ஆலைக்கு இல்லாத பணம் புல்லட் ரெயிலுக்கு உள்ளதா? ஆந்திர முதல்வர் வினா

டப்பா

ந்திர மாநிலத்தில் இரும்பு ஆலை அமைக்க  பணம் தர இயலாத மத்திய அரசு புல்லட் ரெயிலுக்கு பணம் தருவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டி உளார்.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் ஒரு இரும்பு ஆலை அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது.  அதற்காக ஆந்திர அரசு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தது.   சுமார் ரூ.1 லட்சம் கோடி செலவில் அமைக்கப்படும் இந்த இரும்பு ஆலையின் மூலம் மாநிலத்தின் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்,  மேலும் வருவாயும் கிட்டும் என மாநில அரசு தெரிவித்தது.

ஆனால் இந்த திட்டத்துக்கு மத்திய அரசு முதலில் அளித்த ஆதரவை தற்போது விலக்கிக் கொண்டுள்ளது.    பொருளாதார ரீதியாக இந்த இரும்பு ஆலை லாபம் தராது என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.    அத்துடன் நாடு தற்போது உள்ள பொருளாதார நிலையில் இது போன்ற திட்டங்களுக்கு  செலவிட போதுமான நிதி வச்தி இல்லை என தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  அவர், “இந்த ஆலை அமைக்கத் தேவையான இடம், தொலை தொடர்பு வசதி, சாலைகள், மின்சாரம்,நீர் உள்ளிட்ட அனைத்தையும் அளிக்க மாநில அரசு ஒப்புக் கொண்டுள்ளது.   இது குறித்து ஆறு முறை மத்திய அரசை சந்தித்து விவாதம் நடத்தி உள்ளோம்.   ஆனால் தேவை இல்லாமல் எங்கள் கோரிக்கையை அரசு நிராகரிக்கிறது.   பாஜக அரசுக்கு ஜனார்த்தன் ரெட்டியையும் ஜெகன்மோகன் ரெட்டியையும் திருப்திப்படுத்த மட்டுமே நேரம் உள்ளது.

மத்திய அரசு இப்போது நிதிநிலையை காரணம் காட்டுகிறது.   புல்லட் ரெயிலுக்கு கடன் வாங்கி செலவழிக்கும் அளவுக்கு வசதி படைத்த மத்திய அரசிடம் ஆந்திர இரும்பு ஆலை அமைக்க பணம் இல்லையா?    நாங்களும் மற்ற கட்சிகளும் இணைந்து மத்திய அரசின் இந்தப் போக்கை எதிர்த்து போராட்டம் நடத்த உள்ளோம்.” என அறிவித்துள்ளார்..

வரும் 29ஆம் தேதி அன்று ஆந்திராவில் உள்ள ஒய் எஸ் ஆர் காங்கிரஸ், இடது சாரிகள் மற்றும் ஜன சேனா உள்ளிட்ட பாஜக தவிர்த்த எதிர்க்கட்சிகள் கடப்பா மாநிலத்தில் கடையடைப்பு நடத்த உள்ளன.