சென்னை: உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி லட்சுமணன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் நேற்று இரவு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். முன்னதாக அவர் சட்ட ஆணைய தலைவராகவும், முல்லைப்பெரியாறு ஆய்வுக் குழுவிலும் இருந்துள்ளார்.

இந் நிலையில் நீதிபதி லட்சுமணன் குடும்பத்தினருக்கும், நீதித் துறையினருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறி உள்ளதாவது: தனது திறமையான வாதத்தால் பல வழக்குகளில் வெற்றி கண்டவர் முன்னாள் நீதியரசர் லட்சுமணன். பொது இடங்களில் புகைப் பிடிப்பதற்கு தடை விதித்து தீர்ப்பளித்தவர் என்று தெரிவித்துள்ளார்.

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:  பொது இடத்தில் புகைபிடிக்கத் தடை என்பது போன்ற சிறப்பு மிக்க தீர்ப்புகள் பலவற்றை வழங்கிய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு.A.R.லட்சுமணன் அவர்கள் இன்று காலமான செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன் என்று பதிவிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.இலட்சுமணன் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது:

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மாண்புமிகு ஏ.ஆர்.இலட்சுமணன் அவர்கள் மறைந்தார்கள் என்ற செய்தி கேட்டு தாங்க இயலாத அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.தமிழ் மொழி மீதும், தமிழ்நாட்டின் உயர்வின் மீதும் எல்லையற்ற ஆர்வமும் அக்கறையும் கொண்டிருந்த ஏ.ஆர். இலட்சுமணன் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் புகழ்மிக்கத் தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார்.

முல்லைப் பெரியாறு பென்னி குயிக் அணையின் வலிமை குறித்தும், தமிழ்நாட்டின் உரிமைகள் குறித்தும் ஆய்வு செய்ய நீதியரசர் ஆனந்த் அவர்கள் தலைமையில் உச்சநீதிமன்றம் ஒரு குழு அமைத்தபோது, தமிழ்நாட்டின் பிரதிநிதியாக நீதியரசர் ஏ.ஆர்.இலட்சுமணன் நியமிக்கப்பட்டார்.

கடுமையாக உழைத்து, ஆவணங்களை எல்லாம் ஆய்வு செய்து தமிழ்நாட்டின் உரிமை குறித்தும், அணை வலுவாக இருக்கிறது என்றும், புதிய அணை கட்டத் தேவை இல்லை என்றும் அவர் கொடுத்த அறிக்கைதான் தமிழ்நாட்டுக்கு நீதியை நிலைநாட்டியது.தமிழ் மொழி மீதும், இலக்கியங்கள் மீதும் மிகுந்த பற்று கொண்டவர். தமிழ் இலக்கிய மாநாடுகளில், விழாக்களில் பங்கேற்று உரையாற்றுவார். என் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். பலமுறை அவரது இல்லத்துக்குச் சென்று, அவரைச் சந்தித்து உரையாடி இருக்கிறேன். காரைக்குடி கம்பன் கழகத்தின் தலைவராகவும் இருந்தார். இருமுறை கம்பன் விழாவுக்கு என்னை அழைத்துப் பேச வைத்தார்.

அவரும், அவரது துணைவியார் திருமதி மீனாட்சி ஆச்சி அவர்களும் இணைபிரியாத இலட்சியத் தம்பதிகள் ஆவார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆகஸ்டு 25 ஆம் தேதி, அவரது துணைவியார் மீனாட்சி ஆச்சி மறைந்தார்கள். அந்தப் பிரிவைத் தாங்க முடியாத அதிர்ச்சியால் அவரது இதயம் இன்று செயலிழந்துவிட்டது.

ஒரே நேரத்தில் தாயையும், தந்தையையும் இழந்து தாங்க முடியாத துக்கத்தில், வேதனையில் துடிக்கும் அவரது மகன் வழக்கறிஞர் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மிகுந்த துயரத்துடன் எனது ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி திருமிகு. ஏ.ஆர். லட்சுமணன் அவர்கள் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். கர்நாடகா, ராஜஸ்தான், ஆந்திர மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக சிறப்பாக பணியாற்றியவர். இந்திய சட்ட ஆணையத்தின் தலைவராக இருந்து சிறப்பான பரிந்துரைகளை செய்தவர்.

தேவகோட்டையை பிறப்பிடமாகக் கொண்ட இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தொழிலை தொடங்கி, படிப்படியாக உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பொறுப்புகளை வகித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர்.

இவரது இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் அவர்களது மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நீதிபதி லட்சுமணன் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் தமிழை உத்தியோகப்பூர்வ மொழியாக பயன்படுத்த பரிந்துரைத்தவர், பல வரலாற்று தீர்ப்புகளை வழங்கியவர் என்று குறிப்பிட்டுள்ளார்.