சென்னை:
முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து விளக்கம் தர வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வரின் உடல்நிலை பற்றி முழு விவரம் அளிக்க வேண்டும் என ஐகோர்ட் கூறியுள்ளது
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து சமுக சேவகர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த பொதுநல வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, கடந்த 22-ந்தேதி சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்க லண்டனில் இருந்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவருக்கு என்ன நோய்? என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
j-jayalalithaa
முதல்-அமைச்சர் உடல் நலம் குறித்து அவ்வப்போது வதந்திகளும் பரவிக்கொண்டே இருக்கிறது. இதனால், பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் அவ்வப்போது, முதல்-அமைச்சர் நன்றாக இருக்கிறார் என்று செய்திக் குறிப்பை மட்டும் வெளியிட்டு வருகிறது. புகைப்படம், வீடியோ ஆதாரங்களை வெளியிடுவதில்லை. இதனால் வதந்திகள் பரவி பொதுச்சொத்துக்களும் சேதப்படுத்தப்படுகிறது.
பொதுமக்களின் நலன் கருதி, முதல்-அமைச்சரின் உடல் நலம் குறித்த உண்மை நிலையை அறிக்கை யாக வெளியிடவேண்டும் என்று கூறியிருந்தேன்.  இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த பொதுநல வழக்கு, பொதுநல  வழக்குகளை விசாரிக்கும்  நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் , முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்த அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் தமிழக அரசுக்கும், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்துக்கும்  உத்தரவிட்டனர்.