ண்டிகர்

ஞ்சாப் சட்டப்பேரவையில் சித்துவை பேச முதல்வர் அமரீந்தர் அழைத்ததாக மாநில காங்கிரஸ் பொதுச் செயலர் ஹரீஷ் ராவத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவஜோத் சிங் சித்து காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் தற்போது சட்டப்பேரவை கூட்டங்களில் அதிகம் கலந்துக் கொள்ளாமல் இருந்து வந்தார்.   இதற்கு அவருக்கும் பஞ்சாப் முதல்வருக்கும் இடையில் உள்ள பனிப்போர் எனக் கூறப்பட்டது.   இதனால் சித்து ஒதுங்கி இருந்ததாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் பஞ்சாப் மாநில அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட தடை மசோதாவை ஆதரித்து சட்டப்பேரவையில் சித்து உரையாற்றினார்.  இது மக்களிடையே மிகவும் ஆச்சரியத்தை உண்டாக்கியது.  இது குறித்து மாநில காங்கிரஸ் கட்சி பொதுச் செயலர் ஹரீஷ் ராவத் முதல்வரின் முயற்சியால் அவர் மீண்டும் சட்டப்பேரவையில் ஆர்வத்துடன் பேசியதாகத் தெரிவித்துள்ளார்.

நேற்று ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஹரீஷ் ராவத், “முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் சித்துவை அழைத்தார். அவர் சித்து சட்டப்பேரவையில் உரையாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.  அதன்படி நவஜோத் சிங் சித்து அவைக்கு வந்து அருமையாக உரையாற்றினார். அவர்களிடையே எவ்வித கருத்து வேற்றுமையும் இல்லை.  இருவரும் ஒற்றுமையாக உள்ளனர்” எனத் தெரிவித்தார்.

இதையொட்டி விரைவில் சித்துவுக்கு மீண்டும் அமைச்சரவையில்  இடம் கொடுத்து வலுவான துறை ஏதும் ஒதுக்கப்படலாம் எனக் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  ஆனால் இது குறித்து ராவத் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்.  இப்போது வேளான் சட்ட எதிர்ப்பு விவகாரத்தில் மும்முரமாக உள்ளதால் எதுவும் கூற முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

இந்த சமாதான முயற்சிக்குப் பின்னால் அகில இந்திய காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி உள்ளதாக கூறப்படுகிறது.  முதலில் சித்து காங்கிரஸ் கட்சியில் இணையும் போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்வர்  மற்றும் அப்போதைய செயலர் ஆஷா குமாரியை மீறி பிரியங்கா சித்துவை காங்கிரஸில் இணைத்தது குறிப்பிடத்தக்கதாகும்.

செய்தியாளர்களிடம் பேசுகையில் முதல்வர் அமரீந்தர் சிங் சித்து அவைக்கு வந்து நன்கு உரையாற்றியது தமக்கு மகிழ்ச்சியை அளித்ததாகத் தெரிவித்துள்ளார்.  மேலும் சித்துவின் பிறந்த நாள் குறித்து எதுவும் தெரியாததால் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என கூறி உள்ளார்.

சித்துவின் பிறந்த நாளை ஹரீஷ் ராவத் செவ்வாய் அன்று மிகப் பெரிய கேக் ஒன்றை வெட்டிக் கொண்டாடி உள்ளார்.  அதே வேளையில் சித்துவுக்கு முக்கியத்துவம் அளிப்பதை இரண்டாம் கட்ட தலைவர்கள் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.  தற்போது மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் நிலையில் உள்ள போது சித்துவுக்கு முக்கியம் அளிப்பதன் நோக்கம் புரியவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.