்கையும் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்ய அனுமதி தரப்பட்டுள்ளது.  இதையடுத்து அந்த சோதனையை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தொடங்கி உள்ளன. 2 மருந்து நிறுவனங்கள் வெவ்வேறு தளங்களில் தலா 1,000 தன்னார்வலர்கள் குறித்து மருத்துவ ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன என்று கூறினார்.