தமிழக ஆட்சியாளர்களின் லஞ்சம் காரணமாகவே 50ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடல்: ராமதாஸ்

சென்னை:

மிழக ஆட்சியாளர்களின் லஞ்சம் காரணமாகவே, கடந்த ஓராண்டில் தமிழகத்தில்  50,000 சிறு குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக பாமக தலைவர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து பாமக தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை கடந்த ஓராண்டில் மிகக் கடுமையான சரிவை சந்தித்திருக்கிறது.

வரலாறு காணாத வகையில் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 50,000 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன.  தமிழகத்தில் பெரும்பான்மை தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக திகழும் சிறுதொழில் நிறுவனங்களைக் கூட அரசு காப்பாற்றத் தவறியது கண்டிக்கத்தக்கது.

தமிழக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பில்,

2016-17ஆம் ஆண்டில் தமிழகத்தில் 2 லட்சத்து 67,310 ஆக இருந்த சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2017-18 ஆம் ஆண்டில் 2 லட்சத்து 17,981 ஆக குறைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஒரே ஆண்டில் 49,329 சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. இதனால் 5 லட்சத்து 19,075 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இது எளிதாக ஒதுக்கிவிட்டு செல்லும் அளவுக்கு சாதாரண பின்னடைவு அல்ல.

சிறு, குறுதொழில் நிறுவனங்களின் வளர்ச்சி குறித்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால் கடந்த 2007-08 ஆண்டு முதல் இன்று வரையிலான 12 ஆண்டுகளில் ஒருமுறை கூட இந்த அளவுக்கு சிறுதொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதில்லை.

ஏதேனும் காரணங்களால் சில நிறுவனங்கள் மூடப்பட்டாலும் கூட அதை விட பல மடங்கு புதிய தொழில் நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன.

2007-08 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு சிறு, குறு தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்திருப்பதே இதற்கு சாட்சியாகும்.

அதேபோல், கடந்த காலங்களில் வேலைவாய்ப்பு சில ஆயிரங்கள் குறைந்திருந்தாலும் கூட, ஒரே ஆண்டில் 5 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் பறிபோயிருப்பது இதுவே முதல்முறை.

சிறுதொழில் துறையின் வீழ்ச்சிக்கான காரணங்களில் பொருட்கள் மற்றும் சேவை வரி விதிப்பு முறை அறிமுகம் செய்யப்பட்டது ஒரு காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது.

ஆனால், அதையும் தாண்டிய முக்கியக் காரணம் அரசு நிர்வாகத்தில் நிலவும் ஊழல் தான் என்பதே உண்மை.

கடந்த ஓராண்டில் ரூ.11,000 கோடி முதலீடு சிறுதொழில் துறையிலிருந்து வெளியேறியிருக்கிறது. கடந்த 2009-10 ஆம் ஆண்டில் தொடங்கி கடந்த 10 ஆண்டுகளில் தொழில் முதலீடு தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறதே தவிர, ஓராண்டு கூட குறைந்ததில்லை.

அரசு நிர்வாகத்தில் நிலவும் ஊழல், ஆளுங்கட்சியினரின் நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் தான் சிறுதொழில் நிறுவனங்களின் முதலீடுகள் தமிழகத்தை விட்டு வெளியேறியுள்ளன.

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் செயல்பட்டு வந்த ஏராளமான பெருநிறுவனங்கள் பல்வேறு காரணங்களால் வெளியேறியதால், அவற்றை நம்பி அவற்றுக்குத் தேவையான உதிரி பாகங்களை தயாரித்து வந்த சிறு நிறுவனங்கள் வெளியேறியதும் பின்னடைவுக்கு காரணமாகும்.

பெருந்தொழில் நிறுவனங்களை தொடங்குவதற்காக தமிழகத்தில் செய்யப்படும் முதலீடுகளின் அளவு கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக மாறியிருக்கிறது.

கடந்த ஓராண்டில் மட்டும் வாகனங்கள் தயாரிப்பு தொழில்துறையில் ரூ.11,000 கோடி முதலீட்டிலான கியா மகிழுந்து ஆலை, ரூ.1,800 கோடி முதலீட்டில் அப்பல்லோ டயர்ஸ், ரூ.1,600 கோடி முதலீட்டில் ஹீரோ மோட்டார்ஸ் ஆலை, ரூ.350 கோடியில் அசோக் லேலண்ட் வாகன ஆலை, டிவிஎஸ் நிறுவனத்தின் சுந்தரம் பிரேக்ஸ் நிறுவனம், பாரத் போர்ஜ் நிறுவனம், சில தென் கொரிய நிறுவனங்கள் என தமிழகத்துக்கு கிடைத்திருக்க வேண்டிய ரூ.25,000 கோடி முதலீடுகள் ஆந்திராவுக்குச் சென்றுள்ளன.

2017 ஆம் ஆண்டில் தமிழகத்திற்கு வெறும் ரூ.1,574 கோடி மட்டுமே முதலீடாக வந்திருக்கிறது. தமிழகத்தில் தொழில் தொடங்க எந்த நிறுவனமும் தயாராக இல்லை என்பதைத் தான் தொழில் முதலீடு குறித்த புள்ளி விவரங்கள் உறுதி செய்கின்றன.

பெருந்தொழில் துறையில் செய்யப்படும் முதலீடுகள் குறைந்து வருவதால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய முடியாமல் தமிழக அரசு தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்த அதிர்ச்சியாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பது குறித்த உண்மையை தமிழக அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது.

சிறு தொழில் நிறுவனமாக இருந்தாலும், பெருந்தொழில் நிறுவனமாக இருந்தாலும் அதற்கு அனுமதி அளிப்பது முதல் ஒவ்வொரு நிலையிலும் சதவீதக் கணக்கில் ஆட்சியாளர்கள் கேட்கும் லஞ்சம் தான் தமிழகத்தில் முதலீடு செய்ய வருபவர்களையும் விரட்டி அடிக்கிறது.

லஞ்சம் வாங்கியே பழகிப்போய் விட்ட தமிழக ஆட்சியாளர்களால் சரிந்து போன முதலீட்டை சரி செய்வது என்பது சாத்தியமற்றது.

தொழில்துறை முதலீடுகளைப் பொறுத்தவரை இந்த அரசின் ஆட்சிக்காலம் பிணிக்காலம். இதில் உள்ள குறைகளை சரி செய்து பன்னாட்டு முதலீடுகள் தேடி வரும் வகையிலான புதியதோர் தமிழகம் படைக்கும் அரசு விரைவில் தமிழகத்தில் மலரும்; அப்போது தொழில்துறை வளரும்” .

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 000 industries due to bribery of Tamil Nadu rulers: Ramdas allegation, Closure to 50, தமிழக ஆட்சியாளர்களின் லஞ்சம் காரணமாகவே 50ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடல்: ராமதாஸ்
-=-