ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் பேரணி

தூத்துக்குடி:

யிர்க்கொல்லி நோய்களை உருவாக்கி வரும்  ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடியில் இன்று  மாபெரும் முற்றுகை போராட்டம்  தொடங்கி உள்ளது.

மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பாக  நடைபெறும் இந்த பேரணியினர் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முற்றுகையிட முடிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் நாசகார ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் 100 நாட்களையும் கடந்து போராடி வருகின்றனர். இதன் காரணமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுக்காமல் தாமதித்து வருகிறது.

பல்வேறு வகையான போராட்டங்களை அம்மாவட்ட மக்கள் முன்னெடுத்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட முடியாது என நிர்வாகம் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடியில் இன்று மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பாக கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வணிகர்கள் கடைகளை அடைத்து எதிர்ப்பு

அதேவேளையில்  போராட்டக்குழுவைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர் தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான  மக்கள்  போராட்டத்துக்கு தூத்துக்குடி பகுதி வணிகர்கள் இன்று கடை அடைப்பு நடத்தி தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். தூத்துக்குடியில் மருந்து கடைகள் உள்பட அனைத்து கடைகளும்  அடைக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் எதிர்ப்பு

அதுபோல தூத்துக்குடி பகுதியில் மினி பஸ்கள், ஷேர் ஆட்டோக்களும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளன. இன்றைய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்கு மற்றும் அதை சுற்றி உள்ள மீனவர்களும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில்  ஆயிரக்கணக்கில் பொதுமக்கள்,  பெண்களும், இளைஞர்கள் மற்றும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

 

இந்நிலையில் தூத்துக்குடி முழுவதும் ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஸ்டெர்லைட்டை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மக்கள் போராட்டம் மற்றும் பேரணி  காரணமாக தூத்துக்குடி பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.