குழந்தைகளுக்கான விடுமுறை அறிவிப்பில் மாற்றமில்லை: உறுதிபடுத்திய முதல்வர்

மதுரை: கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக தமிழகத்தில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு மார்ச் 16ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை என அறிவித்ததில் மாற்றமில்லை எனவும், அந்த அறிவிப்பு அப்படியே நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார் முதல்வர் பழனிச்சாமி.

தமிழகத்தில் கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களான குமரி, நெல்லை, கோவை, திருப்பூர், நீலகிரி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் எல்கேஜி தொடங்கி 5ம் வகுப்பு வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த உத்தரவை நிறுத்தி வைக்கப்போவதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்திருந்தது. முந்தைய அறிவிப்பால் நிம்மதியடைந்த பெற்றோர்கள், பிந்தைய அறிவிப்பால் மீண்டும் கலக்கமுற்றனர்.

எனவே, அனைவர் மத்தியிலும் குழப்பம் நிலவிய நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிச்சாமி, “எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கான விடுமுறை அறிவிப்பில் மாற்றமில்லை எனவும், அந்த அறிவிப்பு அப்படியே நடைமுறைப்படுத்தப்படும்” எனவும் தெரிவித்தார்