டெல்லி:
2020-21 கல்வியாண்டில் 179 தொழில்முறை கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளதாக ஏஐசிடிஇ தெரிவித்து உள்ளது.

கொரோனா தாக்கம் காரணமாக நடப்பு கல்வியாண்டில்,   இந்தியாவில் பொறியியல் கல்லூரிகள் மற்றும் வணிகப் பள்ளிகள் உள்பட 179 தொழில்முறை கல்லூரிகள் வேலை வாய்ப்புகள் இல்லாததால் மூடப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கான கவுன்சில் (AICTE )  வெளியிட்டுள்ள தகவல்களின்படி,   179 தொழில்முறை கல்லூரிகள்  மூடப்பட்டுள்ளன. இது கடந்த 9 ஆண்டுகளில் மிகவும் அதிகமானது என்றும், கடந்த கல்வி ஆண்டை விட இரு மடங்கு அதிகம் என்றும்  தெரிவித்து உள்ளது.
அதே வேளையில் நடப்பாண்டில், மேலும் 134 நிறுவனங்கள் புதிய படிப்புகளுக்கு அரசாங்கத்திடம் ஒப்புதல் பெறவில்லை என்றும் தெரிவித்திருப்பதுடன், தற்போதைய நிலையில், “வருடாந்திர ஒப்புதல் செயல்பாட்டில் ஒரு நடைமுறை மாற்றம் அவசியமானது என்பதால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.
கொரோனா ஊரடங்கு  அனைத்து துறைகளுக்கும் கடும் சவாலை ஏற்படுத்தி இருப்பதால்,  நாடு முழுவதும்,  762 நிறுவனங்களில் சில பிரிவு மூட  இருப்பதாகவும், அதன்படி சுமார் 70,000 இடங்கள் பாதிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளது.
ஏற்கனவே 2018ம் ஆண்டில் 89 கல்வி நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில்,   2019ம் ஆண்டு 92 நிறுவனங்கள் மூடப்பட்டு இருப்பதாகவும், நடப்பு கல்வியாண்டில் 179 தொழில் தொழில்முறை கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.
அதே வேளையில்,  இந்த கல்வியாண்டில் 164 புதிய நிறுவனங்கள் AICTE ஒப்புதலைப் பெற்று இருப்பதாகவும்,  மேலும் 1,300 கல்வி நிறுவனங்கள் மொத்தம் 140,000 இடங்களை அதிகரிக்க ஒப்புதல் கோரி இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

இந்தியா முழுவதும் பொறியியல் மற்றும் வணிகப் பள்ளிகள் உட்பட 9,691 தொழில்நுட்ப நிறுவனங்களை  அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கான கவுன்சில் (AICTE)  ஒழுங்குபடுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.